வெள்ளி, 29 ஜனவரி, 2010

கவிஞர் சந்திரகலா


கவிஞர் சந்திரகலா

சந்திரகலா நான் கொண்டாடும் கவிஞர். இலக்கியத்தில் இடம் பிடித்த அதங்கோடு அவர் பிறந்த மண். வாரமலர் இதழின் பின் பக்க அட்டைகளை அவரது கவிதைகள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. என் வயதுக்கு சற்று்க குறைவாகத் தான் இருக்கும் அவரது வயது. கன்னியாகுமரி மாவட்டப் பிரஸ் கிளப் தான் முதலில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களை எனக்கு அளித்தது.
வசீகரிக்கும் வார்த்தைகளால் நேர்த்தியாய் கவிதை நெய்யும் வித்தை அவருகே உரியது. சந்திரகலாவின் பெயர் இல்லாமல் தமிழ் இலக்கிய உலகில் புதுக்கவிஞர்களின் பட்டியலைத் தயாரித்து விட முடியாது. அவரது கவிதைகளைப் படிக்கும்போதல்லாம் பரவசம் அடைகிறேன்.
அந்தி வானம், அலைகடல், அழகான பெண்கள், சந்திரகலாவின் கவிதை......
1990 களில் வாரமலர் இதழில் வெளிவந்த சந்திரகலாவின் ஒரு கவிதையை என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்து அழகு பார்த்தேன். காலம் கடந்து நிற்கும் அந்தக் கவிதையை நீங்களும் படியுங்களேன்....

தலைமை நாற்காலி

மருமகளே
இது உன்
ராஜ சபை.

புகுந்த வீடு எப்படியோ
என்கிற
புதுக்குழப்பம் வேண்டாம்
தாய் வீட்டில் அனுபவித்த
சுதந்திரக் காற்றை
நீ
இங்கேயும் சுவாசிக்கலாம்.

நான் உனக்கு
மாமியாரல்ல
மாற்றாந்தாயல்ல
இன்னொரு தாய்
இரண்டாவது தாய்.

மகளே
நானும் ஒரு நாள்
மருமகளாக இருந்தவள் தான்
என்பதை
மறந்துவிடவில்லை.
பயப்படாதே
என் வீட்டு ஸ்டவுக்கு
எரியத் தெரியும்
எரிக்கத் தெரியாது.

என் மகனுக்கொரு
பூரணமான வாழ்க்கை மட்டும்
நோக்கமாக இருந்ததால் தான்
மயிலே- உன்னை
மருமகளாக்கி இருக்கிறேன்.
மூலைக்கு மூலை
நடப்பது போல்
வியாபார நோக்கத்தோடு அல்ல.

இனி என்
இருபத்தோரு வயது குழந்தையின்
நித்திரையும்
விழிப்பும்
நீ
சம்மந்தப்பட்டது.

மகளே
என் வீட்டுக் கவுரவம்
உன் இதயத்திலும்
என் வீட்டுச் சாவி
உன் இடுப்பிலும்
இருக்க வேண்டுமென்பது தான்
இந்த
அன்னையின் உள்ளத்தின்
ஆடம்பரமில்லாத ஆசை.

வா- மகளே
வந்து உட்கார்
இது-
இது வரை
நான் வகித்து வந்த
தலைமை நாற்காலி
இனி மேல்-
எனக்கு
இரு்க்கவே இரு்க்கிறது
சாய்வு நாற்காலி...

புதன், 27 ஜனவரி, 2010

கவிஞர் வேங்கடகிருஷ்ணன்


கவிஞர் வேங்கடகிருஷ்ணன்

அவருக்கு சொந்த ஊரு மதுரை. 1990 லிருந்து பெரும் பொழுது நான் அவரோடு செலவிட்டிருக்கிறேன். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம், தமிழ் அறிஞர்கள் என அவர் அறியாதது எதுவுமில்லை. இலக்கியம் சார்ந்து தமிழில் வெளிவந்த புத்தகங்களை நான் கேள்விப் படும் முன் அவர் படித்திருப்பார். ஆன்மீகம், தியானம், நாத்திகம் எல்லாம் அவர் அறிந்தது. மகான்கள், ஞானிகள், மதங்கள் குறித்த விபரங்களை அவர் விரல் நுனிகள் வைத்திருக்கும்.
எப்பொருளில் கவிதை அல்லது கட்டுரை எழுதிக் கேட்டாலும். உடனே அதனை தயார் செய்து தரும் ஆற்றல் அவரிடம் நிரம்பிக் கிடக்கிறது.
அவரிடமிருந்து தமிழ், தமிழர்கள், ஆன்மீக மகான்கள் குறித்து ஏராளம் கற்றுக் கொண்டேன். நான் படித்த அதிக புத்தங்கள் அவர் மூலம் எனக்குக் கிடத்தவை. நானும் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்குகிறேன் என்றால் அதற்கு அவர் காரணம். எனது முதல் வாசகர். நல்ல ரசிகர்.
அவருடன் நட்பு ஏற்பட்ட தொடக்க நாள்களின் அவர் எழுதிய கவிதைகளை எனது நோட்டுகளில் எழுதி வைத்து அழகு பார்ப்பேன். அப்படித்தான்... 1991 ம் வருடம் கல்கி வார இதழ் ஒரு கவிதைப் போட்டி நடத்தியது. அதில் பங்கேற்ற அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. நான் எனது நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தேன். அந்த கவிதையைப் படித்துப் பாருங்கள்.

ஞான வெளியில்...

ஒரு தீப்பந்தம்
அதைச் சுழற்றினால்
அற்புத
தீச்சுடர் வளையம்.

எனது
யதார்த்த சொரூபம்
எனக்குத் தெரியாததால்
வாழ்க்கையைச்
சுழல விட்டு
வேடிக்கை பார்க்கிறேன்.

மூலத்தில்
முகிழ்ந்து எழுந்த
நானென்னும் ஆணவ
அலங்கோல பொம்மைக்கு
ஆன்ம தரிசனம்
எப்போது

மூல மொழியைப்
படிக்கத் தெரியாத
வேட்கையில்
மொழிப் பெயர்பைப்
படிக்கும் ஆனந்தம்.

உள்ளதை
உள்ளபடி உணரும்
திண்ணம் இல்லாததினால்
ஓடும் மனத்தின் மீது
உல்லாசப் பயணம்
அற்ப சுகம்.

பூமியின் பரப்பளவை விட
எனது
ஆசையின் பரப்பளவு
அதிகம் என்பது
அவனுக்குத் தெரிந்திருந்தால்
இரண்டடியில் அளந்து விட்டு
மூன்றாமடிக்கு
என்னை அளந்திருப்பான்.

நிறைவேறாத
ஆசைகள்
கனவாகச் சஞ்சரி்ககும்
கொஞ்சம்
கற்பனை இருக்குமெனில்
கவிதையாய் சஞ்சரி்க்கும்.

ஆன்மாவின்
நெடிய யாத்திரையில்
எண்ணிலாக் காட்சிகள்

இதய வானில்
இன்ப முகில்கள்
தாலாட்டும் போது
கால முட்களின்
கவலைக் கீறல்கள்
பள்ளி ஆசிரியர்
தேர்வுத் தாள் திருத்தும்
பணிக்கையாய் விழுகிறது.

தன்னைத் தானே
உணராததால்
தலை கால் தெரியாத
தத்துவக் குப்பைகள்
சேமிக்கப்படுகின்றன.

சிருஷ்டிக்குள்ளே நடக்கும்
சிலம்பாட்டத்தில் தான்
எத்தனை மகிழ்ச்சி.

வெற்றி
மனிதனை விழுங்குகிறது
தோல்வி
சிந்திக்க வைக்கிறது.

இரண்டையும்
கண்டு
நகைக்கத் தெரிந்தால்
ஞான வெளியில்
நாட்டியம் ஆடலாம்...

சனி, 23 ஜனவரி, 2010

கவிதைகள்


காதலனுக்கு ஒரு நினைவூட்டல்

அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும் அழியாமல் இருக்கலாம்.

நினைவிருக்கிறதா ?
ஒரு- இலையுதிர் காலத்திற்குப் பின்
அந்தக் காடுகளில்
தங்க நிறத்தில்
தளிரிலைகள்
துளிர்க்கத் துவங்கியபோது
நம் காதலும் துளிர்த்தது.

தளிரிலைக் காம்புகளி்ல்
சுரக்கும் தேனாய்
நம் காதலும் கனிந்தது.

அது ஒரு மார்ச் மாதம்
அப்போது அந்த மரங்கள்
பூக்களை சுமக்கத் துவங்கியது.

பூக்களின் வாசமும்
நம் காதலும்
ஊருக்குள் வீசத் தொடங்கியது.

ஒரு ஜூன் மாதத்தில்
வெடித்துச் சிதறும்-அதன்
காய்கள் போல்
நாம்-கலகலவென
பேசி சிரித்து மகிழ்ந்திருந்தோம்.

திருமணம்-குறித்து
நான் பேசிய போதெல்லாம்
நீ- அந்த மரத்தின்
பிசின் போல்
நாள்களை
இழுத்துக் கொண்டே போனாய்...

அப்புறம்
ஓர் நாள்-அது
அறுந்து விட்டது.

அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும்......

(ஹிவியா பிரசீலியன்ஸ்-ரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர்)

கவிதைகள்

கொஞ்சம் தண்ணீர்... நிறைய...


எப்போதாவது
வெடித்து வரும்
பால்ய கால எண்ணங்களில்
இதுவும் ஒன்றாகி விட்டது.

பள்ளிக்கூட விடுமுறையென்றால்
யுத்தம் கால்வாயோடு தான்-
கால்வாய் தீப்பிடித்துக் கொள்ளும்.

குண்டன் குமரேஷன்
குதிக்கும் போது
தெறி்க்கும் தண்ணீர்
வானம் தொடும்.

தவளை நீச்சலிடும்
பெற்றி்க் கோட் குமரிகளின்
முதுக்குப் புறங்களில்-
காற்றின் சில்மிஷத்தில்
பலூன்கள் பூக்கும்.

தொட்டு விளையாடுகையில்
துணி துவைக்கும்
மாமிகளின் இடையில் புகுந்து ஓடி
அறுப்புக் கேட்பது அலாதியானது.

டவுசருக்கு விடை கொடுத்து
ஆடும் 'அது'களோடு
வெட்டிப் போட்ட வாழை மரம்
சுமந்து வந்து
பயணம் போகும் பையன்களிடம்
மாலுமிக் கனவுகள்.

மான்களுக்கு
தூண்டில் போடும் வயதில்
மீன்களுக்கு
தூண்டில் போடும் வாலிபர்களின்
வால் பிடித்து நிற்கும்
சிறார் கூட்டம்.

இப்போதெல்லாம்
தொலைக்காட்சி்ப் பெட்டி வயர்களில்
சிக்கிக் கிடக்கிறார்கள்
சிறார்கள்.

கால்வாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
கொஞ்சம் தண்ணீரும்
நிறைய சாக்கடையுமாய்....

பத்து கட்டளைகள்


பத்து கட்டளைகள்

ஒரே வாரிசாக இரு
அதற்கு மேலென்றால்
மம்மியை சபி.

தாய் மொழி தவிர்.

செல்வச் செழிப்பிற்கு
டாடியை புகழ்.

பெண்ணென்றால்
முக்கால் நிர்வாணம் கொள்.

ஒரு முறையேனும்
கருக்கலை.

இணையை
வெளிநாட்டில் கொள்.

நேரமிருந்தால்
பிள்ளை பெறு.

ஊரிலுள்ள
மம்மிக்கும் டாடிக்கும்
முகம் காட்டாதே
பணம் காட்டு.

முடிந்தால்
ஹோமில் சேர்த்து விடு.

கடைசியில்
அனாதையாய் சாகவிடு.

சனி, 16 ஜனவரி, 2010

குழந்தைகளை கிழிக்கும் புத்தகங்கள்

குழந்தைகளைக் கிழிக்கும் புத்தகங்கள்
  • ஓ...
    குழந்தைகளே..
    அறிவீர்களா
    எனது பள்ளி நாட்களை.. ?
  • இறுக்கிக் கட்டிய நிக்கரும்
    ஊக்குக் குத்திய சட்டையுமாய்
    அழகான நாட்கள் அவை.
  • மூலை உடைந்த சிலேட்டும்
    அட்டைக் கிழிந்த தமிழ்ப் புத்தகமும்
    அதிக பட்ச சுமைகள்.
  • அ.. ஆ...
    உயிர் எழுத்துக்கள் படித்து விட்டாலே
    உலகம் படித்த சந்தோஷம்.
  • நவரைப் பச்சிலைகள்
    அழிப்பான்களாகும்.
    மயில் பீலிகள்
    புத்தக இடுக்குகளில்
    குட்டி போடும்.
  • மழை நாட்களில்
    சிலேட்டு குடையாவதால்
    டீச்சர் போட்ட நட்சத்திரம்
    அம்மாவின் கண் படாமலேயே
    அழிந்து போகும்.
  • மாலைப் பொழுதுகள்
    டயர் வண்டியோ
    நொங்கு வண்டியோ
    உருட்டுவதில்
    ஓடிச் செல்லும்.
  • ஓ...
    குழந்தைகளே
    அறிந்தீர்களா ...
    எனது பள்ளி நாட்களை ..?
  • இப்போதெல்லாம்
    எனது ஐன்ஸ்டீன் கனவுகள்
    உங்கள் முதுகில் சுமத்தப்படுகிறது.
  • உங்களின் பொம்மைகளைப் பறித்து விட்டு
    புத்தக் கட்டுகள் தந்து விட்டேன்.
  • நீங்களும் தான்
    சுமை சுமந்து
    சோர்ந்து போயிருக்கிறீர்கள்.
    காலையில் மாலையில் இரவினில்
    ஓயாது உங்களை
    புத்தகங்கள்
    துரத்திக் கொண்டிரு்க்கின்றன.
  • புத்தகங்கள் கிழித்த
    காயங்களுடனேயே தூங்கி விடுகிறீர்கள்
    ஒவ்வொரு நாளும்....