சனி, 20 மார்ச், 2010

குருசுமலை







சிலுவையை சுமக்கும் மலை

அந்த மலை சிலுவையை சுமந்து கொண்டிருக்கிறது. சிலுவை என்ற சொல் குருசு என்றும் அறியப்படுகிறது. அதனால் அந்த மலை குருசு மலை என்று அழைக்கப்படுகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்துவால் சிலுவை புனிதம் பெற்றது. அந்த சிலுவையின் அடிபணிந்து வணங்கினால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறும், வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை லட்சக்கணக்கான மக்களை அதன் பாதை நோக்கி அழைத்துச் செல்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. பயணம் அழகிய சிற்றாறு 2 அணையின் கரைப்பகுதி வழியாக சென்றால் கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை சந்திப்பு வரும், அதிலிருந்து 2 கி.மீ. தூரம் குருசு மலை அடிவாரம்.
ஆகா.. எத்தனை அழகு... விழிகளை வியப்பிலாழ்த்தும் அந்த மலை.. அதுதான் குருசுமலை. அந்த மலை உச்சியில் தான் குருசு நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரம். அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வது சற்றுக் கடினமானப் பயணம் தான் . மலை உச்சிக்கு சென்றால் இதமான தென்றல் தழுவும். கூடவே ஒரு புறம் நெய்யாறு அணைக்கட்டும், மறுபுறம் சிற்றாறு அணைக்கட்டும் தெரியும். மலை உச்சி தமிழக எல்லையில் இருக்கிறது. அந்த உச்சிப் பகுதியில் சிலுவை தன்னந்தனியாக கைகளை விரித்தவாறு நிற்கிறது.. அது
அன்பிற்காய்... ஆதரவிற்காய்.. நல் வாழ்விற்காய் ஏங்குபவர்களே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருப்பதாய் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டம் சார்பில் தவக்கால நாள்களின் இறுதிப் பகுதியில் இங்கு திருப்பயணம் நடத்தப்படுகிறது. கேரளாவிலிருந்தும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குச் செல்கின்றனர்.

சனி, 13 மார்ச், 2010

நவீன ஓவியங்கள்







எல்லைகளற்ற நவீன ஓவியங்கள்

அந்த சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. ஒரு காலைப் பொழுதில் அவரது வீட்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஓவியர் வாமணனை அதற்கு முன் நான் சந்தித்திருக்கவில்லை. அவர் வரைந்து வைத்திருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாய் எனக்குக் காட்டினார். எனக்குள் ஏற்பட்ட பரவசம் அளவிடமுடியாதாய் இருந்தது. எத்தனை நேர்த்தி... எத்தனை நுட்பம்... அன்றைய நாளிலிருந்து அவரைக் கொண்டாடத் தொடங்கினேன்.
ஓவியர் வாமணன் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் வெண்டலிகோடு கிராமத்தை சேர்ந்தவர்.
ஒரு பள்ளி ஆசிரியராய் இருந்து பணி ஓய்வுக்குப் பின் அவர் நவீன ஓவிய உலகிற்குள் வசித்து வருகிறார். நவீன ஓவியங்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன என்ற அவரது வார்த்தைகள் நிஜமாய்த் தான் இருக்கின்றது. ஒரு பூவைச் சுற்றிச் சுற்றி வந்தமரும் வண்ணத்துப் பூச்சிகளைப் போல் அவரது தூரிகைகளில் நவீன ஓவியங்கள் வந்தமர்ந்து கொண்டிருக்கின்றன.
அவரது ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருக்கின்றது. உயிரோட்டமான அந்த ஓவியங்கள் இறக்கை முளைத்து பறந்து கொண்டிருக்கின்றன.. விரைவில் அவை உலகின் கதவுகளைத் தட்டும்.
பிக்காஸோக்கள். மைக்கேலெஞ்சலோக்கள்... புதிதாய் பிறந்து கொண்டுதானிருக்கிறார்கள்.