செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சை க் கி ள்   பை ய ன்



 அதிகாலைப் பரபரப்பில் இருந்தது குலசேகரம் அரசுமூடு சந்திப்பு.  ரப்பர் மரம் ஏற்றும் பிளாட் லாரிகளில் வாள், கோடாரி, வெட்டுக்கத்தி, வடம், பானை, அரிசி, மரவள்ளிக் கிழங்கு, பான்பராக், பீடிக்கட்டு எடுத்துக் கொண்டு ஆண், பெண் தொழிலாளர்கள் ஏறிக் கொண்டிருந்தனர்.
      "அண்ணா கிழங்கு வாங்கலியா" என்று மரவள்ளிக்கிழங்கு விற்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணும் அவளுக்குப் போட்டியாக கிழங்கு விற்கும் அவளது அண்ணிக்காரியும் அப்பகுதியில் செல்வோரை அழைத்துக் கொண்டிருந்தனர். அடகுக் கடை செட்டியார் அரசுமூட்டுப் பிள்ளையார் கோயிலில் மணி அடித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்
     மரைக்கார் டீ கடையில் எப்போதும் போலவே டீ, சிகரெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது. ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், மண்வெட்டி வெட்டுத் தொழிலாளர்கள் என பலர் கடை முன்பு குவிந்திருந்தனர். பார்சல் டீ வாங்கிச் செல்வோர் குறைவாகத் தான் இருந்தனர்.
    செய்தித் தாள் பார்சல்கள் வந்திறங்கும் 'செல்லப்பா டெக்டைல்ஸ்' வராண்டா காலியாகவே இருந்தது. இன்னும் செய்தித் தாள் பார்சல்கள் வந்து சேரவில்லை. வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினான் கணேசன். சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு "பார்சல் இன்னும் வரலியா" என்று அங்கு அமர்ந்திருந்த சப் ஏஜண்டுகளிடம் கேட்டான். . "வந்திருந்தா இங்க இருக்காதா.. எங்க இறக்கிட்டு இருக்கானுவளோ.." அங்கு அமர்ந்திருந்த இருவரும் சலிப்பான குரலில் சொன்னதைக் கேட்ட கணேசன் பதட்டமானான். அவன் முகம் அந்த அதிகாலையிலும் வியர்த்தது.
கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு மாணவன். கல்லூரிக்குச் செல்லும் முன்பு செய்தித் தாள் விநியோகிக்கும் சைக்கிள் பையன்.. லைன் பாய்.
  பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்த கணேசன், ஏதோ எண்ணை தட்டி காதில் வைத்தான். "சரவணனா.. நான் கணேசன் பேசுறேன் டேய்... பேப்பர் பார்சல் இதுவரை வரல.. இண்ணக்கி செமஸ்டர் பரிட்சை தொடங்குது.. பார்சல் இனியும் பிந்திச்சுன்னா பரிச்சை எழுதப் போவ முடியாது. இண்ணக்கியுள்ள பேப்பரை நீ தான் கொடுக்கணும் வருவியா..?"
"இண்ணக்கி சைமன் அண்ணனுக்க வேனுல கிளியா ஆற்றுவா பள்ளிக்கு வருலாமிண்ணு சொல்லியிட்டேன். நாளைக்கு வேணுமின்னா வரலாம் டேய்." "இண்ணக்கி வேற யாரையாவது கூட்டிட்டு போகச் சொல்லுடே..."
 "சைமன் அண்ணன்கிட்ட பேசியிட்டு ஒன்ன விளிக்கிறேன்." போனை துண்டித்தான். கணேசனுக்கு வயிறு கலங்குவது போல் இருந்தது.
    இதற்குள் பேப்பர் ஏஜன்ட் மகாதேவன் பேப்பர் பார்சில் வந்திறங்கும் பாயின்டுக்கு வந்திருந்தார். மகாதேவன் ரொம்ப காலமாக பேப்பர் ஏஜன்டா இருக்கிறார். பழைய பியூசி காரர், கடும் உழைப்பாளி, வயசுக் காலத்திலயும் அதிகாலையில் வயலுக்குப் போய் 25 மூடு வாழைக்காவது தண்ணீர் இறைத்து விட்டுத் தான் பேப்பர் பாயின்டுக்கு வருவார். பத்துக்கு மேற்பட்டோர் அவரிடம் சப் ஏஜண்டுகளாகவும், சைக்கிள் பையன்களாகவும், 'சைக்கிள் முதியவர்களாகவும்' பணி செய்கின்றனர். அவருடன் யாராவது பேச்சுக் கொடுத்தா இனியெல்லாம் இந்தத் தொழிலை வச்சி நடத்த முடியாது. வேலைக்கு ஆள் கிடைக்கல.. வேலைக்கு வாறவங்களும் வசூல் பணத்தைத் தராம இழுத்தடிப்பு செய்யுறாங்க... என்பார். தினத்தந்தி, தினமணி, தினமலர், தினகரன், தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், மலையாள மனோரமா, மாத்ரூபூமி, கேரளா கௌமுதி என அவரிடம் இல்லாத நாளிதழ்களும், சஞ்சிகைகளும் கிடையாது.
  இருள் மெதுவாக வடிந்து கொண்டிருந்து. கணேசன் நிலை கொள்ளாமால் நின்றிருந்தான். போனை எடுத்து மறுபடியும் சரவணனுக்கு டயல் செய்தான். மறுமுனையில் "நீங்கள் அழைக்க நினைக்கும் வாடிக்கையாளர் எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது" என்று பதில் வந்தது.
   கணேசனுக்கு தேர்வு எழுதப் போகணும், என்ன செய்வதென்று தெரியவில்லை. சுவரோரமாக உட்கார்ந்தான். கணசேன் இரண்டு வருஷமா மகாதேவனிடம், "சைக்கிள் பையனாக" இருக்கிறான். அதிகாலை 4 மணிக்கு பேப்பர் பாயின்டிற்கு வந்து, அவனது லைனுக்கான பேப்பர்களை அடுக்கி எடுத்துக் கொண்டு சந்தாதாரர்களுக்கும் இதர வாசகர்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்பா ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி தினம் அறுநூறு ரூபாய் சம்பளம், நாநூறு ரூபாய்க்கு அதிகமாக டாஸ்மாக் போய்விடும். அம்மா வீட்டைக் கவனிக்கிறாள். தங்கை பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.
      திருவட்டாறிலுள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் அவனுக்கு செமஸ்டருக்கு பதினெட்டாயிரத்து ஐநூறு ரூபாய் பீஸ் கட்டணும். அவனுக்குள் ஒரு கனவு எப்படியாவது பாலிடெக்னிக்ல நல்ல மார்க் எடுத்து சென்னையில ஏதாவது ஒரு கம்பெனியில வேலைக்கு சேரணும். அம்மா தான் சொன்னாள் காலேஜ் பீஸ் கட்ட எங்கிட்ட பணம் இல்ல... காலையில் பால் பாக்கெட்டோ, பேப்பரோ போடப் போ என்று.. அது தான் இரண்டு வருஷமாக பேப்பர் போடுறான். ஏறக்குறைய தான் உழைக்கிற காசுல காலேஜில படிக்கிறேன் என்ற எண்ணம்.. பெருமிதம் அவனுக்குள் இல்லாமல்.. இல்லை. 
     சற்று நேரத்தில் செய்தித்தாள் பார்சல் வண்டிகள் வந்தன. 'மகாதேவன், குலசேகரம்' என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்த பார்சல்கள் இறக்கப்பட்டன. "என்ன... அடிக்கடி இப்படி பிந்தி வாறீங்களே... இதுக்கப் பிறகு நாங்க யாருக்கு பேப்பர் போடுறது ?. விக்காம இருக்கிற பேப்பர யாரு திருப்பி எடுக்கிறா ? இதில நம்மகிட்ட கேட்காம அப்பப்போ 50 பேப்பரு 100 பேப்பருன்னு கூடுதல் அனுப்புறாங்க, எங்க போட்டு விக்கிறது. எடை போட்டு தான் விக்கணும்.. ஆபிஸ் ரூமுல வந்துப் பாருங்க ஒரு லாறிக்கு இருக்கும் அன்சோல்டு."
 "இல்ல அண்ணாச்சி வழியில தக்கலைப் பக்கத்தில ஏதோ காரும், லாரியும் ஆக்சிடன்டாகி ஒரு மணி நேரத்திற்கு மேலா டிராபிக் ஜாம்." "எண்ணக்கும் இப்படித் தான் ஏதோ காரணம் சொல்றீங்க..." இதற்குள் பார்சல்கள் பிரிக்கப்பட்டு, சைக்கிள் பையன்களும், சப் ஏஜன்டுகளும் தங்களுக்கான செய்தித்தாள்களை அடுக்கக் தொடங்கினர். கணேசன் அவனுக்கான செய்தித்தாள்களை அடுக்கி எடுப்பதில் தீவிரம் காட்டினான். "இந்த சப்பிளிமென்டுகளை எதுக்குத் தான் வச்சிருக்காங்களோ... அதுவும் இந்த இங்கிலீஸ் பேப்ருல ஏழெட்டு சப்பிளிமென்டு... சப்பிளிமென்டை வச்சி அடுக்குறதுக்குள்ள அர நாள் போயிரும்." முணுமுணுத்தப்படி சப்பிளிமென்டுகளை அடிக்கிய கணசேனுக்கு கோபமாக வந்தது.
    "இந்த பேப்பர் போடுற தொழிலாளிக்குத் தான் உள்ளதிலேயே சம்பளம் ரொம்பக் கொறவு...கேரளத்திலே பேப்பர் போடுற தொழிலாளிக்கு சங்கம் இருக்கு.. தனி நல வாரியம் இருக்கு.. சட்டப்படியான பாதுகாப்பும் இருக்கு... நம்ம இடத்தில பேப்பர் போடப் போகும் போது ஏதாவது ஆகி... போயிட்டா.. அப்பிடியே போயிட வேண்டியது தான்.. அப்புறம் குடும்பம் தெருவில தான்.." மூத்த தொழிலாளி, தோழர் கந்தசாமி சம்பிளிமென்டுகளை அடிக்கி வைக்கும் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்.
       தோழரே.. நீரு.. சொல்லுதது சரிதான்... நாட்டில் செய்தித்தாளும்.. தீப்பெட்டியும் தானே இப்ப வெலக்கொறைவு..? இந்த தொழில்ல என்ன லாபம் கிடைக்குது..? வாற பேப்பருல விக்காம இருக்கிறது கொஞ்சமா..? ஏஜன்ட் மகாதேவன் தனது ஆதங்கத்தை கொட்டினார். கணேசன் இந்தப் பேச்சையெல்லாம் கவனிக்கிற நிலையில இல்லை. அவன், செய்தித்தாள்களை அடுக்கி எடுப்பதிலும், ஒரு தந்தி, ஒரு கரன் என்று கையை நீட்டுபவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு செய்தித்தாள்களை கொடுப்பதிலுமாக இருந்தான்.
    அதிகாலையில் தூங்கப் பிடிக்காமல் பேப்பர் பாயின்டுக்கு வரும் வயதானவரான தங்கமணி, சப்பிளிமென்டுகளை அடுக்கித் தருவதில் உதவி செய்வதால் கணேசனுக்கு சற்று ஆறுதல். ஆனா தங்கமணி சும்மா இருக்க மாட்டாரு.. வருகிற ஆட்களிடம் வணக்கம் சொல்லி ஏதாவது நாட்டு நடப்பு பேசாம விடமாட்டாரு. அப்பத்தான் அங்கு செய்தித்தாள் வாங்கச் சென்றிருந்த நிருபர் ஒருவரிடம் "நிருபர் தம்பி வணக்கம்" என்று பேசத் தொடங்கி விட்டார். "இந்தப் பையனப் பாத்தீங்களா.. நல்ல.. சொடி... காலையில வீடு தோறும் பேப்பர் போட்டுவிட்டு பாலிடெக்னிக் காலேஜுக்கு போறான். படிக்கிற காலத்தில நாலு காசு சம்பாதிக்கணுமிண்ணு எண்ணம் இருக்குது பாத்தீங்களா... இவனப்பத்தி பேப்பர்ல் போடப்பிடாதா.." அப்போது வராண்டாவில் அமர்ந்து கணக்கெழுதிக் கொண்டிருந்த ஏஜன்ட் மகாதேவன் குறுக்கிட்டார்...
   "பையனுக்கு காசு சம்பாதிக்கணுமிண்ணு எண்ணம் இருக்கு ஆனா நம்ம கணக்குல வரவேண்டிய பணத்தில துண்டு போட்டுக்கிட்டு இல்லியா இருக்கான்." என்றார் கணேசனுக்குப் தான் கொடுக்க வேண்டிய பணம் பத்தித் தான் ஏஜன்ட் பேசுகிறார் என்று புரிந்தது. "முதலாளி... கலெக்சன் பணத்துல கொஞ்சத்தை எடுத்து காலேஜூல பீஸ் கட்டிட்டேன். இந்த மாசக்கடைசியில எல்லாத்தையும் சேர்த்து தந்திருவேன்."
   "நீ சொல்லுதது கன்னித்தீவு கத போலயில்லியாடே இருக்குது?" "தம்பி அப்பா என்ன வேலை செய்யிறாரு". அங்கு நின்ற நிருபர் கணேசனைப் பார்த்துக் கேட்டார். "அப்பா ரப்பர் மரத்தடி லோடு வைக்கப் போகும். அறுநூறு ரூபா சம்பளத்தில நாநூறு ரூபாயாவது டாஸ்மாக் கடைக்குப் போகும்." கணேசனின் கண்கள் கலங்கியது போல் இருந்தது, பதற்றத்திற்குள்ளாகிக் கொண்டிருந்தான்.
   "என்னடே ஒரு மாதிரியாட்டு இருக்கிற?" ஏஜண்ட் கேட்டார் "இல்ல... மொதலாளி.. இண்ணக்கி காலேஜ் பரிட்சை தொடங்குது... நேரம் பிந்தியாச்சி இனி எப்ப பேப்பர் போட்டுக்கிட்டு பரிட்சை எழுதப் போறது?"
   "ஓ.. அப்படியா.. ஒனக்குப் பதிலா யாரையாவது கூட்டிகிட்டு வந்திருக்கலாம்மில்லியா...: "எனக்க லைன் தெரிஞ்ச ஒரு பயல கூப்பிட்டேன். வந்தாம்மில்ல.. இண்ணக்கு உள்ளப் பேப்பரை மட்டும் நாளைக்கு கொடுத்தாப் போதுமா. மொதலாளி ? "
    "பட பட எடுத்துப் போட்டுக்கிட்டு போயிருடே.... இப்போயெல்லாம் ஒரு நாள் பேப்பர் கிடைக்கலயிண்ணா கம்பெனி மொதலாளிக்கு கூட போன் கூப்பிட்டு பேசுறானுவ... நெறய பேரு வீ்ட்டுல காப்பியப் போட்டு வைச்சுக் கிட்டு பேப்பர் வந்தாத் தான் குடிப்பேன்ணு இருப்பாங்க தெரியுமா... ஓடிப்போயிரு... எனக்க கல்லியாண நாள்ள கூட நான் பேப்பர் போட்டுக்கிட்டுத் தான் பொண்ணு கெட்டப் போனேன். " என்றார்.
   அங்கிருந்த அவனை விட மூத்த சைக்கிள் பையன்களின் முகத்தைப் பார்த்தான் கணேசன். இவன் ஏதாவது கேட்டு விடுவான் என்ற எண்ணத்தில் அவர்கள் முகங்களை வேறு பக்கம் திருப்பி வைத்துக் கொண்டிருந்தனர். வேறு வழியில்லை. அடுக்கப்பட்ட செய்தித்தாள்களை சைக்கிள் கேரியரில் வைத்து ரப்பரால் கட்டினான் கணேசன் கேரியர் ஒரு மாதிரியா ஆடியது. 11 ம் வகுப்பில் அரசு கொடுத்த சைக்கிள் அது.
  கணசேன் செல்போனை எடுத்து மணி பார்த்தான் மணி 7 ஆகியிருந்தது.. பேப்பர் போட்டு முடிக்கணுமிண்ணா இன்னும் சரியா இரண்டு மணி நேரம் ஆகும். பதற்றம் மேலும் அதிகரித்தது. சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து இறக்கி ஏற முயற்சித்த போது செல் போன் ஒலித்தது.
   "அண்ணா நான் தங்கச்சி பேசறேன்... பேப்பர் குடுத்து முடிஞ்சா..? பரிச்சை எழுத போகண்டாமா..? பேப்பர் குடுத்தது போதும் வந்துரு.. அம்மா தேடிகிட்டே இருக்கு..." "சரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவேன்.." போனை துண்டித்த கணேசன், எப்படியாவது 9 மணிக்குள்ள எல்லாப் பேப்பரையும் கொடுத்து விட்டா பரிட்சை எழுதப் போய்விடலாம். சைக்கிளை வீறு கொண்டு மிதித்தான்.. வீடு.. கடை, பள்ளிக்கூடம் என செய்தித்தாள்கள் பறந்து சென்று விழுந்தன.
   "தம்பி ஒரு தினமணி கொடுங்க.." 50 ஐ கடந்த ஒருவர் கை நீட்டினார். "தினமணி எக்ஸ்ட்ரா இல்ல... தந்தியோ... கரனோ வேணுமா..?" "எல்லா பேப்பருலயும் ஒரே கொலையும், கொள்ளையும் செய்தியாயில்ல இருக்கு.." "நாட்டுல நடக்குறது தானே போடுவாங்க". 'இந்த பல்லாங்குழி ரோட்டை கிராஸ் பண்ணிப்.... பண்ணி பேப்பர் போடுறது பெரிய கொடுமை.. சைக்கிளை மிதிக்கவா முடிகிறது.... சரிந்து விழுந்து மண்டை அடிபட்டால் அவ்வளவு தான்... இந்த காம்பவுண்ட் கேட்டுகளைத் திறந்து பேப்பர் போடுறது அதவிடக் கொடுமை. இதுலவேற வழியில சைக்களை நிறுத்தி ஒரு தந்தி, ஒரு கரனுன்ணு கேட்பவர்களுக்கு பாக்கி சில்லறை கொடுப்பதற்குள் ஒரு வழியாகி விடுகிறது.' சலித்துக் கொண்டான். ஒரு டிப்பர் லாரி அவனை உரசுவது போல் மின்னல் வேகத்தில் சென்றது.
   'இந்த டிப்பர் லாரிகளுக்கயும், மினி பஸ்ஸூகளுக்கயும் காற்றப் பிடுங்க ஆள் இல்லையா..? கொல வெறியிலயில்லியா ஓட்டுறானுவ...?' வேகங்கொண்டு சைக்கிளை மிதித்தான்... காவல்ஸ்தலம், நாக்கோடு, படநிலம், செருப்பாலூர் என சைக்கிள் போய்க் கொண்டிருந்தது. செருப்பாலூரில் ஐயரின் டீ கடையில் பேப்பரை போட்ட வேகத்திலேயே சைக்கிளில் ஏறினான்.
   "என்ன தம்பி டீ வேண்டாமா...? "இல்ல.. டீ குடிச்சிட்டிருக்க நேரமில்ல.." வழக்கமான டீயையும் வேண்டாமென்று சொல்விவிட்டு சைக்கிளை மிதித்தான். மண்விளை, பாய்க்காடு, கொட்டூர், மலைவிளை என சைக்கிள் கடந்து கொண்டிருந்து. இன்னும் போக வேண்டும்.. அண்டூர்... வெண்டலிகோடு.. என.... அண்டூரில் ஏழெட்டு வீடுகளுக்கு நாளிதழ் போட்டுவிட்டு செல்போனை எடுத்து மணியைப் பார்த்தான், மணி 9 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுக்குள் பதற்றம் மேலும் அதிகரித்தது. வியர்வையால் சட்டை தொப்பென்றாகியது. நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்து விட்டு, மீண்டும் பிரதான சாலையில் சைக்கிளில் ஏறி முன்பை விட வேகமாக மிதித்தான்.

அப்போது தான் அது நிகழ்ந்தது-
      கண்கள் இருள்வது போல் இருந்தது அவனுக்கு, சாலை இரண்டு மூன்றாக விரிந்தது... சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்த முயன்றான். அதற்குள் சைக்கிள், நிலை குலைந்து நடுசாலையில் சரிந்தது. பின்னால் கருங்கல் பாரம் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டெம்போ 5 அடி இடைவெளியில் திடீர் பிரேக் போட்டு நின்றது. செய்தித்தாள் கட்டுடன் கவிழ்ந்து கிடந்த சைக்கிளின் அடியில் கணேசன் உணர்வற்றுக் கிடந்தான். அவன் பாக்கெட்டிலிருந்து சாலையில் விழுந்து கிடந்த செல்போன் ஒலித்துக் கொண்டிருந்து.
       அப்பகுதியில் ஓடி வந்த யாரோ ஒரு இளைஞன் செல் போனை எடுத்து தனது காதில் வைத்தான். "அண்ணா நான் தங்கச்சி பேசுறேன்... இண்ணிக்கி பாலிடெக்னிக் பரிட்சை இல்லியாம்... கொஸ்டின் பேப்பர் லீக்காச்சாம்.. டிவி யில போட்டிருக்கான்.." செல்போனை காதில் வைத்திருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
      கணேசனின் முகத்தில் தண்ணீர் தெளித்து யாரோ ஒருவர் எழுப்பிக் கொண்டிருந்தார்..