வியாழன், 14 மே, 2015



குமரி மாவட்ட  அணைகளும்.... கால்வாய்களும்...


லாசர் ஜோசப்


கன்னியாகுமரி மாவட்டத்தில்  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளும், அவற்றின் கால்வாய்களும்,   நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா உள்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் 96 ஆயிரம்   ஏக்கர் நிலத்தை  பொன் விளையும் பூமியாக மாற்றுகின்றன.  இந்த அணைகளையும், கால்வாய்களையும் நம்பித் தான் பெரும்பாலான மக்களின் வாழ்வும், வளமும் அமைந்துள்ளது. இந்த  அணைகளும், அதன் கால்வாய்களும், மிகச்சிறந்த  பொறியியல் முறையில் திட்டமிட்டப்பட்டு மாவட்டம் முழுமைக்கும்  பாசனம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,  தனிச்சிறப்பாகும். 

மூன்று நிலைகள் இம்மாவட்ட  நீர்ப்பாசனத்தை பாண்டியன் அணைக்கட்டப்படுவதற்கு முன்பு இருந்த முறை, பாண்டியன் அணை கட்டப்பட்ட பிறகு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கட்டப்பட்ட பின்பு உள்ள நிலை என 3 வகைகளாகப் பிரிக்கலாம். தொடக்கத்தில் குறிப்பாக   பாண்டியன் அணை கட்டப்படுவற்கு முன்பு இம்மாவட்டப் பகுதிகளில் பெரும்பாலும் குளத்துப் பாசனமே இருந்து வந்தது.

பாண்டியன் அணைக்கட்டு:
இம்மாவட்டத்தில் தேவையான நீர் வளம் இருந்தும் மக்கள்  விவசாயம் செய்யமுடியாமல் இருக்கும் நிலையைப் பார்த்த பாண்டிய மன்னன் ராஜசிம்மன்  கி.பி. 900 ஆம் ஆண்டு பரளியாற்றின் குறுக்கே பாண்டியன்  அணைக்கட்டு அமைத்தான்.  இதற்கு தலை அணை என்று மற்றொரு பெயரும் உண்டு. இதிலிருந்து பாண்டியன்  கால்வாய் வழியாக தண்ணீரை பழையாறு வடிநிலப்  பகுதிக்கு கொண்டு சென்று அதிலிருந்து தோவாளை, அகஸ்தீஸ்வரம் பகுதி பாசனத்திற்கு வழி செய்யப்பட்டது.

புத்தன் அணைக்கட்டு:
பாண்டியன் அணைக்கட்டு கால வெள்ளத்தில் தூர் நிறைந்தது. மேலும் பாண்டியன் கால்வாய் மூலம் நாஞ்சில் நாட்டுப் பகுதிகளுக்கு மட்டுமே பாசனம் கிடைத்தது, எடநாடு பகுதிகளுக்கு பாசனம் கிடைக்கவில்லை.  இதனால் 1750 ஆண்டு பாண்டியன் அணைக்கு கீழே சுமார் 400 மீட்டர் தூரத்தில் புத்தன் அணை என்று மற்றொரு அணையை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா கட்டினார். இதிலிருந்து 19 மைல் நீளத்திற்கு பத்மநாபபுரம் புத்தனாறு என்று கால்வாயை வெட்டி எடுநாட்டுப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் அளித்தார்.   (இந்த அணை  1992  ஆம் ஆண்டு,  வெள்ளப் பெருக்கத்தின் போது சேதமானதைத்  தொடர்ந்து இப்பகுதியில் புதிய அணை கட்டப்பட்டுள்ளது.)

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் விரிவான பாசனமும்:

பேச்சிப்பாறை அணை: குமரி மாவட்டத்தில் பிராதான ஆறுகளில் மற்றொன்றான கோதையாற்றுத் தண்ணீர் வீணாக கடலில் கலப்பது  தடுத்து நிறுத்தி,  குமரி மாவட்டப் பகுதிகள் முழுமைக்கும் பாசன வசதி அளிப்பது தொடர்பாக பேச்சிப்பாறையில் அணை கட்ட  திருவிதாங்கூர் மன்னர்கள் முடிவு செய்தனர்.  இதைத் தொடர்ந்து  1837 ஆம் ஆண்டு கேப்டர் ஹார்ஸ்லி என்ற ஆங்கிலேயர் கோதையாற்றின் குறுக்கே அணை கட்டவேண்டுமென்று அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால் இந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை. அதன்பின்பு  1850 ம் ஆண்டு ஜெனரல் குல்லன் அரசுக்கு மீண்டும் ஒரு பரிந்துரையை வைத்தார். அதன்பின்பு டி. மாதவராவ்  அணைகட்டும் திட்டத்திற்கு உயிர் கொடுத்தார். ஆனால் அதற்கான நிதி ஆதாரம் இல்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. அதன்பின்னர் திருவிதாங்கூர் பிரதம பொறியாளராகப் பொறுப்பேற்றார் ஆங்கிலேயப் பொறியாளர்  ஏ.எச். ஜோசப். இவர் 1880 ல் கேப்டன் டபிள்யூ. எச். ஹார்ஸ்லி என்ற பொறியாளருடன் இணைந்து  ஒரு  திட்டத்தை தயாரித்தார். இத்திட்டத்தை திவான் நாணுபிள்ளை அரசிடம் பரிந்துரை  செய்தார்.  அதன்பின்பு பிரதம பொறியாளராக வந்த வி. ராமசாமி ஐயங்கார், மேஜர் மீட், எஸ். ஹார்ஸ்லி ஆதரவுடன் திருவிதாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் இந்த அணைகட்டும் திட்டத்தினை செயல்படுத்த ஆணையிட்டார். பின்னர் பொறியாளர்கள் ஏ.எச். யாகூப், ஜி.டி. வால்ஸ், கர்னல் ஸ்மார்ட் ஆகியோரது தலைமையில் பொறியாளர் எம்.ஏ. மீடின், ரூ. 28 லட்சம் திட்ட மதிப்பீட்டில் இப்பணியை 1897 ல்  தொடங்கினார்.  பின்னர்  இப்பணியில் ஹம்ரே அலக்சாண்டர் மின்சின் முக்கியப் பொறியாளராக இணைந்து அணைக் கட்டும் பணிகளை முன்னின்று நடத்தினார்.  1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணை கட்டும் பணிகள் 1906 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதன் கட்டுமான செலவு ரூ. 26.10 லடசம்.
அணை கட்டப்பட்ட போது அதன் நீர் மட்ட உரயம் 42 அடியாகத் தான் இருந்தது. பின்னர் 1964-1970 ல் ரூ. 15 லட்சம் செலவில் அணையின் நீர்மட்ட உயரம் மேலும் 6 அடி உயர்த்தப்பட்டு 48 அடியாக மாற்றப்பட்டது.

அணையின் கட்டுமானம்: இந்த உட்புறம் சுண்ணாம்பு, செங்கல்,  ஜல்லி கற்காரையால் கட்டப்பட்டு, முகப்பு சுண்ணாம்புக் கலவையுடன் கருங்கற்களால் கட்டப்பட்டதாகும். இந்த அணையி்ல் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருள்கள் அப்போதைய கிண்டி பொறியியல் கல்லூரியில் சோதிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்ததப்பட்டுள்ளன.

கால்வாய்: இந்த அணையிலிருந்து தொடங்கும் கால்வாய்க்கு கோதையாறு இடது கரை கால்வாய் என்று பெயர் இக்கால்வாய்  பரளியாற்றின் குறுக்கேவுள்ள புத்தன் அணையில் இணைகிறது.

பேச்சிப்பாறை அணை பயோ டேட்டா:

கட்டப்பட்ட வருடம் - 1897-1906
அணையின் நீளம் - 1396 அடி
அணை மாதிரி - கற்காரை அணை
முழு நீர் கொள்ளளவு - 48 அடி
நிறை நீர் பரப்பு - 15 ச.கி.மீ.
மொத்த கொள்ளளவு - 5306 மி.க.அடி.
நிகர கொள்ளளவு - 4350 மி.க.அடி
முடங்கிய கொள்ளளவு - 956 மி.க.அடி
முடங்கிய கொள்ளளவு உயரம் - 47 அடி
ஏந்தள பரப்பு - 204.8 ச.கி.மீ.
சராசரி மழையளவு - 2180 மி.மீ / ஆண்டுக்கு
அதிக பட்ச உபரி நீர் வெளியேறும் திறன் - 39000 c/s
உபரி நீர் போக்கி - 6 எண்ணம் 40 X 15 அடி
பாசனக் காலம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை

பெருஞ்சாணி அணை: மாவட்டத்தில்  பாசன பரப்பளவை மேலும் அதிகரிக்கும் வகையி்ல  பரளியாற்றின் குறுக்கே புத்தன் அணைக்கு மேல் பகுதியில்  (சற்று தொலைவில்) பெருஞ்சாணி அணை மார்த்தாண்ட வர்மா ஸ்ரீசித்திரை திருநாள் பாலராம வர்மா  ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இப்பணிகள் 1948 ல் தொடங்கப்பட்டு   1953 ல் இந்த அணை கட்டும் பணிகள் நிறைவடைந்தன.
முதலில் 71 அடி உயரமாக இருந்த இந்த அணை 1969 ல் 77 அடியாக உயர்த்தப்பட்டது. இந்த அணையின் திட்டச் செலவு ரூ. 62.71 லட்சம்.

புத்தன் அணை: பேச்சிப்பாறை அணையின் பிரதானக் கால்வாயான கோதையாறு இடது கரைக்கால்வாயும், பெருஞ்சாணி அணையிலிரந்து வெளியேறும் தண்ணீரும் புத்தன் அணையில் கலப்பதே குமரி மாவட்ட பாசன கால்வாய்களின் வடிவமைப்பின் குறிபிட்டத்தக்க அம்சமாகும். . இதில் புத்தன்  அணையிலிருந்து பாண்டியன் கால்வாய் மற்றும் பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய் என இரு கால்வாய்கள் பிரிகின்றன. இதில் பாண்டியன் கால்வாய் 2.5 கி.மீ. தொலைவு பாய்ந்து செல்லன்துருத்தி என்ற இடத்தில் தோவாளைக் கால்வாய், ரெகுலேட்டர் கால்வாய் என  இரண்டாகப் பிரிகிறது இதில் தோவாளை கால்வாய், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வரை செல்கிறது. மற்றொருகால்வாயான  ரெகுலேட்டர் கால்வாய் 1.60 கி.மீ. பாய்ந்து சுருளகோடு பகுதியில் செல்கிறது.  அங்கு இக்கால்வாய் இரண்டாகப் பிரிகிறது. இதில் ஒன்று அனந்தானாறு கால்வாயாகும்.  மற்றொன்று பழையாற்றின் தொடக்கமாக அமைகிறது.  பழையாறு ஆயிரக்கணக்கான ஏக்கர்  பாசனப்பகுதிகளுக்கு ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றில் சாட்டுப்புதூர் அணையிலிருந்து   நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற  கால்வாய் தொடங்கி நாஞ்சில் நாட்டில் குறி்ப்பிட்டப் பகுதிகளுக்கு  பாசனம் அளிக்கிறது. இது தவிர பழையாற்றின் குறுக்கே  வீரப்புலி அணை, குட்டி அணை, பள்ளி கொண்டான் அணை, செட்டித் தோப்பு அணை, வீர நாராயண மங்கலம் அணை, சோழன்திட்டை அணை, பிள்ள பெத்த அணை, மிஷின் அணை என 11 சிறிய அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.

சிற்றாறு அணைகள்: மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை மேலும் பெருக்கும் வகையிலும்,  வறட்சி மிகுந்து காணப்பட்ட நட்டாலம், கருங்கல், புதுக்கடை உள்ளிட்ட மையப்பகுதிகளுக்கு பாசனம் அளிக்கும் வகையிலும் கோதையாற்றின் கிளை ஆறான சிற்றாற்றின் குறுக்கே சிற்றாறு அணை 1 மற்றும் சிற்றாறு 2 என இரு அணைகள் உள்ளன.  இந்த அணைகள் தலா 18 அடி உயரத்தில் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டன. இந்த இரு அணைகளுக்கும்  இடையில் இணைப்புக் கால்வாய் குறுகிய தூரத்தில் உள்ளதால், சிற்றாறு 1 அணையிலிருந்து மட்டுமே கால்வாய் உள்ளது. இதற்கு சிற்றாறு பட்டணம் கால்வாய் என்று பெயர். இக்கால்வாய் அணையிலிருந்து தொடங்கி 5 ஆவது கி.மீ. தூரத்தில் கோதையாறு இடது கரைக் கால்வாயில் இணைகிறது. பின்னர்  10.15 கி.மீ. தூரம்  அதனுடன் இணைந்து பாய்ந்து குலசேகரம் அருகே அரியாம்பகோடு என்ற இடத்திலிருந்து தனியாகப் பிரிந்து செல்கிறது.

மாம்பழத்துறையாறு அணை: இந்த அணை வில்லுக்குறிலிருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் ஆனைக்கிடங்கு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்திட்டம் குமரி மாவட்டத்தின் கல்குளம் தாலுகாவில் ஓடும் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையாகும். இதன் மொத்த நீர் மட்ட உயரம் 54 அடியாகும்.  மாம்பழத்துறை ஆறானது மருத்தூர் மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 838 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி, பின் கடல் மட்டத்தில் இருந்து 78 மீட்டர் உயரத்தில் சமதளத்தை அடைகிறது. சுமார் 4 கி.மீ., நீளத்திற்கு இந்த ஆறு இதே பெயரில் ஓடி, பின் தூவலாறு என்ற பெயரில் 2.50 கி.மீ. தூரத்தைக்  கடந்து இறுதியில் தக்கலை அருகில் உள்ள வள்ளியாற்றுடன் இணைகிறது. வள்ளியாறு வேளிமலையில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி 19.20 கி.மீ., தூரத்திற்கு பாய்ந்து இறுதியில் கடியப்பட்டினம் அருகில் அரபிக்கடலுடன் கலக்கிறது. இதன் நீர்ப்பரப்பு 2.80 சதுர மைல்கள் கொண்ட மலைப்பகுதியாகும். இந்த ஆற்றில் ஏற்கனவே உள்ள பாசன பரப்பான 455.76 ஏக்கருக்கு பாசன  செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் உள்ள உபரி நீர் கோதையாறு திட்டத்தின் பத்மனாபபுரம் புத்தனாறு கால்வாயில்  திருப்பி விடப்படுகிறது. இதனால் மிச்சப்படும் தண்ணீர் மாவட்டத்தின் பிற பகுதியிலுள்ள பாசன வசதியற்ற சுமார் 450 ஏக்கர் வறண்ட நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.


முக்கிய கால்வாய்கள் மற்றும் அவற்றின் கிளைக்  கால்வாய்கள்

1. தோவாளை கால்வாய்:
அ.  தோவாளை பிரதான கால்வாய் (49.1 கி.மீ.) 
ஆ. மருத்துவாழ் மலைக் கால்வாய் (5.79. கி.மீ.)
இ. கிழக்கு மேஜர் கால்வாய் (3.253 கி.மீ.)
ஈ. கிழக்கு மைனர் கால்வாய் (3.208 கி.மீ.)
உ. மேற்கு கிளைக் கால்வாய் (2.819 கி.மீ.)
ஊ. ராதாபுரம் கால்வாய் (28 கீ.மீ.)

2. அனந்தனாறு கால்வாய்:
அ. மேற்கு கிளைக்கால்வாய் (2.99 கி.மீ.)
ஆ. ஏ.கே. கால்வாய் (5.97 கி.மீ.)
இ. கிருஷ்ணன்கோயில் கால்வாய் (2.203 கி.மீ.)
ஈ. ஆசாரிபள்ளம் கால்வாய் (6.49 கி.மீ.)
உ. கிழக்கு பிராதன கால்வாய் (5.475 கி.மீ.)
ஊ. அத்திக்கடை கால்வாய் (1.157 கீ.மீ.)
எ. கோட்டாறு கால்வாய் (3.54 கி.மீ.)
ஏ. தெங்கம்புதூர் கால்வாய் (3.50 கி.மீ.)
ஐ. காரவிளை கால்வாய் (7.79 கி.மீ.)
ஒ.  கிருஷ்ணன் புதூர் கால்வாய் (9.84 கி.மீ.)

3. பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய்:
அ. பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய்
ஆ. இரட்டைக் கரை கால்வாய் (6.87 கி.மீ.)
இ. திருவிதாங்கோடு கால்வாய் (25.77 கி.மீ.)

4. நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் (27.70 கி.மீ.)

சிற்றாறு பட்டணம்கால்வாய்:
சிற்றாறு பட்டணம் கால்வாய் (43 கி.மீ.)
அ. புதுக்கடை கிளை (5.96 கி.மீ.)
ஆ. கருங்கல் கிளை (5.96 கி.மீ.)
இ. தொடிவெட்டி கிளை (31.30 கி.மீ.)
ஈ. கீழ்குளம் கிளை  (31.30 கி.மீ.)


5. அருவிக்கரை அணைக் கட்டு:

அ. அருவிக்கரை இடது கரை கால்வாய் (12.874 கி.மீ.)
ஆ. அருவிக்கரை வலது கரைக் கால்வாய் (4.224 கி.மீ.) இவ்விரு கால்வாய்களும் பரளியாற்றின் குறுக்கே திருவட்டாறு அருகே அருவிக்கரை அணைக்கட்டிலிருந்து தொடங்கி திருவட்டாறு, ஆற்றூ், சாரூர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு பாசனம் அளிக்கின்றன.

6. திற்பரப்பு அணைக் கட்டு:

திற்பரப்பு இடது கரைக் கால்வாய் (18.40 கி.மீ.)
திற்பரப்பு வலது கரைக் கால்வாய் (4.24 கி.மீ.) இவ்விரு கால்வாய்களும் கோதையாற்றின் குறுக்கே திற்பரப்பு அருவி அருகில் அமைந்துள்ள அணைக்கட்டிலிருந்து தொடங்கி பாசனம் அளிக்கின்றன.

7. நெய்யாறு  கால்வாய் :

நெய்யாறு நீர்த்தேக்கம் கேரளாவில் அமைந்துள்ளது. நெய்யாறு நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 138.24 சதுர கி.மீ ஆகும். இதில் சுமார் 12.9 சதுர கி.மீ தமிழகத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த பாசனப் பரப்பு 38,000 ஏக்கர் ஆகும்.
நெய்யாறு நீர்த்தேக்கத்திலிருந்து இடது புறம் ஒரு கால்வாயும், வலது புறம் ஒரு கால்வாயும் வெட்டப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து செல்லும் வலது புற கால்வாய் கேரள மாநிலத்திற்கு மட்டுமே பாசனம் அளிக்கிறது. இடது புற கால்வாய் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பாசனம் அளிக்கிறது. இடது புற கால்வாயின் மொத்த நீளம் 38.82 கி.மீ மற்றும் இதன் பாசனப் பரப்பு 19,000 ஏக்கர் ஆகும். இந்த கால்வாயின் முடிவில் மெட்ராஸ் ரெகுலேட்டர் (கொல்லங்கோடு ரெகுலேட்டர்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெகுலேட்டர் கேரள எல்லையில் அமைந்துள்ளது.
மெட்ராஸ் ரெகுலேட்டரின் கீழ்ப்பகுதியில் உள்ள மெட்ராஸ் கால்வாயில் (22.374 கி.மீ) உள்ள 6 கிளை வாய்க்கால்களின் மூலம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்திலுள்ள 9,200 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த பாசனப் பரப்பிற்காக மெட்ராஸ் ரெகுலேட்டரிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய நீரின் அளவு 150 கன அடி ஆகும்.
நெய்யாறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்திற்கு 1970–71 ஆம் ஆண்டிலிருந்து 2003–-04 ஆம் ஆண்டு வரை நிர்ணயம் செய்யப்பட்ட 150 கன அடியை விட குறைவாகவே கேரளம் அளித்துள்ளது. 2004 ம் ஆண்டிலிருந்து தண்ணீர் தருவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

இதன் கிளைக் கால்வாய்கள்:
அ. முல்லையாறு கிளை (12.40 கி.மீ.)
ஆ. பாகோடு கிளை (6.50 கி.மீ.)
இ. மருதங்கோடு கிளை  (5.40 கி.மீ.)
ஈ. மங்காடு கிளை (5.40 கி.மீ.)
உ. மெதுகும்மல் கிளை (7.20 கி.மீ.)
ஊ. கொல்லங்கோடு கிளை (6.80 கி.மீ.)
எ. வெங்கஞ்சி கிளை (6.80 கி.மீ.)

இவ்வாறாக மாவட்டத்தில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு பிரதான அணைகளுடன், மாம்பழத்துறையாறு அணையும், இவைகளில் இருந்து வரும் கால்வாய்களும், மாவட்டத்தை வளப்படுத்தி செழிப்பாக்குகின்றன.
இந்த அணைகளையும், கால்வாய்களையும் காலத்திற்கேற்ற வகையில் சீரமைத்து, பாதுகாப்பது நமது கடமையாகும். குறிப்பாக ஆறுகளையும், அணைகளையும்,  கால்வாய்களையும் மாசுபடாமல் பாதுகாப்பது நமது தலையாய கடைமை என்பதை உணர்வோம்.

(பொதுப்பணித் நீராதரப் பிரிவு,  முன்னோடி விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை).


Key words: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, புத்தன் அணை, பழையாறு, கோதையாறு இடது கரை கால்வாய், நெய்யாறு அணை, தோவாளை கால்வாய், அனந்தனாறு கால்வாய்.