ஞாயிறு, 2 நவம்பர், 2014

திற்பரப்பு குகைக் கோயில்

திற்பரப்பு அருவி அருகே புராதன குகைக் கோயில்!

By ஜே.லாசர், குலசேகரம்

First Published : Dinamani  19 February 2014 
  
குமரி மாவட்டம், திற்பரப்பு அருவிப் பகுதியில் மறைந்திருக்கும் புராதனச் சின்னமான பத்திரகாளி குகைக் கோயிலில் தொல்லியல் ஆய்வு நடத்தி, அதனை வழிபாட்டுத் தலமாக மாற்ற வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு மகாதேவர் கோயில் புகழ்பெற்ற சிவத் தலம். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், வீரபத்திரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயில் 9-ஆம் நூற்றாண்டில், இப்பகுதியை ஆண்ட ஆய்குல மன்னர் ஸ்ரீவல்லபா முதல் தொடர்ந்து வந்த திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் மேம்படுத்தப்பட்டதாக திருவிதாங்கூர் தொல்பொருள் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இக்கோயிலின் மேற்கு வாசலின் எதிரே பரந்து விரிந்து கிடக்கும் பாறைகளின் வழியாக கோதையாறு பாய்ந்து அருவியாக விழுகிறது. இந்த ஆற்றின் கரையில் இரண்டு கல்மண்டபங்கள் உள்ளன. இவை திருவிதாங்கூர் மன்னர் விசாகம் திருநாள் ஆட்சிக் காலத்தில் 1880-1885 ஆண்டுகளில் கட்டப்பட்டவை. இந்த ஆறு முன்காலங்களில் வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து கொண்டிருந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு உள்பட்ட காலத்தில்தான் இதன் போக்கு சற்று திருப்பப்பட்டு திற்பரப்பு அருவியாக மாற்றப்பட்டுள்ளது.

அருவியும் குகையும்: இந்த அருவிப் பகுதியில் ஒரு குகைக் கோயில் உள்ளது. இந்தக் குகையின் முகப்புப் பகுதியை தற்போது அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடத்துக்குச் சற்று கீழ்ப்பகுதியில் காணமுடிகிறது. மகாதேவர் கோயிலின் தெற்கேவுள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இக்குகைக்கு பாதை உள்ளது.

இக்குகைக் கோயிலினுள் பத்திரகாளியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இந்தக் குகைக் கோயிலில் நம்பூதிரிகள் தாந்திரிக பூஜைகள் செய்ததாக கதைகள் உள்ளன.

பத்திரகாளியின் புடைப்புச் சிற்பம்: இதுகுறித்து நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான அ.கா. பெருமாள் கூறியதாவது: திற்பரப்பு அருவி அருகே குகைக் கோயில் இருப்பது ஓர் ஆதாரபூர்வமான உண்மையாகும். 1928-ஆம் ஆண்டு இப்பகுதியில் பெருமழை பெய்து, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின்னர் ஆறு வற்றியது. அப்போதுதான் அருவியின் அருகே ஒரு குகை இருப்பதுகுறித்த செய்தி ஊர் முழுவதும் பரவியது.

அதைத் தொடர்ந்து, திற்பரப்பைச் சேர்ந்த என். கோபாலகிருஷ்ணன் என்பவர் தீப்பந்தத்துடன் குகைக்குள் நுழைந்தார். அவருடன் இளைஞர்கள் சிலரும் சென்றனர். இவர்கள் குகை விரிந்து கோயிலாக மாறுவதைக் கண்டனர். பின்னர் இதுகுறித்த செய்தியை திருவனந்தபுரத்தில் உள்ள தொல்லியல் அறிஞர்களிடம் தெரிவித்தனர்.

இதன்பின்னர் தொல்லியல் அறிஞர் கோபிநாதராவ் ஆதரவுடன் தொல்லியல் ஆய்வாளரான தக்கலையைச் சேர்ந்த டி.கே. ஜோசப் இந்தக் குகையைப் பார்வையிட்டு, குகை பற்றிய செய்தியை "கேரளா சொசைட்டி பேப்பர்ஸ்' இதழில் 1928-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இக்குகையில் முகப்புப் பகுதி 2.10 மீட்டர் உயரமும், 90 செ.மீ. அகலமும் கொண்டது. இதன் வழியாக உள்ளே சென்றால் குகையின் உள்ளே செல்வதற்கான பாதை உள்ளது. இந்தப் பாதை 45 மீட்டர் வரை நீள்கிறது. இப்பாதையின் இரண்டு புறமும் வாசல்கள் உள்ளன. இதில் வலதுபுற வாசலையடுத்து 4.50 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய அறை உள்ளது. இதில் பத்திரகாளி புடைப்புச் சிற்பமாக இருக்கிறாள். இந்த அறையின் எதிரே உள்ள வாசலையடுத்து 6.25 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், 2.10 மீட்டர் உயரும் கொண்ட அறை இருக்கிறது.

இந்த அறையில் தாந்திரிக பூஜைகள் நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அஸ்தி கலசங்கள் இங்கே இருந்துள்ளன. இக்குகையின் வழியே தொடர்ந்து நடந்தபோது, குகையின் வழி சுருங்கிச் செல்வதைக் கண்டிருக்கின்றனர். இதன் இறுதிப் பகுதி 60 செ.மீ. அகலமுடையதாக உள்ளது. இப்பாதையின் முடிவில் 24 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலம் 2.50 மீட்டர் உயரமுடைய விசாலமான கூடம் உள்ளது. இந்தக் கூடம் அருவி பாயும் இடத்திலிருந்து 180 மீட்டர் தொலைவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தக் கூடத்தின் மேல் வடகிழக்கில் மகாதேவர் கோயில் உள்ளது. மகாதேவர் கோயிலின் தெற்கேவுள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இக்குகைக் கூடத்துக்கு வரலாம். தற்போது இந்த நிலவறை அடைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குகைக் கோயிலில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டு, இதனை ஒரு வழிபாட்டுக்குரிய தலமாக மாற்ற அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் முன்வர வேண்டும் என்றார்.

பக்தர்கள் கருத்து: திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது. திற்பரப்பு பகுதி ஆன்மிக மணம் கமழும் புண்ணிய பூமியாகும். இங்குள்ள பத்திரகாளி குகைக் கோயில் ஒரு புராதனமான தொல்லியல் சின்னமாகும். இக்குகைக்குள் பத்திரகாளியின் சிற்பம் மற்றும், வழிபாட்டு அறைகள் உள்ளன. இதனை தொல்லியல் துறையினர் மூலம் ஆய்வு செய்து மின்சார வசதி ஏற்படுத்தி வழிபாட்டுக்குரிய தலமாக மாற்ற வேண்டும். இதன்மூலம் புராதனமான ஒரு தலம் மக்களின் வழிபாட்டுக்குக் கிடைக்கும். இத்தலம் இந்திய அளவில் புகழ் பெற்று, அதிக அளவில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை தரும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

பட  விளக்கம்:  குகையின்  முகப்பு.
தினமணி நாளிதழில் 19-2-2014 ல் வெளி வந்த  செய்தி.