ஞாயிறு, 1 ஜனவரி, 2017

சிறுகதை

இரண்டாம் பால்
--------------
ஆரணிவிளை லாசர்

   மழை இருட்டிக் கொண்டு வந்தது. சுள்ளென்று அடித்த வெயில் மாய்ந்து விட்டது.  கருமேகங்கள் ரப்பர் மரங்களைத்  திரையிட்டு மறைத்துக் கொண்டன. இன்னும் சிறிது நேரத்தில்  வானம் பெருக்கெடுத்துக் கொட்டும்  போலிருந்தது. திடீரென்று, பட படவென இடிச்சத்தம்.  மைனாக்களும், நங்கிணாச்சிக் குருவிகளும்  கூடுகள் நோக்கி விரைந்து கொண்டிருந்தன.
    பால்பெரை மிஷின் பக்கம் நின்று கொண்டிருந்த வசந்தி பதறி விட்டாள். இடிச்சத்தம் தனது அடி வயிற்றில் விழுந்தது  போலிருந்ததது அவளுக்கு. குப்பென வியர்த்துக் கொட்டியது. 'நடு உச்சைக்கு இல்லியா மழை கறுத்து வருது... கங்காணி இனி என்ன சொல்லுதாரோ...' உள்ளுக்குள் உதறல் எடுத்தது  அவளுக்கு. 
 
"வசந்தீ... மழை கறுத்து வருது... ரெண்டாம் பால் எடுக்கணும்..." தூரத்தில் நின்று கொண்டிருந்த  கங்காணி சத்தமாகச் சொன்னார்.
அவள் நினைத்தது  போலவே கங்காணியிடமிருந்து உத்தரவு வந்துவிட்டது. கோபமாக வந்தது  அவளுக்கு.
"எனக்கு  கல்லியாண வீட்டுக்குப் போகணுமிண்ணு காலத்த வேலைக்கு வந்தவுடனேயே சொன்னனில்லிலா.."  பால்பெரையிலிருந்து வெளியேவந்து   கங்காணியை நோக்கி சத்தமாகவே   பதில்  சொன்னாள்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது.... பால வெள்ளம் கொண்டு போச்சுண்ணா மொதலாளி விடமாட்டாரு தெரியுமில்லியா..." கங்காணி திருப்பி இவளிடம் கத்தினார்.

"இல்ல எனக்கு இண்ணக்கி கட்டாயம் கல்லியாண வீட்டுக்குப் போகணும்.."

"நான் சொல்ல வேண்டிய சொல்லியாச்சி.... மொதலாளி்க்க கொணம் தெரியுமில்லியா...?" என்றார் கங்காணி மறுபடியும்.

அதன் பிறகு வசந்தி எதுவும் பேசவில்லை... அவள் மீண்டும் பால்பெரைக்குள் சென்று   மிஷின்  பலகையோடு  சாய்ந்து நின்று விட்டாள். அவளுக்கு ஆத்திரமாக வந்தது. காலை தரையில் ஓங்கி உதைத்தாள்.  பின்னர் கங்காணி நின்ற திசையைப்  பார்த்தாள். கங்காணி   தூரத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறிப்  போவது தெரிந்தது.

'என்னக் கொண்டு ஒண்ணும் இண்ணைக்கி  ரெண்டாம் பால் எடுக்க முடியாது...எனக்கு கல்லியாண வீட்டுக்குப் போகணும்...' என்று தனக்குத் தானே முனங்கினாள்..
"ணேய்... நீ ரெண்டாம் பால் எடுக்குதியோ இல்லியோ... எனக்கு சமயத்துக்கு வேலைய முடிச்சிட்டு வீட்டுக்குப் போகணும்..."
மிஷினின் அருகில் நின்ற ஷீட் அடிக்காரன்  வர்க்கீஸ் சொன்னதைக் கேட்டு அவன் பக்கம் திரும்பிய வசந்தி, அவன் மீது கோபம் கொப்பளிக்கும் பார்வை பார்த்தாள்.

"எனட்ட மொறச்சிட்டு என்ன புரயோஜனம்... நீ கல்லியாண வீட்டுக்கு போகலயிண்ணா மொதலாளிக்கு வயிற்று எளக்கமா வரும்...?  மழைக்கு  முன்ன சட்டுண்ணு  ஷீட்டுகளை அடிச்சி இடுவோம். அதுக்கப்பெறவு நீ ரெண்டாம்  பால் எடுக்கப் போகுதியோ.. இல்ல கல்லியாண வீட்டுக்கு போகுதியோ நான் அறிய வேண்டிய அவசியம் இல்ல... எனக்கிட்ட கங்காணி ரெண்டாம்  பால் எடுக்கச்  சொல்லவும் இல்ல..."  என அப்பாவி போல் முகபாவனையை வரவழைத்துக் கொண்டு சொன்னான் வர்க்கீஸ்.

அவள் எதுவும் பேசாமல்   மிஷினின் பின் பகுதியில்  சென்று நின்று கொண்டாள். வர்க்கீஸ் அடுத்த  உறைபால் ஷீட்டை  டிஸ்சிலிருந்து இளக்கியெடுத்து   மிஷினில் வைத்து சக்கரத்தை சுழற்றத் தொடங்கினான். கடகடவென சப்தம் எழுப்பிக் கொண்டு மிஷினின் இரும்பு ரோலர்கள் உருண்டன. மிஷினின் பின்னால் நின்று கொண்டிருந்த வசந்தி,  தடிமன் குறைந்து தண்ணீருடன்  நீளமாய் வெளியேவரும் ஷீட்டைப் பிடித்து அருகில் இருக்கும்  இரண்டாவது  மிஷினின்  திட்டில் வைத்தாள். அப்படியே ஒவ்வொரு உறைபால்  ஷீட்டுகளும் மிஷினில் ஏறிக் கொண்டிருந்தன.

கிழக்கில் கம்பீரமாய் காட்சியளிக்கும்   முகளி மலையின் அடிவாரத்தில்  பரந்து விரிந்து கிடக்கிறது அந்த ரப்பர்  தோட்டம். குறுக்கிலும், நெடுக்கிலும் சீரான இடைவெளியில் அணிவகுத்து நிற்கும் சிப்பாய்களைப் போல்   நெடு..நெடுவாய்   நிற்கின்றன ரப்பர் மரங்கள்.  பல வருடங்களாய்  பால்வடிப்புக் கண்டிருக்கும் மரங்கள்;  உடம்பில் நிறையேவே காயங்களைத் தாங்கி நிற்கின்றன. 

 முகளிமலையின் பின்னாலிருந்து கதிரவன் தலைகாட்ட எத்தணிக்கும்முன்பே   திட்டுத் திட்டாய் படர்ந்து கிடக்கும் இருளினூடே, நரிச்சப்பைகளும், கலியாலன் பச்சிலைகளும்,  மூஞ்சட்டைச் செடிகளும்  வளர்ந்து கிடக்கும் வழிப்பாதை வழியாக   சைக்கிளிலும், பைக்குகளிலுமாக தோட்டத்திற்குள் நுழைவார்கள் பால்வடிப்புக்காரர்கள். கடும் குளிரும், கொசுக்களும் நிரம்பவே தாக்கும்.   தோட்டத்திற்குள் நுழைந்த கையோடு ஸ்டோர் ரூமுக்குச் சென்று  அணிந்திருக்கும் ஆடைகளை மாற்றி விட்டு ரப்பர் பால்கறை படிந்த பால்வடிப்பு ஆடைகளை அணிந்து விட்டு  ஒன்றிரண்டு பீடிகளையோ அல்லது  சிகரெட்டுகளையோ புகைத்துவிட்டு,  அமர்ந்திருக்கையில்   கங்காணி ராமேந்திரன் பெயர் பதிவு செய்து, பால்வடிப்புக் கத்தியும், வாளியும், ஒட்டுப்பால் கூடையும்  எடுத்துக் கொடுப்பார்.  ஏகதேசம்  காட்டில் பால்வடிப்புக்காரர்கள்  இறங்கும் போது கதிரவன் முகளியின் பின்னாலிருந்து மெல்ல எட்டிப்பார்த்து  கதிர்களை  விட்டிருக்கும். 

குளிரில் நடுங்கி கழுத்து வழியாக சேலையைச் சுற்றிக்கொண்டு தோட்டத்திற்குள் வந்திருப்பாள் வசந்தி. அவளது வீட்டிலிருந்து நடை தூரம்தான் தோட்டம்.    விடிகாலையில் வேலைக்கு  வந்து விடும் அவளுக்கு  வேலை.. வேலை.. ஒரே வேலைதான்.   காலையில் முதல் வேலையாக அடுப்பில் தீ மூட்டி  கடும் தேயிலையும், துண்டு அவித்த மரவள்ளிக்கிழங்கும் தயார் செய்து  பால்வடிப்பு இளைவேளையில் வரும் பால்வடிப்புக்காரர்களுக்குக் கொடுக்க வேண்டும். பின்பு ஈரமும்,  அமிலநெடியும்  நிறைந்து கிடக்கும் பால்பெரையில்  வேலை. பால்பெரை,  பாலைப் பதப்படுத்தி ஷீட்டாக மாற்றும் கொட்டகை.  இரண்டு இரும்பு ரோளர் மெஷின்களுடன்  இருள் கவிந்து கிடக்கும்  கொட்டகை அது.  பால்பெரையில்  பால்வடிப்புக்காரர்கள்  வாளிகளில் சுமந்து  வரும் பாலை,  அரிப்புகள் வழியாக அரித்து சுத்தப்படுத்தவற்கு அவள்  உதவ வேண்டும். அதன்பிறகு  பார்மிக் அமிலம் கலந்து பாலை  உறைய வைப்பதற்காக அலுமினிய  டிஸ்களை தயாராக  எடுத்து வைக்கணும்.  பாலை டிஸ்களில் ஊற்றுவதற்கு ஒத்தாசையா நிற்கணும்.   அப்புறம்  மிஷினில் ஷீட் அடிக்கும்,   ஷீட் அடிக்காரர்களின்  கூட உதவிக்கு  நிற்கணும். பால்வடிப்புக்காரர்களில் யாராவது ஒருவர்தான் சுழற்சி முறையில் ஷீட் அடிக்கவும் நிற்பார்கள். இதற்கிடையே  பசியெடுத்துக் களைத்து நிற்கும் பால்வடிப்புக்காரர்களுக்கு  கஞ்சியும், தேங்காய் சம்மந்தியும் தயார்  செய்து   பரிமாற வேண்டும். அப்புறம்  வாளிகளையும்,  டிஷ்களையும்  ஒவ்வொன்றாய்  தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி  அடுக்கி வைக்கணும். கால் வழியாக ஏறும் ஈரம் உச்சந்தலையைத் தாக்கும். 
கடைசியில், கனத்த இருளும், தீ வெக்கையும்  விரவிக்கிடக்கும்  புகையறையில்  ஷீட்டுகளை  உலரப் போடணும். 

மரங்களில் தாவி   கூரையில் தொப்..தொப்... என குதித்து  மறியும்  குரங்குகள்; அவைகளையும்  கல்லெறிந்து துரத்த வேண்டும்.  வீட்டில் அடுப்பெரிக்க விறகு இல்லையெனில், ரப்பர் காட்டில் காய்ந்து விழுந்து கிடக்கும்  சுள்ளிகளை சேகரிக்க வேண்டும்.  இதற்கிடையே இரண்டாம் பால் சேகரிக்கச்  சொன்னால்  அதையும் செய்ய வேண்டும்.   முதுகுத் தண்டு  ஒடிந்து விடும் போலிருக்கும் அவளுக்கு.   ராத்திரியான கால்களிலும், கைகளிலும் முள் குத்தியது போல் சுள்..சுள்ளென காந்தலும் வலியும் பரவி உயிர்க் கூட்டைக் கலைத்துப் போடும். 

இப்போது பனிக்காலம்... எதிர்பாராத நேரங்களில்  மழையும் பெய்துவிடுகிறது. ரப்பர் மரங்கள் பால் பெருத்து நிற்கின்றன. பால்வடிப்புக்காரர்கள் மரங்களில் கத்தியை வைத்தவுடன்  பால் பெருக்கெடுத்துப் பாய்கிறது.  மரங்களில் கட்டப்பட்டிருக்கும் சிரட்டைகளில் வடிந்து தேங்கும்   முதலாம் பாலை பால்வடிப்புக்காரர்கள்  சேகரித்தப் பின்னர்,  மீண்டும் வடிகிறது இரண்டாம் பால்.  முதலாம் பால் ஷீட்டாகிறது;  அதற்கு நல்ல விலை. இரண்டாம் பாலை சேகரித்து எடுத்தால் அதுவும் ஷீட்டாகிவிடும்; அது எடுக்கப்பபடவில்லையெனில்   சிரட்டைகளில் உறைந்து  ஒட்டுப்பாலாகிவிடும்.   ஒட்டுப்பாலுக்கு ஷீட்டைப் போல் மதிப்பும் இல்லை;  விலையும் இல்லை. ஒட்டுப்பால் பெரும்பாலும்  மண் தரையில் கொட்டப்பட்டு மிதிபட்டுக் கிடக்கும்.  இரண்டாம் பாலுக்குத் தான் எத்தனை பிரச்னை...?
மழை நாள்களென்றால்  இரண்டாம் பாலை மழை நீர் அடித்துச் சென்றுவிடும்.   
இரண்டாம் பால் மழை நீரில்  அடித்துச் செல்லப்பட்டால்  முதலாளிக்கு பணம் இழப்பு. அதனால் தான் மழை கறுக்கும்முன் இரண்டாம் பாலை எடுத்துவிட நிர்பந்திக்கிறார்கள். இரண்டாம் பாலை சேகரிக்க பால்வடிப்புக்காரர்கள் நிற்பதில்லை. அந்த வேலை எப்போதும் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வரும் பெண்களுக்குத்தான்.

ஈரம் எளிதில் விலகிப்போகாத கதர் சேலையை உடலோடு உடலாக  இறுக்கிக்கட்டிக் கொண்டு  வேலை... வேலை என இயந்திரம் போல்  ஆகிவிட்ட  வசந்தியின்  வலியை யார் புரிந்து கொள்கிறார்கள்...?  'ஒனக்கு  குடும்பமா... குட்டிகளா...' எனக் கேட்டுக் கொண்டே அவள் மீது கங்காணியாலும், சக வேலையாள்களாலும்  வேலைகள் சுமத்தப்படுகின்றன.
இளம் வயதில் காதலில் ஏமாற்றப்பட்டாளோ.. அல்லது  யாரும்  கரம் பிடிக்க வரவில்லையோ முதிர் கன்னியாகவே  வயதான தாயுடன் வாழ்க்கை நகருகிறது.  தன்னிடம் கூடுதல் வேலைகளைத்  திணிக்கிறவர்களிடம்  ஆவேசமாகக் கத்துகிறாள். பல நேரங்களில் அழுதும் விடுகிறாள்.  தானும் ரப்பர் மரத்தின் இரண்டாம் பால் போலத்தானே..?  பெண் என்பவளும் இரண்டாம் பால் தானே..? தனது வலி யாருக்குப் புரிகிறது...? என்று புலம்புவாள்.   கல்லியாண வீடு,  பால்காய்ப்பு வீடு, சடங்கு வீடு,  என்று  அதிகமாய் எங்கும் செல்வதில்லை அவள்.   இத்தகைய வீடுகளுக்கு  தன்னை அழைப்பவர்களில் பலரும் வெறும்  சம்பிரதாயமாகவோ அல்லது  கடமைக்காவோ  அழைக்கின்றனர் என்பது போல் உணருவாள்.

இப்போது  வீட்டின் அருகே உறவுக்காரப்  பெண்ணின் கல்லியாணம் வந்து விட்டது. 'வசந்தியக்கா  கல்லியாணத்துக்கு கண்டிப்பா வரணும்...' என்று  அந்த மணப்பெண் திருப்பத் திரும்ப அழைத்தது,  மட்டுமல்லாமல் புதுசாரியும்   ரவிக்கைத் துணி  ஒன்றையும் தந்தது.   கல்லியாணத்திற்கு போய்த் தான் ஆக வேண்டும். சந்தோஷமாகக் கூட இருந்தது அவளுக்கு.  புதுசாரிக்கு மேட்சாக  இரவு வெகுநேரம் வரை கண்விழித்திருந்து   ரவிக்கைத்  தைத்தாள்.

'கிறிஸ்தவக் கோயில்   கெட்டுத்தான்;  தாலிக்கட்டு  முடிய எப்படியும் மத்தியானம்  ஆகிவிடும்.  ஒரு நாள் சம்பளத்தை இழக்கக் கூடாது.  வேலை முடிந்து விட்டு  கல்லியாண வீட்டிற்குப் போகலாம்' என்று நினைத்து  வேலைக்கு வந்தவளுக்கு இரண்டாம் பால் எடுக்கச்  சொன்னது இடைஞ்சலாகி விட்டது.

ஷீட்டுகள் அடித்து முடிக்கப்பட்டபின் மனதிற்குள் ஒரே குழப்பம். கங்காணியின் பேச்சை மீறி ரெண்டாம்  பால் எடுக்காமல் கல்லியாண வீட்டிற்கு போய்... மழையில்   பாலை,  தண்ணீர்  அடித்துச் சென்று  விட்டால்...?    நாளை  வேலை கிடைக்குமா..?  ஒரு மணி நேரம் வேலைக்கு தாமதமாகி வந்துவிட்டாலே சம்பளப் பிடித்தம் செய்து விடுவார் முதலாளி. இந்த நிலையில்   முதலாளின் குணம் தெரியுமா  என்று வேறு கங்காணி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  இரண்டாம் பால் சேகரிக்கச் சென்றால்  கல்லியாண வீட்டிற்குச் செல்வது அவ்வளவுதான்.  கட்டற்றுப் போனது அவள் மன ஓட்டம். என்ன செய்வதென்று தெரியவில்லை.  அமிலம் ஊற்றப்பட்ட பாலைப்  போல முகம் உறைந்து போனது.  அழுகை வருவது போல் இருந்தது.  சேலை முந்தியை எடுத்து முகத்தையும், முன் கழுத்தையும் அழுத்தித் துடைத்துவிட்டு  சிறிது நேரம் அப்படியே நின்றவள்,  வர்க்கீசின் முகத்தைப்  பார்த்தாள். அவன் தனது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். பின்பு ஒரு முடிவாக  இரண்டாம் பால் எடுக்கும் வாளியை கையில் எடுத்துக் கொண்டு பால்பெரையை விட்டு வெளியே  நடந்தாள். ஈரச்சேலை காலோடு காலாக ஒட்டியது. குனிந்து சேலை தும்பைப்   பிடித்து முறுக்கிப் பிழிந்தாள்.  அப்படியே   நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை. இருட்டிக் கிடந்த வானம்  கொஞ்சம் பிரகாசமாய் மாறியிருந்தது.

"வர்க்கீ...  அண்ணா  வானம் வெளுத்திருக்கு... மழை போச்சு..." என்றாள் உற்சாகம் ததும்ப...

"கங்காணி ரெண்டாம் பால் எடுக்கச் சொன்னாரு இல்லியா... எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுகிட்டு கல்லியாண வீட்டுக்குப் போ..." என்றான் வர்க்கீஸ்.

அவள் கண்களை நாலாபுறமும் அலையவிட்டவாறே காங்காணி நிற்கிறாரா என்று பார்த்தாள். பின்னர் "பைக்கில ஏறிப் போன  கங்காணி திரும்பி வரல்ல போலிருக்கு..." என்றாள் குரல் கம்மியவாறு.

"நான்  போண் போடுதேன்..." என்றான் வர்க்கீஸ்.

வசந்திக்கு உற்சாகம் பீறிட்டு வந்தது.   புதுசாரியும், ரவிக்கையும் மனக்கண் முன் வந்தன.

வர்க்கீஸ், அருகில் உடைகள்  வைக்கப்பட்டிருந்த ஸ்டோர் ரூமில் சென்று அவனது செல் போனை எடுத்துவந்து  கங்காணியின் போன் எண்களை அழுத்தி காதில் வைத்தான்.  எதிர் முனை சற்று நேரம் அமைதியாக இருந்தது. பின்னர்  'நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்' என்று பதில் சொன்னது.
மறுபடியும் அழைத்தான்... திரும்பத் திரும்ப அழைத்தான். அதே பதில் தான் வந்தது.

வசந்தி, வர்க்கீஸின் முகத்தையே பார்த்தாள். அவளுக்கு ஏதோ புரிந்தது.

வர்க்கீஸ் உடைகளை மாற்றிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு "கங்காணி யாது  உடைப்புல நிக்குதாரோ...போணு  போகல்ல..." என கூறிக் கொண்டு  அங்கிருந்து வெளியேறினான்.

வசந்தி வாளியை ஏந்திக் கொண்டு  முதல் ரப்பர் மரத்தின் சிரட்டையை நோக்கி குனிந்தாள். சிரட்டையில் கடைசித் துளியாக அவள் கண்ணீர் துளி விழுந்தது.

********************