வியாழன், 14 பிப்ரவரி, 2013

மனோ ரஞ்சன் தாஸ்

அறிவாயா... மனோ
உனது மரணம்
இத்தனை இதயங்களை
கலங்க வைக்குமென்று

அறிவாயா... மனோ
உனது மரணத்தால்
இத்தனை இதயங்கள்
கண்ணீர் வடிக்குமென்று..


பியோதர் தஸ்தயெவ்ஸ்கியையும்
கலீல் ஜிப்ரானையும்
பாப்லோ நெரூடாவையும்
நம் மண்ணில்  
நடமாடவிட்டவன் நீ..

சுதந்திர
பாலஸ்தீனமும்
தமிழீழமும்
உனது பேச்சுப் பந்தியில்
பரிமாறப்படாத நாளேது ?

இந்திய விடுதலை வரலாற்றில்
மறைக்கப்பட்ட வீரர்கள் மீது
உனக்கு ரகசிய
காதல் இருந்தே....

குலசேகரத்தின்
ஒரே கவிஞன் நீ..
உயிர் கசியும் கவிதைகளை
உன்னால் மட்டுமே எழுத முடியும்..

இந்த
அழுக்குச் சமூகத்தின்
அவலங்களுக்கெதிரான
அறைகூவலை
நீ விடுத்துக் கொண்டேயிருந்தாய்..

அரங்குகளில்
உயிருள்ள சொற்களை
உன்னால் மட்டுமே
உலவ விடமுடியும்...

உன் மன அழகைச் சொல்லும்  மனோ..
உன் கையெழுத்து.

பூவுலகின் நண்பன் நீ...
நம் பகுதியில்
மலைகள் உடைக்கப்பட்ட போது
மனம் கலங்கினாய்..
பாறைகள் உடைக்கப்பட்டபோது
பதறித் துடித்தாய்...

செடிகளின் ஸ்னேகிதன் நீ..
உனது செய்கைகளுக்கு
செடிகள் தலையாட்டும்
பூக்கள் புதுப் பிறப்பு எய்தும்..

என்ன செய்வது-ஒரு
பொன்னுலகம் காண பூபாளமிட்ட
உன்னோடு 
பொருளாதாரம் பூசல் செய்துவிட்டது.

அறிவாய்.. மனோ
அறிவாய்...
உனது மரணம்
இத்தனை இதயங்களை
கலங்க வைக்குமென்று...

ஆம். மனோ..
வாழும் போது
மானுட நேசம் கொண்டு வாழ்ந்தவன் நீ...
மனிதனாக வாழ்ந்தவன் நீ..











வியாழன், 17 ஜனவரி, 2013



வேலம்மாவின்  ஆடுகள்

 ரு வாரத்திற்கு மேலாக பெய்து வந்த மழை இரண்டு நாட்களாக சற்ற தணிந்திருந்தது. மழை மங்காரம் இருந்து கொண்டுதானிருக்கிறது. அந்த ரப்பர் தோட்டத்தில் அதிகாலையில்  பால்வெட்டு முடித்த ஆண், பெண், பால்வெட்டுக்காரர்கள் கையில் இரும்பு வாளியுடன் பால் சேகரிப்பில் தீவிரமாய் இருந்தனர். மழை மங்காரம் அவர்களை விரைவாய் செயல்பட வைத்தது. மழை பெய்துவிட்டால் சிரட்டைகளில் வடிந்திருக்கும் பால் முழுவதும் வீணாகிவிடும்.
   ஆடிக்காற்று உலர் கிளைகளை ஒடித்துப் போட்டிருந்தது. பள்ளிக்குச் செல்லாத பதின் பருவத்துப் பெண் பிள்ளைகள் ஒடிந்து கிடந்த காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். தோட்டத்தின் இடையில் பாம்பு போல் நீண்டு கிடந்த மனித காலடித்தடத்திலான வழிப்பாதை தண்ணீரும், சகதியுமாய்க் கிடந்தது.  சகதியில் கால் படாதவாறு எட்டி வைத்து நடந்தாள் வேலம்மா. ஆலஞ்சோலை ஊர்க்காரி வேலம்மா. இரண்டு பெண்பிள்ளைகளின் தாய். கையில் ஒரு  துணிப்பையில் பணம் வைத்திருந்தாள். பேத்தி பிறந்த சந்தோஷம் முகத்தில் இருந்தது.

    'அடகுக் கடைக்கு போய்விட்டு, அப்படியே முறுக்குக்கும், பலகாரத்திற்கும் சொல்லணும்... குழந்தைக்கு ஐந்தாறு உடுப்புகள் எடுக்கணும்...'   அவள் நடையின் வேகத்திற்கேற்ப மன ஓட்டமும் இருந்தது.
  "தள்ளயும்.. பிள்ளயும்.. சொகமா இருக்கா.. ஒரு எட்டு வந்து பாக்கணமிண்ணு நெனச்சேன்... நடக்கல.."
ரப்பர் மரங்களிலிருந்து பால் சேகரித்துக்  கொண்டிருந்த தாசம்மா கேட்டாள்.
  "ம்.. நல்லா.. இருக்கு.."
"எண்ணக்கி வீட்டுக்கு போறாளாம்..?"
"தொண்ணூறு கழிஞ்சாச்சு ... ஞாயிறாச்ச வீட்டுக்கு அனுப்பணும்.."
"ஆடுகளயெல்லாம் வித்தாச்சுண்ணு கேள்விப் பட்டனே.. நல்ல வெல கெடச்சா ?"
"ஆமா.. கெடச்சி..." புன்முறுவலுடன் பதில் சொல்லிக் கொண்டே நடையின் வேகத்தைக் கூட்டினாள் வேலம்மா.
இன்னும் ரெண்டு தோட்டம் தாண்டியாச்சிண்ணா ரோடு வந்திரும். அப்புறம் கடையலுமூடு முக்கு அடகுக் கடைதான்
வேலம்மா பள்ளிப்படிப்பை தாண்டாதவள். ஒவ்வொரு முறையும் ரப்பர் தோட்டங்களை கடக்கும் போதும், கயிற்றில் கட்டாத ஆடுகளாய்  மனசுக்குள் எண்ணங்கள் துள்ளித் திரிந்து கொண்டிருக்கும்.
இந்த ரப்பர் மரங்கள் ஒருவகையில் நடமாடமுடியாத  பசுக்கள்?  வரிசையாய் சீராய் நிற்கும் மரங்கள் தான் எத்தனை அழகு ? சம வாய்ப்புகளும், வசதிகளும் கிடைத்து விட்டால் மனிதர்களும் ஒரே சீராய் வேறுபாடற்றவர்களாய் இருப்பார்களல்லவா...?
 இடையில் சிரட்டைகளுடன் நிற்கும் மரங்கள் பெருமாள் கோவில் பிரகார தீபலட்சுமிகள்  போல் அல்லவா உள்ளன ?
      செல்வமணி பெருவட்டர் தோட்டம் வந்த போது எண்ணம் திசைமாறியது. செல்வமணி பெருவட்டர் தோட்டத்தில பச்சைப் பசேலென செடிவள்ளி படர்ந்து கிடந்தது. எப்பவுமே அப்படித்தான். நல்ல வெயில் காலத்திலேயும் பெருவட்டர் தோட்டத்தில வந்தா ஆடுகளுக்கு  ஒரு கட்டு செடிவள்ளி பறிக்கலாம்.  வேலம்மாவிற்கு  அவளது  ஆடுகள் ஞாபகம் வந்தது. வெள்ளையும், செவலையுமான ஆடுகள், மனக்கண் முன்னே துள்ளிக் குதித்தன. என்ன செய்வது, பேற்றிற்கு வந்த  மகளெ புருஷன் வீட்டுக்கு  அனுப்பணுமே....மேலும் வேகமாக நடந்தாள்.

   கடையலுமூடு முக்கு அடகுக் கடை வந்து விட்டது.
கடைக்குள் நுழைந்தவள்,  அங்கிருந்தவனிடம்  அடகு கார்டை கொடுத்து "உருப்படியை திருப்பி எடுக்கணும்"  என்றாள்.
கார்டை வாங்கிய கடைக்காரன் ரெஜிஸ்டர் புத்தகத்தை எடுத்து கணக்கு பார்த்தான்.
"வட்டியும் மொதலும் சேர்த்து இருபத்தி ஏழாயிரம் ரூபா வருது". கடைக்காரன் சொன்னான்.
துணிப்பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.
பணத்தை வாங்கிய கடைக்காரன் இடது கை பெருவிரலை வாயில் வைத்து எச்சில் படுத்தி எண்ணத் தொடங்கினான். இரண்டு மூன்று  நோட்டுகளை எண்ணியவன், எண்ணுவதை நிறுத்திவிட்டு ரூபாய் நோட்டுகளை தனித்தனியாக பிரித்துத் பார்த்து...
"இந்தப் பணத்தை யார் குடுத்தா..." என்று கலவர முகத்துடன் கேட்டான்.
"என்னவாம்" பதற்றத்துடன் கேட்டாள் வேலம்மா.
"அவ்வளவும் கள்ள நோட்டு"
உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருந்தது வேலம்மாவிற்கு.
கண்கள் சொருகி சுவரோரமாய் சாய்ந்தாள்.

ரண்டு நாட்களாக எழுந்திருக்கவில்லை வேலம்மா.  ஆத்திரமும், அவமானமுமாக இருந்தது. போலீஸ் விசாரணையில் நிறையவே நிலை குலைந்திருந்தாள். அருகில், வேலைக்குச் சென்ற இடத்திலிருந்து திரும்பி வந்த அவளது கணவனும், கைக்குழந்தையுடன் மகளும்  அமர்ந்திருந்தனர். மகப்பேறுக்குப் பின் மகிழ்ச்சியால் பூரித்துக்கிடந்த மகளின்  முகம், வாடிய பப்பாளிப் பழம் போல் மாறியிருந்தது. வேலம்மாவின் கண்கள் குழந்தையைப் பார்த்தபடியே இருந்தன. அது கால்களை உதைத்தவாறு அக்களித்துக் கொண்டிருந்தது.  "ம்மே.. என துள்ளி வரும் அவளது ஆடுகள் தான் அவள் மனக்கண் முன் வந்தன.
ஆடுகளின் "ம்மே.." சத்தம் தான் அவளை தினம்தோறும் அதிகாலையில் எழுப்பும். வெள்ளையும், செவலையுமான ஆடுகள். சுற்றிச் சுற்றியே வரும்.
களியல் பள்ளிக்கூடத்தில்  பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இளைய மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால், வேலம்மாவிற்கு நாள் முழுக்க ஆடுகளின் பாடுதான். புண்ணாக்கு கலந்த தண்ணீர் கொண்டு போனால் தூரத்திலிருந்தே எம்பிக் குதிக்கும், மேச்சலுக்கு கட்டுவது, தளை கொண்டுபோடுவது சீக்கு  பார்ப்பது  என ஆடுகளுடன் கழியும் அவள் பொழுதுகள். அருமனை, குலசேகரம் சந்தைக்கு  சென்றால், ஆடுகள் ரப்பர் காட்டில் தன்னந்தனியே கெடக்கே என்ற பரபரப்பு தான் அவளுக்குள் நிரம்பிக் கிடக்கும். வனப்பகுதியிலிருந்து புலிப்பாய்ச்சலில் வரும் செந்நாய்களிடமிருந்து ஆடுகளை காப்பது பெரும்பாடு. எப்போதேனும் ஆடுகள் "ம்மா... என்று உரத்து சத்தம் எழுப்பினால் வேலம்மாவின் உயிர் கூட்டிலிருக்காது. செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டு விட்டு ஆடுகள் மேயும் இடத்திற்கு ஓடுவாள். ஒரு முறை அப்படித்தான் காட்டுக் கத்தலாக கத்தின ஆடுகள். ஓடிப்போனாள் வேலம்மா, அதற்குள் செந்நாய்கள் இரண்டு ஆடுகளை காவு வாங்கியிருந்தன. ஆடுகளை விற்றுத் தள்ளு என்று தான் சொல்வான் வேலம்மாவின் கணவன். இல்ல.. நிக்கட்டு ஏதாவது ஆத்திரம் அவசரத்துக்கு உதவுமில்லயா.. ஆடுகளைப் பிரிய மனமில்லாமல் பதில் சொல்வாள். இப்போது விற்க வேண்டிய நிர்பந்தம் வந்தது . சிறியதும் பெரியதுமாய்  ஆறு ஆடுகள்.

       அரசாங்க ஆஸ்பத்திரியில் தான் மகளை, பிரசவத்திற்காக சேர்க்க வேண்டுமென்று எண்ணியிருந்தாள் வேலம்மா. 'கொடுத்த' இடத்தில் இருந்து  வந்த முணுமுணுப்பும், நெருக்கடியும் தான், குலசேகரத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவளை சேர்க்க  வேண்டியதாகிவிட்டது.  பிரசவ செலவுக்கும், குழந்தைக்கு அரஞாண் கொடி போடுவதற்கும் மகளின் தங்கக் நகைகளை வாங்கி அடகு வைத்திருந்தாள் வேலம்மா. இப்போது அவளின் நகைகளைப் திரும்பிக்  கொடுத்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஆடுகளை விற்று நகைகளை திருப்பியெடுத்துக் கொடு என்று கோட்டயத்திற்கு கொத்தனார் வேலைக்கு  போகையில் சொல்லிவிட்டுப் போயிருந்தான் வேலம்மாவின் கணவன். ஆடுகளை விற்றபோது கள்ள ரூபாய் தாள்களைக் கொடுத்து ஏமாற்றிவிட்டான் கேரள வியாபாரி. 'ல்லாத்துக்கும் அந்த புரோக்கர் கிழவன்தான் காரணம்'. வேலம்மா விசும்பினாள்...
"புள்ளா நான் சொல்லுதத கேளு"
"எனக்க வீட்டுக்காரருகிட்ட ஒரு வாக்குகூட கேக்கண்டாமா ?"
"இல்ல புள்ளா ஆறு ஆட்டுக்கும் முப்பது ஆயிரம் ரூபா.. இதுக்க மேல ஆரு தருவா.." புரோக்கர் பேசிக்கொண்டிருந்தார்.
"வீட்டுக்காரரு எங்கபோயி" ஆடு வாங்க வந்த கேரள வியாபாரி இடைமறித்துக் கேட்டான்
"கோட்டயத்துல கெட்டடப்பணி... யாவாரி செல்லுல ஒரு போண் போடுமா..? எங்கிட்ட நம்பரு இருக்கு.."
"இது கேரளா செல்லு இங்கயிருந்து அடிச்சா கிட்டாது.."
"புள்ளா குடுக்கியதுண்ணா குடு.. நல்ல வெல. இல்லண்ணா வேற
ஆளுகிட்ட ஆடு நிக்குது" புரோக்கர்   அவசரம் காட்டினார்.
வந்த யாவாரியை விட வேண்டாம். காரியம் நடக்கும். ஏறக்குறைய நல்ல விலைதான். மனதிற்குள் கணக்குப் போட்ட வேலம்மா மறுத்துப் பேசவில்லை.
முப்பது ஆயிரம் ரூபாய் (?) தாள்கள் கைமாறின. ஆடுகள் ஜீப்பில் ஏற்றப்பட்டன. அந்தப் பகுதியில் நெடுநேரம் கேட்டுக் கொண்டிருந்தது ஆடுகளின் அலறல்.
  ஞாயிற்றுக்கிழமை மகளை கணவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வேலம்மாவும் அவளது கணவனும் தவிப்பில் புலம்பிக் கொண்டிருந்தனர்.
   தூரத்தில் எங்கோ காற்றிலிருந்து வந்தது போலிருந்தது அந்த செய்தி. எல்லா நகையும் போட்டு தாயையும், குழந்தையும் அனுப்புவதாக இருந்தா.. அனுப்பினால் போதுமென்று.