திங்கள், 26 ஜனவரி, 2015


பத்மநாபா தியேட்டரும்... நான்கு ரூபாயும்...

First Published : 25 January 2015 02:00 PM IST 

லாசர் ஜோசப்




















நாகர்கோயில் பேருந்து நிலையத்திற்குள் பஸ் வந்தது.
 நேற்று இரவில் சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ். இனியும் இதே பஸ்சில்தான் குலசேகரம் செல்ல வேண்டும். பயணக் களைப்பு உடலைச் சோர்வடைய வைத்திருக்கிறது.
 ஓட்டுநரும், நடத்துநரும் இறங்கி டீ குடிக்கச் சென்றனர். எனக்கு டீ குடிக்க வேண்டுமென்று தோன்றவில்லை. ஊருக்கு வந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. குடும்பத்தில் நல்லது கெட்டது என எதிலும் பங்கேற்கவில்லை. சினிமாவில் உதவி இயக்குநராக காலங்கள் போனது தெரியவில்லை. இயக்குநராகாமல் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்ற சபதத்தால் திருமணம் இன்னும் நடைபெறவில்லை. எப்போது இயக்குநராவேன் என்றும் தெரியவில்லை.
 ஊரில் நண்பன் மகேசின் அம்மா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்கள். மகேசு தான் போனில் அழுதவாறு தகவல் சொன்னான். மனது பாரமாகிக் கிடக்கிறது ஏதேதோ நினைவுகள் மனதை அழுத்துகிறது. ஊருக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
 ஓட்டுநரும், நடத்துநரும் பஸ்சில் ஏறிக் கொண்டனர். கூடவே, வேறு சில பயணிகளும் ஏறினர். பஸ் புறப்பட்டது.
 எனக்கு முன் இருக்கையில் இருந்த யாரோ ஒரு பயணி குலசேகரம் பத்மநாபா தியேட்டர் ஸ்டாப் என்று டிக்கட் கேட்டார்.
 பத்மநாபா தியேட்டர்...?  எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதை உணர்ந்தேன்.

 திருநந்திக்கரை முத்துசாமியின் ஹோட்டலுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த குலசேகரம் பத்மநாபா தியேட்டரின் சாக்குத் தட்டியில், ஊமை விழிகள் சினிமாவின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த நிமிடத்திலிருந்து அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்குள் ஏற்பட்டுவிட்டது. குலசேகரத்திலுள்ள தியேட்டர்களுக்கு "ஊமை விழிகள்' படம் எப்போது வரும் என்று நான் காத்திருந்தேன். அந்த அளவுக்கு அந்த படத்தின் மீதான ஆவலை என்னுடைய 9 பி வகுப்பிலுள்ள கண்ணனும், குமரேசனும் ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் இருவரும் யாருடனோ நாகர்கோயில் ராஜேஷ் தியேட்டருக்குச் சென்று அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்திருந்தனர். படத்தின் கதையை வகுப்புகளின் இடைவேளைகளில் அவர்கள் சொல்லியபோது நான் மட்டுமல்ல எங்கள் வகுப்பிலுள்ள சுரேஷ், சரவணன், அலெக்ஸ், பீட்டர் என எல்லோருக்கும் மிரட்சியும், பரவசமும் ஏற்பட்டது.
 ""திகில் படம்... இல்லியாடே...'' என்றேன் கண்ணனிடம்.
 ""திகிலும்... கொலையும் தான்... '' என்றான் கண்ணன்
 ""இது போல படம் நான் இதுவரை பார்த்ததேயில்லை'' என்றேன்.
 ""படத்திலே சில சீன்ல நம்ம பயந்திருவோம்...'' அவன் பதில் சொன்னான்.
 ""பாட்டெல்லாம் சூப்பர்.... சினிமா காலேஜ் மாணவர்கள் எடுத்தப் படமாக்கும்...'' குமரேசன் பரவசமாய் சொன்னான்.
 ""கல்யாண வீடுகள்ல இப்ப இந்த படத்துக்கப் பாட்டுதான்...'' என்று அலெக்ஸ் இடையில் புகுந்தான்.
 ""படத்தில அடி உண்டா...'' இது பீட்டர்
 ""வித்தியாசமான அடி...'' என்று அதற்குப் பதில் சொன்னான் கண்ணன்.
 இது போன்ற ஒரு படத்தை பார்க்காமலிருந்து விடக்கூடாது என துடித்தோம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களான நாங்கள் தியேட்டர்களுக்குச் சென்று அத்தனை எளிதில் படத்தைப் பார்த்து விடமுடியுமா என்ன.. அதுக்கு காசு வேணும் இல்லையின்னா யாராவது பெரியவர்கள் கூட்டிகிட்டு போகணும்

 இப்போது பத்மநாபா தியேட்டருக்கு "ஊமை விழிகள்' படம் வந்து விட்டது. என்னிடம் சினிமா டிக்கட்டிற்கான காசு கூட இல்லையே... யாராவது இலவச டிக்கட்டாக என்னை அழைத்துச் செல்வார்களா... யாரிடம் கேட்பது.... யாரிடமாவது இரண்டு ரூபாய் கடன் வாங்கிவிட்டு தனியாக படத்திற்கு சென்றுவிடுவோமா... தனியே படத்திற்குச் சென்றால் வீட்டில் உதை விழாதா.... அச்சத்திலும், குழப்பத்திலுமாக இரண்டு நாள்கள் ஓடிவிட்டன. அன்று ஞாயிற்றுக்கிழமை திங்கள்கிழமை மீண்டும் பள்ளிக்கு செல்லவேண்டுமென்பதால் அன்றே படத்தைப் பார்த்தாகவேண்டுமென்ற தவிப்பில் துடித்தேன். அப்போதுதான் மகேசின் ஞாபகம் வந்தது.
 மகேசு என்னைவிட ஒரு வயது சிறியவன். 8 ஏ இல் படிக்கிறான். அவனும் நான் படிக்கும் திருநந்திக்கரை பள்ளிக்கூடம்தான். அவன் அம்மா வீட்டோடு நடத்தும் விறகுக் கடைக்கு அடிக்கடி விறகு வாங்க நான் சென்றதால் எனக்கு நெருக்கமாகிவிட்டவன். சிவன் கோயில் தோட்டத்தில திருட்டு மாங்காய் பறித்து தின்போம். அவனும், நானும் எனது தம்பியும் திருநந்திக்கரை பாலத்திலிருந்து கால்வாய்க்குள் குதித்து காலம் நேரம் தெரியாமல் நீச்சல் அடிப்போம்... தண்ணீரில் தொட்டு விளையாடுவோம். காசு விஷயத்தில் மகா கஞ்சன் அவன். 5 பைசா கிடைச்சாக் கூட கூட்டி வைக்கணுமிண்ணு தான் நெனப்பான். பள்ளியில், வகுப்பு இடைவேளைகளில் காம்பவுண்டுக்கு வெளியே நிற்கும் ஐஸ் காரனிடம் எல்லோரும் ஐஸ் வாங்கிக் குடிக்கும் போது இவன் மட்டும் காசு செலவாகுமே என வேடிக்கைப் பார்த்து நிற்பான்.
 அப்பா கேரளாவிற்கு வேலைக்குச் சென்றிருந்தால் சைக்கிள் வீட்டிலேயே இருந்தது. நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு மகேசின் வீட்டிற்குப் போனேன்.
 ""மகேசு...'' என குரல் கொடுத்த போது வெளியே வந்தான்.
 ""படத்துக்கு வாரியால... ஊமை விழிகள் படம்''. மெல்லியக் குரலில் கேட்டேன்.
 ""படத்தில அடி உண்டா...''
 ""உண்டு...''
 ""யாரு கூட்டிகிட்டுப் போவா....''
 ""நம்ம ரெண்டு பேரும் தனியா...''
 ""அப்ப... நான் வரல்ல...''
 ""லே... இன்னைக்குப் போனதான் உண்டு அடுத்த வாரம் படம் மாறியிரும்...''
 ""வீட்டுல தெரிஞ்சா...''
 ""மாட்டினி ஷோ தானல... வீட்டுல தெரியாம போயிட்டு
 வந்திரலாம்...''
 ""யாராவது வீட்டுல சொன்னா...''
 ""அடி கெடச்சா வாங்கிக்கிடுலாம்பில...''
 ""ரூபா இருக்கால...''
 ""இல்ல... நீ கூட்டி வைச்சிருக்கிறதுலயிருந்து எனக்கு சேர்த்து நாலு ரூபா எடுத்துக்கிட்டுவா... எனக்குள்ள ரெண்டு ரூபாய, ரெண்டு நாளயில்ல ஒனக்கு திருப்பித் தாறேன்... சைக்கிளுக்கு எங்கிட்ட 50 பைசா இருக்கு...''
 மகேசு கையைப் பிசைந்தான், பிறகு ""சரி... ''என்று தலையசைத்தான்.
 ""எனக்குப் பசிக்கல.. ஒனக்குப் பசிக்குதா...'' எனக் கேட்டேன்
 ""பசிக்குது...'' என்றான்.
 ""அப்ப நீ சோறு சாப்பிட்டுக்கிட்டு வா... நான் வெளியில நிக்கிறேன்...'' என்றேன்.
 என்னையும், தம்பியையும் சைக்கிளில், பின்னாலும், முன்னாலும் வைத்து இரண்டு முறை பத்மநாபா தியேட்டருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அப்பா. ஒரு முறை "சிகப்பு மல்லி' மற்றொரு முறை "நான் சிகப்பு மனிதன்'. அப்பாவுக்கு சிகப்பு படங்கள் தான் பிடிக்கும். தியேட்டரில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியா டிக்கட் கவுண்டர் இருக்கிறது. சில ஆண்கள் அவர்களுக்கான கவுண்டரில் வரிசையாய் நின்று டிக்கெட் வாங்கிவிட்டு தாங்கள் அழைத்து வந்த பெண்களையும், குழந்தைகளையும் கேட் வழியாக உள்ளே அழைத்துச் செல்கின்றனர். தம்பியும் நானும் அப்பாவுடன் வரிசையில்தான் நிற்போம்.
 டிக்கெட் எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இரண்டு பெரிய கருங்கல் சுவர்களுக்கிடையே நடந்து செல்ல வேண்டும். எங்களுக்கு ஏதோ ஆழமான பள்ளத்திற்குள் நடப்பது போல் இருக்கும். டிக்கெட் வாங்கிவிட்டு வெளியே வந்தால் தான் மூச்சுவெளியே வரும்.
 ஒரு முறை படம் தொடங்குவதற்கு முன்பு ...
 ""பத்மநாபாண்ணா யாருண்ணு தெரியுமால...'' என்று அப்பா என்னிடம் கேட்டார். அப்போது தம்பி முந்திக் கொண்டு, ""சுவாமி... தெய்வம்... திருவிதாங்கூர் ராஜாக்களின் தெய்வம்...'' என்றான்.
 ""பரவாயில்லியே.... நல்லா தெரிஞ்சு வைச்சிருக்க....இவனுக்குத் தான் தெரியல்ல.. இவனுக்கு எப்பவும் சினிமா... சினிமான்னு தான் நெனப்பு....'' அப்பா என் தோளில் விரலால் குத்தியவாறு சொன்னார். தம்பி சத்தமாய் சிரித்தான்.
 ""நம்ம மாவட்டத்திலவுள்ள பெரிய டூரிங் தியேட்டருல இந்த தியேட்டரும் ஒண்ணு... இந்த தியேட்டருல நடுவுல தூண் இல்ல பாத்தீங்களால...'' அப்பா மீண்டும் தொடர்ந்தார்.
 அப்போது ""நடுவுல தூண் இருந்தா படம் மறையும் இல்லியா அப்பா...'' என்று தம்பி விளக்கம் சொன்னான். தரை, பெஞ்ச், முதல்வகுப்பு, பால்கனி என தரம் பிரிக்கப்பட்ட தியேட்டரின் இருக்கைகளைப் பார்த்த தம்பி, ""அப்பா... ஒரு நாள் பால்கனிக்கு கூட்டிகிட்டு போகுமாப்பா...?'' எனக் கேட்டான். உடனே நான்.... ""சாருக்கு பால்கனி கேக்குதாக்கும்.... எங்கயிருந்தாலும் ஒரே மாதிரிதான் படம் தெரியும்... எனக்கு நாம இருக்கிற இந்த பெஞ்சை விட தரை டிக்கட்டுல இருந்து படம் பார்த்தா நல்லா இருக்குமுண்ணு தோணுது.... அப்பதான் நடிகர்களை கிட்ட இருந்து பார்த்தது போல இருக்கும்....'' என்றேன். படம் தொடங்குவதற்கான மணி ஒலித்தது. பேச்சு நின்றது.
 மகேசு சாப்பிட்டுகிட்டு வெளியே வந்தான். நான் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினேன். மகேசு கேரியரில் ஏறிக் கொண்டான். சைக்கிளின் பெடல்களை அழுத்தமாக மிதித்தேன். சைக்கிள் வேகமெடுத்து தும்பகோடு, ஆரணிவிளை, காவல்ஸ்தலம் என விரைந்தது. சரியாகப் பத்து நிமிடத்தில் தியேட்டர் பக்கம் வந்துவிட்டோம்.
 தியேட்டர் பக்கம் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. கவுண்டர் வரிசை சாலையைத் தொட்டு நின்றது. எனக்குள் திடீரென்று கலக்கம். இந்தக் கூட்ட நெரிசல்ல நமக்கு டிக்கட் கிடைக்குமா... மகேசை வரிசையில் நிற்க வைத்து விட்டு சைக்கிள் வைக்கும் இடத்திற்கு சென்றேன். ஏற்கனவே அங்கு பல சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு நெருக்கமாக எனது சைக்கிளையும் வைத்து விட்டு கையில் வைத்திருந்த 50 காசுகளை கட்டணமாகக் கொடுத்து சைக்கிளுக்கான டிக்கட் பெற்றேன்.
 தியேட்டரில் ஒலித்துக் கொண்டிருந்த சினிமா பாட்டை நிறுத்திவிட்டு "விநாயகனே... வினைதீர்ப்பவனே...' போட்டார்கள். உடனே டிக்கட் கவுண்டர் வரிசையில் மேலும் பலர் இணைந்து கொண்டார்கள். வரிசை மேலும் நீண்டு போனது. நான் மகேசை கண்டுபிடித்து அருகில் நின்று கொண்டேன். டிக்கட் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
 எங்களுக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள் எங்களைப் பிடித்து அகற்றிவிட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
 ""கூட்டத்தைப் பார்த்தால் இன்னக்கி எல்லாருக்கும் டிக்கட் கிடைக்காது போலத் தான் இருக்கு...'' வரிசையில் நின்ற ஒருவன் சொன்னான்.
 எனக்குள் கலக்கம் மேலும் அதிகரித்தது. இந்த நெரிசலில் டிக்கட் எடுத்து விடமுடியுமா...
 சிலர் வரிசையில் முன்னே நின்றவர்களிடம் காசைக் கொடுத்து டிக்கட் எடுக்கச் சொன்னார்கள்..
 ""மகேசு... நமக்கும் முன்னால் நிற்கும் அண்ணன்கள் யாரிடமாவது ரூபாயக் கொடுத்து டிக்கட் எடுக்கச் சொல்வோம்...'' என்றேன்.
 ""ம்...'' என்று தலையாட்டினான்.
 சுருள்முடித் தலையுடன் கட்டம் போட்ட சட்டை அணிந்து வரிசையில் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தான் ஒரு அண்ணண்.
 ""அண்ணா ரெண்டு தரை டிக்கட் எடுத்து தருமா?...''
 ""சரி...''
 மகேசின் கையில் இருந்த நான்கு ரூபாயை வாங்கி அவனிடம் கொடுத்தேன். பின்னர் வரிசையிலிருந்து விலகி கேட்டுக்கு அருகில் அந்த அண்ணனின் வருகைக்காக இருவரும் காத்திருந்தோம்.
 டிக்கட் எடுத்தவர்கள் விரைவாய் தியேட்டருக்குள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த அந்த சுருள் முடி, கட்டம் போட்ட சட்டை அண்ணன் எங்கள் முன்னாள் கடந்துப் போனான்.
 ""அண்ணா டிக்கட்...'' என்று கத்தினோம் அவனைப் பார்த்து
 ""யாதுல டிக்கட்...''
 ""நாலு ரூபா தந்து ரெண்டு தரை டிக்கட் எடுத்துத் தர சொன்னோமில்லியா...''
 ""எப்பம்பில தந்திய...'' என்று கேட்டவாறு அவன் விரைவாக தியேட்டருக்குள் சென்றுவிட்டான்.
 நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.
 ஒருவேளை வேறு யாரிடமாவது டிக்கட்டுக்கு ரூபாயக் கொடுத்தேனா...
 அதன் பின்னர் கவுண்டரைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் அவனைப்போல சுருள்முடித் தலையுடனும் கட்டம் போட்ட சட்டையுடனும் தான் எனக்குத் தெரிந்தனர். யாரிடம் காசைக் கொடுத்தேன்..
 சிறிது நேரத்தில் டிக்கட் கவுண்டர் காலியாகி விட்டது. தியேட்டரின் கதவுகள் அடைக்கப்பட்டன. படம் போட்டு விட்டார்கள்.
 நானும் மகேசும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்... மகேசின் முகத்தில் கோபத்தின் சீற்றம் ஏறியது. கண்கள் சிவந்தன.
 ""நீ...தான்... நீ தான்... எனக்கு நாலு ரூபாயும் தரணும்.... '' என்று என்னை நோக்கி விரல் நீட்டினான்.
 எனக்குப் பேச்சு வரவில்லை. சரி... என்பது போல தலையை மெதுவாய் அசைத்தேன்.
 சைக்கிளின் ஞாபகம் வந்தது எனக்கு. சைக்கிள் வைத்திருந்த இடத்திற்கு ஓடினேன். நூறுக்கும் மேல் சைக்கிள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எனது சைக்கிளை ஒருவழியாகக் கண்டு கொண்டேன். அங்கு நின்ற முதியவரிடம் விஷயத்தைச் சொல்ல முடியாமல் திக்கித் திணறியபோது, அவர், ""சின்னப்பயலுவளுக்கு எதுக்கில சினிமா...'' என முணுமுணுத்தவாறு, பெரும் சிரமப்பட்டு சைக்கிளை எடுத்துத் தந்தார். கூடவே சைக்கிள் கட்டணமான 50 காசுகளையும் திருப்பிக் கொடுத்தார்.
 பசியும், ஏமாற்றமும் உடலைத் தளரச்செய்திருந்தது.
 ""போஞ்சி குடிப்பமா மகேசு...'' என்றேன்.
 ""ம்'' தியேட்டரை ஒட்டியிருந்தக் பெட்டிக் கடைக்குச் சென்று,
 ""இரண்டு உப்பு போஞ்சி...'' என்றேன், கையில் இருந்த 50 காசுகளைக் கொடுத்தவாறு.
 "மடக்... மடக்...' என்று போஞ்சியைக் விரைவாகக் குடித்தோம்... கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது. சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினேன். மகேசு பின்னால் ஏறிக் கொண்டான்.
 இரண்டு மூன்று நாள்களாகவிட்டது. மகேசிற்கு கொடுப்பதாகச் சொன்ன நான்கு ரூபாய் என் கையில் வரவில்லை. மகேசின் வீடு இருக்கும் சிவன் கோயில் தெரு வழியாக பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்து அம்மன் கோயில் தெரு வழியாக சென்று வந்தேன். அப்படியிருந்த போதும் மகேசு வகுப்பின் இடைவேளைகளில் என்னைத் தேடிப் பிடித்து விடுவான்.
 ""நாலு ரூபாய குடு... செந்தில்...'' என்பான்.
 ""ரெண்டு நாள்ல தந்திருவன்...'' என்பேன் நான்.
 ""எத்தன தடவை இப்படி ரெண்டு நாள்ல தந்திருவன்ணு சொல்லுவ... இனி நான் உந்தம்பியிடம் சொல்லியிடுவேன்...'' என்பான்.
 ""தம்பியிடம் சொல்லியிடாதே... அவன் அம்மாவிடம் சொல்லியிடுவான்... அப்புறம் வீட்டுல அடி தான் கிடைக்கும்..'' என்பேன்.
 நான்கு ரூபாயை எப்படிப் புரட்டலாம்... யாரிடம் கடன் வாங்கலாம்... லீவு நாள்ல ரப்பர் தோட்டத்தில கையாள் வேலைக்குப் போகலாமா? என யோசித்து வந்தேன். மகேசு விடாமல் துரத்திக் கொண்டிருந்தான்.
 ஒரு நாள் என்னிடம் வந்தவன்,
 ""இனி உன்னிடம் காசு கேட்க மாட்டேன்...'' என்றான்.
 ""ஏன்...''
 அம்மாவிடம் சொல்லி விட்டேன்...
 ""உண்மையாட்டா.'' எனக்குள் அதிர்ச்சி பரவியது.
 ""ஆமா... நீ எங்க வீட்டுப் பக்கம் வழியாக வந்தால் உன்னைப் பிடித்து உட்கார வைத்து காசை வாங்கி விடுவதாகவும், இல்லாட்டி... உனது சட்டையைக் கழற்றி எடுத்துவிடுவதாகவும் அம்மா சொல்லிச்சு...'' என்றான்.
 நான் நடுங்கி விட்டேன்.
 அவன் அம்மா, வீட்டோடு நடத்தும் விறகுக் கடையில், கடன் சொல்லி விறகு வாங்கிப் போனவர்களிடம் வாய்ச்சண்டைப் போட்டு காசை வாங்குவது பலமுறை பார்த்திருக்கிறேன்.

 அன்று ஞாயிற்றுக்கிழமை சரியாக மாட்டி விட்டேன். மகேசின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
 ""லே... செந்திலு மகேசுக்க வீட்டுக்குப் போய் ரெண்டு கட்டு விறகு வாங்கிட்டு வால...'' அம்மா சொன்னாள்
 ""அம்மா நான் போகல்ல அம்மா.... தம்பிக்கிட்ட சொல்லிவுடு அம்மா...'' அம்மாவிடம் கெஞ்சிப் பார்த்தேன்.
 ""அவன் எடுத்துகிட்டுவந்துகிட மாண்டாம்ல.. நீ தான் போ...'' என்றாள். அவள் குரலில் கோபமும் எரிச்சலும் இருந்தது.
 நான் மீண்டும் தயங்கியபடி நின்றபோது ""நீ போகலயிண்ணா இன்று சோறு வைக்கமுடியாது... பட்டினி தான்.... வீட்டில ஒரு துண்டு விறகு கூட இல்ல...'' என்றாள் அடுப்பினடியைக் கிளறிக் காண்பித்தபடி.
 ""சரி போறேன்...'' என்றேன் தலையைக் கவிழ்த்தபடி.
 அம்மா சமையல் அறையில் ஏதோ பெட்டியிலிருந்து நான்கு ரூபாய் சில்லறைக் காசுகளை எடுத்து என் கையில் கொடுத்தாள்.
 ""ரெண்டு கட்டு விறகு என்ன...''
 ""ம்...''
 ""லே.....போட்டிருக்க கிழிஞ்ச நிக்கற மாத்திக்கிட்டு வேற நிக்கறும் சட்டையும் போட்டுகிட்டுப் போ...''
 ""சரி...''
 ""பயலுக்கு என்ன குழப்பமோ கண்றாவியோ.. வேற எங்கயும் போவணுமா... சைக்கிள எடுத்துட்டு இதுக்குமுன்ன பறந்திருப்பான்... '' அம்மா முணுமுணுத்தாள்.
 நான் சமையல் அறையிலிருந்து நகர்ந்து படுக்கை அறைக்கு வந்து, பின்புறத்தில் கீறல் விழுந்திருந்த நிக்கரை கழற்றிவிட்டு வேறு நிக்கர் அணிந்து கொண்டேன். பின்னர், சட்டையைக் கையில் எடுத்த போது, கைகள் லேசாக நடுங்கின மனதில் பயம் சூழந்துவிட்டது. சட்டையை அங்கேயே வீசிவிட்டு, நிக்கர் மட்டும் அணிந்த நிலையில் சைக்கிள் வைக்கப்பட்டிருக்கும் முன்பக்க வராந்தாவிற்கு வந்தேன்.
 மகேசின் அம்மா என்னிடமிருக்கும் நான்கு ரூபாயையும் வாங்கி வைத்து விட்டு விறகு தராமல் விரட்டிவிட்டால்...
 சைக்கிளை வெளியே எடுத்து வந்து மிதிக்கத் தொடங்கினேன்.
 மகேசின் வீடு வந்துவிட்டது. வீட்டின் அருகில் சைக்கிளை ஸ்டான்ட் செய்தேன். வாசலில் நின்று கொண்டிருந்த மகேசு என்னைக் கண்டதும் வீட்டிற்குள் ஓடினான். பின் அவனது அம்மாவோடு வெளியே வந்தான்.
 ""என்னல செந்தில்... இந்தப் பக்கம் இப்ப ஆளையே காணல்ல....'' என்று தொடங்கினார்... மகேசின் அம்மா.
 ""நாலு ரூபாய் ரெண்டு நாள்ல தந்திருவேன்... இப்ப ரெண்டு கட்டு விறகு வாங்க.. வந்தி.........'' என நடுங்கியவாறு சொல்லத் தொடங்கினேன்.
 ""எந்த நாலு ரூபா.... எதுக்குல நடுங்கிய...''
 ""மகேசு சொல்லல்லியா...'' நான் மகேசின் முகத்தைப் பார்த்தேன்.
 மகேசு பம்மியபடி நின்றுகொண்டிருந்தான்.
 ""என்னல பம்மிக்கிட்டு நிக்கிய... எந்த நாலு ரூபா...'' மகேசின் அம்மா அவனைப் பார்த்து சத்தமாய் கேட்டார்.
 மகேசு அவன் அம்மாவிடம் இதுவரை நடந்த சம்பவத்தைச் சொல்லவில்லையென எனக்குப் புரிந்து போனது. எனக்குள் சற்று தெம்பு வந்தது.
 ""நான் சொல்லியேன்...'' என சினிமா பார்க்கப் போய் நாலு ரூபாயை ஏமாந்தக் கதையை அவர்களிடம் சொன்னேன்.
 கதையைக் கேட்டவர், ""அந்த நாசமாப் போனவன் உருப்படுவானா... வீட்டுல சொல்லாம கொள்ளாம படத்துக்குப் போன ஒங்களுக்கு இது தேவைதான்...'' என்றார் ஆவேசமாக..
 எனக்கு அழுகை வருவது போல் இருந்தது.
 பின்னர், அவர் முகத்தில் என் மேல் ஒரு பரிதாபம் ஏற்பட்டதை உணர்ந்து கொண்டதைக் கண்டு, மீண்டும் தொடர்ந்தேன்..
 ""இப்ப மகேசு நாலு ரூபாய எனக்கிட்ட கேட்டுகிட்டே இருக்கியான்... ரெண்டு நாள் தரலாம்மிண்ணு சொன்ன பெறகும் கேட்காம... நீங்க என்னப் பிடிச்சு உக்கார வைச்சு ரூபாய வாங்கி விடுவதாகவும், இல்லாட்டி... சட்டையைக் கழற்றி எடுத்து விடுவதாகவும் சொல்லியான்...''
 ""ப்பூ... இம்புட்டுக்குத்தானா..... இதுக்குத் தான், ஒரு சட்டை கூட போடாம வந்தியாக்கும்....'' அவர் அதிர்ந்து சிரித்தார்...
 ""அப்ப என்னோட நாலு ரூபா... ''மகேசு சற்று தூரத்தில் நின்று சிணுங்கினான்.
 ""அடி....வெறகால... ஒனக்கு நாலு ரூபா நான் தரமாட்டேனால...'' என்று சத்தமிட்டவாறு ஒரு விறகுத் துண்டை எடுத்துக் கொண்டு அவனை பொய்யாக அடிக்கத் துரத்தினார்.
 நான் உற்சாகமாகி விறகுக் கடையிலிருந்து இரண்டு கட்டு விறகுகளை எடுத்து சைக்கிளில் வைக்க முற்பட்டேன்.

 பஸ், பத்மநாபா தியேட்டர் அருகில் வந்திருந்தது. நடத்துநர், ""பத்மநாபா தியேட்டர் டிக்கட் எறங்குங்க'' என்றார். நான் வெளியில் தியேட்டர் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தேன். தியேட்டர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மரவள்ளிச் செடிகள் நடப்பட்டிருந்தன. இந்த இடம் விற்பனைக்கு என்ற பலகை மதிற்சுவரைத் தாண்டி வெளியே தெரிந்தது.
 ""தியேட்டரை இடிச்சுட்டாங்க இல்லியா...'' நான் எனது இருக்கையின் அருகில் இருந்த இளைஞனிடம் கேட்டேன்.
 ""ஆமா... சார் கொஞ்சம் வருசமா... படம் போடாம மூடிப்போட்டிருந்தாங்க... இப்ப இடிச்சுக்கிட்டு பிளாட் போட்டிருக்காங்க...'' என்றான்.