செவ்வாய், 26 ஏப்ரல், 2016

நட்சத்திரக் கள்ளிகளும்... சில செண்பகப் பூக்களும்..


 

லாசர் ஜோசப்



     எனக்குப் புதன்கிழமை பிடிக்கும். இன்றும் புதன்கிழமை தானே. சற்றே அபூர்வமாக   தலைமை ஆசிரியரிடமிருந்து வந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்த போது செல்போனில் மற்றொரு அழைப்பு குறுக்கிட்டுக் கொண்டே இருந்தது.
தலைமை ஆசிரியர் 'பள்ளியில் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் பணியையும் ஏற்று செய்ய விருப்பமா...' எனக் கேட்டு அதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கும் விருப்பமான பணிதானே அதுவும்! மறுக்கவா முடியும்? "கண்டிப்பா செய்றேன் சார்" என்றேன். அதே வேளையில் செல்போனில் தொடர்ந்து  குறுக்கிட்டு வந்து கொண்டிருந்த அழைப்பிற்காக அவருடனான உரையாடலை அவசரமாக நிறுத்திவிடவும் முடியவில்லை.
ஒரு வழியாக பேச்சை தலைமை ஆசிரியர் முடித்துக் கொண்டார்.
        நான் செல்போனின் திரையில் பார்த்தபோது ஒரே எண்ணிலிருந்து 6 மிஸ்டு கால்கள் வந்திருந்தன.  அது எனது செல்போன் பதிவில் இல்லாத புதிய எண்.
நான் அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தேன்..
எதிர் முனை  "ஹலோ   ஆனந்தகுமார்" என்று எனது பெயரைச் சொன்னது...
குரல் உற்சாகமாக இருந்து.
"யாருன்னு புரியல்லியே"
"ஆனந்தகுமார் நான் தான் முத்து... முத்துக்குமரன்... ரேஞ்ச் ஆபிசர் மகன்.... உங்கூட குலசேகரம் ஸ்கூல்ல படிச்சனே..."
எனக்கு யாரென்று  புரிந்து  விட்டது.
"ஐயோ முத்துவா...? எங்கேடா இருக்க...?  பார்த்து  எத்தனை வருஷம் ஆச்சு...? எங்கயிருந்துடா பேசுற...? இப்ப என்னவாயிருக்கிற...? என்னோட நம்பர யாரு குடுத்தா...?" நான்  ஆச்சரியம் விலகாமல் விசாரித்தேன்.
"உம்பக்கத்துலயிருந்துதான்டா...  உங்க ஊரு ரேஞ்ச் ஆபிசுலயிருந்து.. இப்ப நான் ரேஞ்ச் ஆபிசர்.  நேற்று தான் சார்ஜ் எடுத்துக்கிட்டேன். உன்னோட நம்பர் கொஞ்சம் முன்னாடி தான் கிடைச்சிச்சு..." தணியாத உற்சாகத்தில் அவனும் பேசிக்கொண்டான்.
"எங்க ஊருலயா... ரேஞ்ச் ஆபிசரா... நம்பவே முடியலடா.."
"அட இதிலென்ன..? ஆமா...நீ டீச்சரா இருக்கியாமே...? இங்க வந்தவுடன் உன்னப்பத்தித் தான் விசாரிச்சேன். உடனே உன்ன பாக்கணும்டா..."
"நானே வர்றனே..." என்றேன்.
"சரி" என்றான்.
நான்  போனைத் துண்டித்தேன்.
"யாருகிட்ட பேசினீங்க ரொம்ப துள்ளலா இருக்கீங்க"
மதிய உணவைப் டிபன் பாக்சில் எடுத்து வைத்துக் கொண்டே மகி  கேட்டாள்.  மகி என்ற மகிளா என் சகதர்மினி.
"இந்த நாள் காலை, இப்படி ஒரு நல்ல தொடக்கமா இருக்குமிண்ணு நான் நினைக்கல... முதல்ல ஹெட்மாஸ்டர் கூப்பிட்டு பசுமைப் படை  ஒருங்கிணைப்பாளர்  ஆகிறீங்களாண்ணு கேட்கிறாரு, அடுத்ததா என் பால்ய கால நண்பன் ரேஞ்ச் ஆபிசரா நம்ம ஊருலேயே ஜாயின் பண்ணியிருக்கிறதா சொல்றான்" துள்ளலாகவே மகியிடம் பதில் சொன்னேன். 
"அப்படியா... நீங்களும் தானே கொஞ்ச நாளா ஊரு முழுவதும் மரம் நடணும்.. காடு வளர்க்கணுமிண்ணு பேசிகிட்டு இருக்கிறீங்க, நல்லதாப் போச்சு.... எல்லாம் கை கூடியிருக்கு"
"அப்படித்தான் இல்லயா...?" சந்தோஷம் மாறாமல் அவளிடம் கேட்டேன்.

ஆசிரியர் பணி கிடைத்து இத்தனை வருடங்களும் வெளியூர்களில் பணி செய்த எனக்கு இப்போது தான் சொந்த ஊரில் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது. மனசுக்குள் ஒரே படபடப்பு, உற்சாகம், துள்ளல்.  ஆசிரியர் பணியின் கூடவே மரம் நடணும், சுற்றுச் சூழல் காக்கணும்... இப்படியான எண்ணங்கள்...  இதற்கு முன்னர்  பணி செய்த இடங்களில் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. இப்போது கைகூடிவிட்டது. தலைமை ஆசிரியர் பச்சைக் கொடி காட்டி விட்டார். முத்து ரேஞ்ச் ஆபிசர் தானே! தேவைக்கு மரக்கன்றுகள்  பெற்றுவிடலாம்!

"ரேஞ்ச் ஆபிஸ் போய் முத்துவப் பார்த்துவிட்டு அப்படியே ஸ்கூலுக்குப் போறேன்" என  மகியிடம் சொல்லிக் கொண்டே மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

முத்து ஒரு சைக்கிள் பிரியன்.  அவனுக்கு ஒரு சைக்கிள் கிடைச்சாப் போதும், பகல்பூரா  ஓட்டிக்கிட்டே இருப்பான். சோறு, தண்ணி கூட வேண்டாம்.  முத்துவின் முகம் மங்கலாக மனக்கண் முன் தோன்றி பிரகாசமானது. முன்நெற்றியில் வந்து விழும் தலைமுடியை  ஸ்டைலாக  விலக்கி விடுவான் முத்து. தொடை இறுக்கமான நிக்கரில் நெடு, நெடுவென  அழகாய் இருப்பான்.

அதே முத்து அந்த  மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்த நாள்  இரவில் அவன் அம்மாவுடன்  அழுது  முகம் வாடி நின்றதும் இப்போது மனக்கண்ணில் வந்து போகிறது. ஆனால் அதையும் கடந்து முத்து இப்போது என் ஊரில் ரேஞ்ச் ஆபிசராக வந்திருக்கிறான் என்பது அளவில்லாத  சந்தோஷத்தைத்  தருகிறது.

நான் முத்துவைப் முதன் முதலில் பார்த்தது எங்கள் குலசேகரம் அரசுப்  பள்ளியில் தான்.  பள்ளியின்  பிரதான அடுக்குமாடி கட்டடத்தின் எதிரில் அந்த பலாமரத்தின் பக்கமாகத் தான் எங்கள் ஏழாம்  வகுப்பு சி பிரிவு இருந்தது. அன்று காலை முதல் பிரீயடு அறிவியல் ஆசிரியர் கோபால் சாரின் வகுப்பு. கோபால் சார் வாராந்திர தேர்வு  போடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஒரே கேள்வி தான், 'ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி ?' என்பதுதான் கேள்வி.  முந்தின நாளே, கேள்வியை சொல்லி விட்டார்.
அன்று காலையில் வகுப்புத் தொடங்கியவுடன்  "ஒரு குடுவையை எடுத்து..." என  ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி என மீண்டும் விளக்க ஆரம்பித்தார்.  எங்கள் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் கோபால் சார் வந்தாரென்றால்  மாணவர்கள் மத்தியில் தனி உற்சாகம் தான்.  அவர் ஆங்கில ஆசிரியர் சுசீலனைப்  போல் இல்லை.  பிரம்பை கையில் எடுத்து நாங்கள் பார்த்ததில்லை. தோற்றத்தில்  ஏறக்குறைய  நடிகர் நாகேஷைப் போல் இருப்பார்.   எங்கள் பள்ளியியில் பட்டப் பெயர் இல்லாத ஆசிரியர் அவராகத் தான் இருப்பார்.  வகுப்பில் ஒரு முறையேனும் எங்களை சிரிக்க வைக்காமல் விடமாட்டார்.  நாங்கள் சிரிக்கும் போது முன்முறுவலோடு ரசிப்பார்.  திடீரென்று 'எலிசபெத் டெயிலர் தெரியுமாடா...' என்று எங்களைப் பார்த்து கேட்பார். எங்கள் மத்தியிலிருந்து  'தும்பகோடு   சின்னப்பன் டெயிலரைத் தான் தெரியும்'  என பதில் வரும்.
'ஒகோ... அப்படியா... எலிசபெத் டெயிலருக்கு இப்போ நாலாவது கல்லியாணமாம்...' என்று கூறிவிட்டு பாடத்திற்குள் புகுந்து விடுவார்.

ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி?
தேர்வு எழுத ஆயத்தமானோம்... அப்போது தான் வகுப்புக்குள் வந்தார் பள்ளி பியூன். 

"சார்...  எட்மாஸ்டர் இவங்களை அனுப்பி வைச்சிருக்காரு.. புது அட்மிஷன்" என்றார் கைகளை வெளியே நின்றவர்களை நோக்கிக் காண்பித்தவாறு.
"ரொம்ப சந்தோஷம்...உள்ளே வரச் சொல்லுங்க" என்றார் கோபால் சார்.
பியூன் வெளியே நின்றவர்களிடம் வகுப்புக்குள்ளே வருமாறு சைகை செய்தார்.
வெளியே நின்றுகொண்டிருந்த இருவர், வகுப்புக்கு உள்ளே வந்தனர்.  அப்போது தான் நான் அவனை முதன் முதலாகப் பார்த்தேன். இறுக்கமான  நீல நிற நிக்கரும், இளமஞ்சள் நிற சட்டையும் அணிந்திருந்தான். அவனுடன் நின்றிருந்தவர் அவனது  அப்பாவாக இருக்குமென  ஊகித்துக் கொண்டேன். உயரமான தோற்றம் கொண்ட அவர் மிடுக்காக இருந்தார்.

"பையனா...?" கோபால் சார்தான் பேச்சைத் தொடங்கினார்
"ஆமா சார் மகன்"
"வெளியூரா...?"
"கோவில்பட்டி சார்.."
"நீங்க  என்னவாக  இருக்கீங்க"  
"குலசேகரம்  பாரஸ்ட் ரேஞ்ச் ஆபிசுல  புதுசா  ரேஞ்ச்  ஆபிசரா வந்திருக்கேன் சார்.."
"ஓ... அப்படியா சார்... கோபால் சார் சற்று திடுக்கிட்டது போல் கேட்டார்."
"என்ன பேருடே"  கோபால் சார் இவனைப் பார்த்துக்  கேட்டார்.
"முத்துக்குமரன்"
"அழகான பேரு... என்றவாறு இவனது தோளைத் தட்டினார். .
இதற்கிடையே,
"சரி.. சார் நான் கிளம்புறேன்... பையன நல்லா கவனிச்சுங்குங்க..." என்றார் இவனது அப்பா.
"நிச்சயமா... சார்"
ரேஞ்ச் ஆபிசர் கிளம்பினார்.
கோபால் சார் முத்துக்குமரனின் தோளில் கையைப் போட்டு அவனை கரும்பலகையின் பக்கம் அழைத்துச் சென்றார்.
அப்புறம்  முதல் பெஞ்சின் ஓரத்தில் இருந்த என்னைப் பார்த்து "இரண்டாம் பெஞ்சுக்குப் போ" என்று சொன்ன கோபால் சார், முத்துக்குமரனை முதல் பெஞ்சின் ஓரத்தில் அமரும் படி சைகையால் சொன்னார்.
முத்துக் குமரன் அமர்ந்தான்.
அப்போது பின் பகுதி பெஞ்சுகளில் இருந்து ஏதோ பேச்சு கிளம்பியது.
"அங்க என்னடா சத்தம்... ரவீந்திரா எழும்பு என்ன பேச்சு குசுகுசா" கோபால் சார் பின் இருக்கையில் இருந்த ரவீந்திரனைப்  பார்த்து கேட்டார்.
"பாண்டிக்காரனாக்குமுண்ணு செல்லியான் சார் இவன்..." என்று அருகிலிருந்த செந்திலைப் பார்த்து கைநீட்டினான் ரவீந்திரன்.
"லேய்.. செந்திலு எழும்பு.." கோபால் சார் செந்திலைப் பார்த்து கைநீட்டினார்.
"சார் நான் அப்பிடி செல்லல்ல சார்... அவன் தான் அப்பிடி செல்லிட்டு எனக்க மேல பழியப் போடியான் சார்...   எனக்க அப்பனுக்கும் பாண்டியில தான் சார் பனையேற்று..." என்றான் செந்தில்.
"சரி ரெண்டு பேரும் உட்கார்ந்து தொலையுங்க..." கோபால் சாரின் உதட்டில் புன்முறுவல் தெரிந்தது.
அப்போது "சார் பரிட்சை..." என்று ஒரு குரல் பின்பக்கமிருந்து வந்தது.
"ஓ... நான் மறந்துட்டேன்" என்ற கோபால் சார்.  அதன்பின் "ஆக்சிஜன் வந்திருக்கில்லல..." என்று இழுத்தார்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
இதனிடையை "முத்துக்குமரன் எந்திரி.." என்றார் கோபால் சார்
முத்துக்குமரன் எழுந்து நின்றான்.
"லேய்.. கேட்டுக்கிடுங்க.. முத்துக்குமரனின் அப்பா யாருண்ணு தெருஞ்சிக்கிட்டீங்கயில்ல... அவர் தான் பாரஸ்டு ரேஞ்ச்  ஆபிசர்.. காட்டுக்கு அவர்தான் அதிகாரி. காட்டுல யாராவது மரங்களை வெட்டிக் கடத்தினாலோ... மிருகங்கள வேட்டயாடினாலோ அவரு தான் அவர்களை பிடித்து ஜெயில்ல போடுவாரு... தெரியுமா...? "என்றவர், அப்படியே மேசை மீது அமர்ந்து  "காடு.. இருந்தா தான் நாம வாழ முடியும்... காட்டுல உள்ள மரங்கள் தான், காற்றை சுத்தம் செய்து,  நமக்கு ஆக்சிஜன் தருது. இத முன்னாடியும் சொல்லி தந்திருக்கன்யில்லியா..." என்றார்.
"ஆமா சார்..." நாங்கள் ஒரே குரலில் பதில் சொன்னோம்.
"ஆமா.. காட்டை நாம் பாதுகாக்கணும்... நாமளும் காடு வளர்க்கணும்... மரம் நடனும் அப்ப ஆக்சிஜன் அதிகமா கிடைக்கும்... காற்று மண்டலம் சுத்தமாகும்..." என்று பேசிக்கொண்டே போனார்.
எனக்கு காட்டின் மேல் பிரியம் அதிகமாகிக் கொண்டிருந்தது
"சார் பரிட்சை..." என்று மீண்டும் ஒரு குரல் கேட்டது..
"அதுதாண்டா ஆக்சிஜன் இயற்கையாக கிடக்கிறதப் பத்தி சொன்னனில்லியா.. பரிட்சையை நாளை வைச்சுக்கிடுலாம்.." என்றவர்,   முத்துக்குமரனைப் பார்த்து "உட்காரு" என்றார். 
சற்று நேரத்தில் பெல் அடித்தது.

இரண்டு, மூன்று நாள்கள் வகுப்பில் உற்சாகமின்றி இருந்த முத்துக்குமரன் அதற்குப் பிறகு  எல்லோருடமும் சகஜமாகப் பழகிக் கொண்டான்.
நாங்கள் பேசும் தமிழ் தான் அவனுக்குள் தகராறு செய்தது. "ஒங்க மளையாளம் களந்த தமிள்  புரியமாட்டுங்குது..." என்பான் வெகுளியாக.

ஒருநாள், "எனக்க வீடு ரேஞ்ச் ஆபிசுக்க கிட்டயாக்கும்  லீவு நாள்ல  எல்லாம்  எனக்ககூட்டுக் காரங்களுக்கக் கூட  ரேஞ்ச் ஆபிசில வந்து தான் வெளையாடிக்கிட்டு இருப்பன்..."  என்றேன் முத்துக்குமரனிடம்.
"அப்படியா... அப்ப இனி நானும் உங்க கூட விளையாட வரலாம் இல்லையா...?"  என்றான். அவனது முகத்தில் சந்தோஷ மின்னல் அடித்தது.
அதன் பிறகு முத்துக்குமரன் என்னோடு அதிகம் நெருக்கம் காட்டினான்.

ரேஞ்ச் ஆபிஸ் வளாகம் ஒரு குட்டி காடு. விலங்கினங்கள் இல்லாத காடு. தேக்கு, சந்தனம், வேங்கை, வேப்பு, ஈட்டி, புங்கன், காஞ்சிரம், மருது, மூங்கில்,  மா, பலா, அயனி,  நெல்லி என இங்கு இல்லாத மரங்களே இல்லை.  செண்பக மரங்கள்  வழிபாதைகளில் பூக்களை உதிர்த்துப் போட்டிருக்கும்.  நெடு,  நெடுவென  நிற்கும் யூக்காலிப்டஸ் மரங்களின் இலைகளிலிருந்து வரும் வாசனை காற்றில் கலந்து நிற்கும்.   காஞ்சிரம் மரங்களிலிருந்து  முட்டை வடிவிலான பழங்கள்  தரையில் விழுந்து உடைந்து  கிடக்கும்.  உடலெங்கும் முட்களுடனும், பூக்களுடனும்   நிற்கும் நட்சத்திரக் கள்ளிகள் தான் ரேஞ்ச் ஆபிசின் வேலி.

சட்டைத்  தோள்களில்  பட்டைகளும் நட்சத்திரங்களும்  கொண்ட  சீருடை அணிந்த  வனவர்கள்   மிடுக்காக அங்குமிங்குமாக   நடமாடிக் கொண்டிருப்பார்கள்.  

எங்கள்  ஊர்  சிறுசுகளுக்கும்,  பதின்பருவத்தினருக்கும், மாலை வேளைகளிலும்,  பள்ளி விடுமுறை நாட்களிலும் ரேஞ்ச் ஆபிஸ் வளாகமே விளையாட்டுத் தொட்டில்.
அந்த வளாகத்திற்குள் காகித அட்டைகளில் லாரி செய்து இழுத்துக் கொண்டே செல்வான் மகேஷ்.   நொங்கு வண்டி  உருட்டிச் செல்வான்  சுரேஷ்.  முக்கோண வடிவில் சுருட்டப்பட்ட பலா இலையில் செண்பகப் பூவைச்  சொருகி காற்றாடி சுற்றிக் கொண்டே ஓடுவான் முருகன்.  எனக்கு  சைக்கிள்  டயர் வண்டி உருட்டிச் செல்வதில்  அலாதி இன்பம். ராஜன் பொறி வைத்து அணில்களை பிடிப்பான்.  மைனாக்களையும், பச்சைக் கிளிகளையும் பிடித்து வளர்த்துவதில் வில்சன் கில்லாடி.  மாமரங்களில்  கொணிகளை வீசி மாங்காய் பறிப்பதற்குத் தான் எத்தனை பேர்..!  ராயப்பன், குறி தவறாமல் மாங்காய் எறிவதில் சூரன்.  வண்ணத்துப் பூச்சிகளையும், தட்டான்களையும் துரத்திப் பிடித்துக் கொண்டிருப்பார்கள் ஷீலாவும், மகேஸ்வரியும்... இன்னும் கொஞ்சம் பேர் பாரஸ்டரின் வீட்டு முற்றத்தில் நிற்கும் கொய்யா மரங்களில் 'மரக்குரங்கு' விளையாடுவர். இதற்கிடையே அடிக்கடி  சண்டைகளும்  போட்டுக் கொள்வோம்.  கீழே விழுந்து கிடக்கும் காஞ்சிரம் பழங்களை எடுத்து ஒருவருக்கொருவர் வீசி எறிந்து  கறை படிந்த சட்டைகளுடன் வீட்டிற்கு வந்து  அடி வாங்கிக் கொண்ட நாள்களும் உண்டு.   வழுக்கைத் தலையுடன் ஒரு பியூன் அங்கு இருப்பார் அவருக்கு  எங்களைத் துரத்துவது கூடுதல் பணி.

  சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு அந்த வளாகத்தை விட்டால் வேறு இடம் கிடையாது.  செண்பக பூக்கள் உதிர்ந்துக் கிடக்கும்  அந்த வளைவான மண் பாதையில் சைக்கிள் ஓட்டுவது... அத்தனை ஆனந்தம். சிலர்  அரை சைக்கிளை வாடகைக்கு எடுத்துவந்து ஓட்டிக்  கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர்   முழு சைக்கிளில் குரங்கு பெடல் போடுவார்கள்.

ரேஞ்ச் ஆபிஸ் பகல், ராத்திரியிண்ணு இல்லாம எப்போதும் பரபரப்பாகத் தான் இருக்கும்.  கூப்புகளிலிருந்து வெட்டப்பட்ட மரங்கள்  லாரிகளில் வந்து இறங்கும்.  சிலவேளைகளில்  காடுகளில் வெட்டிக் கடத்தப்பட்ட மரங்களுடன், மரங்களை வெட்டிக்கடத்தியவர்களையும், வாகனங்களில் கொண்டு இறக்குவார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் மரங்களைக் கடத்தியவர்களின்  முதுகுகளில்  விழும் 'தும்... தும்...' என்று இடிகளும்,  அவர்களின்  அலறல்களும்  வெகுதூரம் கேட்கும்.

ஏலம் விடப்பட்ட மரங்களை  பிளாட் லாரிகளில்  ஏற்றப்படுவதைப் வேடிக்கையாய் பார்த்து நிற்போம் நாங்கள்.
வியர்வை வழியும் கருத்தத் தேகங்களுடன், கன்னங்கள் சுருங்கி, வயிறு உள்குழிந்து நெடு நெடுவென இருக்கும் அந்தத் தொழிலாளர்கள் பாரம் ஏற்றுவது ஒரு கலையாகவே இருக்கும். அவர்கள் பெரும்பாலும் நாகர்கோவில் காரர்களாக  இருப்பார்கள். லாரிகளின் பக்கவாட்டில்  படங்கு  வைத்து   மரங்களை வடங்களும், கடப்பாரைகளும் கொண்டு இழுக்கவும்,  தள்ளவும் செய்வார்கள்.
"ஏலாய்..."
"இன்னா...."
"இன்னும் ஒண்ணு...."
"இன்னா..."
"அட இன்னும் ஒண்ணு...."
"இன்னா..."
"அட... இன்னும் ஒண்ணு..."
"இன்னா..."
"ஏய்... லாம்பே..."
"ஐய்யய்யா..."
என
மரத்தை இழுப்பவரும், தள்ளுபவரும் மாறி..மாறி ராகத்தோடு பாடும் போது மரம் லாரியில் ஏறியிருக்கும்.

காடுகளிலிருந்து விறகு வெட்டிக் கொண்டு சைக்கிள்களில் விற்பனைக்கு கொண்டு செல்பவர்களுக்கும், தலைச்சுமடாக கொண்டு செல்பவர்களுக்கும் ரேஞ்ச் ஆபிசை கடந்து செல்லும் வரை உயிர் கூட்டிலிருக்காது. ஆபிஸ்  அருகில் வரும் போது அதிவேகமாக சைக்கிளை மிதிப்பார்கள், தலைச்சுமடாக விறகு எடுத்து செல்லும்  பெண்கள் ஓட்டமும், நடையுமாக இடத்தைக் கடக்க முயல்வார்கள். இருந்த போதிலும்  பலவேளைகளில்   பிடிபட்டு சைக்கிளையும், விறகையும், வெட்டுக் கத்திகளையும் பறி கொடுத்துவிட்டு  புலம்பிச் செல்வார்கள்.
'காட்டுல.... வலிய...வலிய மரங்கள  வெட்டுபவனுவள  பிடிச்ச மாட்டானுவ... பணம் வாண்டிற்டு விடுவானுவ...
சுள்ளி பெறக்கிய அத்தப்பாடியள  பிடிப்பானுவ...' அவர்களின்   புலம்பல்கள் இப்படியாக இருக்கும்.

ஒரு நாள் நான்  சைக்கிள் டயர் வண்டியை உருட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தேன்.  முத்துக்குமரன் சற்றுத் தொலைவில் நின்று..  "ஆனந்தகுமார்..." என்றான்.
நான் உருளும் டயரை கையில் பிடித்துக் கொண்டு    அவனைப் பார்த்தேன்..
அவன் சிரித்தவாறே நெருங்கி வந்தான்.
நானும்  அவனது அருகில் சென்றேன்.
"வாடகைக்கு சைக்கிள் எடுத்துத் தர்றியா...?" என்று கேட்டான்,  மெல்லியப் புன்னகையுடன்.
"உங்க வீட்டுல சத்தம்போடமாட்டாங்களா?" என்றேன்
"இல்ல.. திட்டமாட்டாங்க" என்றவன், என் கையைப்பிடித்து இழுத்து வா.. "அம்மா கிட்ட உன்னயக்கூட்டிகிட்டுப் போறேன்" என்றான்.
எனக்குக் கூச்சமாக இருந்தது. தயங்கிய படி நின்றேன்.
அவன் விடுவதாக இல்லை. கையைப் பிடித்து இழுத்தான்.
நான்  சைக்கிள் டயரையும், தட்டுக் குச்சியையும் ஒரு  செண்பக மரத்தின் மூட்டில்  போட்டு விட்டு  அவன் பின்னால் நடந்தேன்.

அது அலுவலர் குடியிருப்பு வீடு. பழையக் கட்டடம். சுவர்களில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்தும்,  கதவு ஜன்னல்கள் ஓட்டை உடைசலாகவும் இருந்தன.
இருவருமாக வீட்டுக்குள் நுழைந்தோம்.
"அம்மா..." என்று சத்தமாக அழைத்தான் முத்துகுமரன்.
"என்னடா..."
"நான் சொன்னேனில்லியா.. என்னோட கிளாஸ்   ஆனந்தகுமார்... இவன்தான்... இங்க பக்கத்தில தான் வீடு இருக்காம்.."
"ஓ.. அப்படியா..."
நான் கூச்சத்தால் நெளிந்தேன்...
"இங்க  டயரை உருட்டிகிட்டிருந்தான்  கூட்டிகிட்டு வந்துட்டேன்.."
"ஊர்ப்  பிள்ளைங்களெல்லாம்  நாள் முழுக்க  மாங்காய் பறிப்பும்... டயர் வண்டி ஓட்டுறதும் இங்க தான் இல்லையா...?" முத்துக்குமரனின் அம்மா என்னிடம் கேட்டார்.
நான் "ம்" என்று தலையாடினேன்..
அவர் மெதுவாய் சிரித்தவாறே
எனது கையைப் பிடித்து இழுத்து  அருகில் கிடந்த மர ஸ்டூலில்  உட்கார வைத்தார்.  பின்னர் அறைக்குள் சென்றுவிட்டு திரும்பி வந்தவர் "இந்தா சாப்பிடு" என எனது கை நிறைய கடைலை மிட்டாய்களை தந்தார். 
நான் கடலை மிட்டாய்களை சுவைக்கத்  தொடங்கினேன். அவை நல்ல சுவையாக இருந்தன.   ஒன்றிரண்டை நிக்கர் பாக்கெட்டிலும் நுழைத்துக் கொண்டேன்.
"மிட்டாய் நல்லா இருக்கா? எங்க ஊரில இருந்து வாங்கினதாக்கும்..." என்றார்.
"ம்..." என்று தலையாட்டினேன் நான்.

முத்துக்குமரன் "சைக்கிள்" என்று கூறியவாறு நெளிந்து கொண்டிருந்தான்.
"என்னடா" அவன் அம்மா சற்று குரலை உயர்த்திக் கேட்டார்.
"அம்மா சைக்கிள்... சொல்லுங்க.." என்றான் முத்துக்குமரன்.
அவன் அம்மா என் முகத்தைப் பார்த்தார், பின்பு
"நீ இவனுக்கு வாடகைக்கு  சைக்கிள் எடுத்துக் குடுப்பியாக்கும்...?" என்று கேட்டார்.
நான்  "ம்" என்று தலையசைத்தேன்.
"ஊரில சைக்கிள் கெடக்கு... இங்க வரும்போது எடுத்துக்கிட்டு வராம விட்டுட்டோம்.   இவன் சைக்கிள்... சைக்கிளுண்ணு உசிர எடுக்கிறான்"  என்றார்.

"நான் எடுத்துக் குடுக்கியேன்..." என்று நான் மறுபடியும் தலையசைத்து சொன்னேன்.

அண்ணாநகர்  குடியிருப்பு  வாசலில் பெட்டிக்கடை வைத்திருந்தார் ஒரு தாத்தா.  தாத்தாவின் வீடு அந்த குடியிருப்புக்குள் தான் இருந்தது. தாத்தா அரை சைக்கிள் வாடைக்குக்கு விடுவார்.
நீல நிறத்தில் இருக்கும் அந்த அரை சைக்கிள்.  ஒரு மணி நேரத்திற்கு 40 பைசா தான் வாடகை. காலையில் முதல் ஆளாகப் போனால் சைக்கிள் கிடைத்து விடும். இல்லாவிட்டால், பெரும்பாடு தான்.
  
முத்துக்குமரன் சைக்கிளில் ஏறினா அப்புறம் இறங்க மாட்டான். சோறு, தண்ணி கூட வேண்டாம்.  எவ்வளவு நேரம் ஓட்டுனாலும் அவனுக்கு சலிக்காது.  எனக்கு சைக்கிள் அவ்வளவாக ஓட்டத் தெரியாது.  நான் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடுவேன்.
'நானும் கொஞ்ச நேரம் ஓட்டியனேண்ணு...' அவன்கிட்ட கெஞ்சணும்..
எப்போதாவது.. அல்லது சைக்கிள திரும்பிக் கொடுக்க நேரம் வரும் போது கொஞ்சம் நேரம் என்கையில் கொடுப்பான்..
நான் எப்படியோ ஏறியும், ஏறாமலும்... கீழே விழுந்தும் சைக்கிளை ஒருவாறாக ஓட்டுவேன். மனதிற்குள் சந்தோஷம் பெருக்கெடுக்கும்.

என்னிடம் முத்துக்குமரனுக்கு நெருக்கம் அதிகமானது. எனக்கும் அப்படித்தான்.  பள்ளிக்கூடத்தில்  என்னுடன் மதிய உணவைக் கூட பரிமாறிக்  கொள்வான். அவன் கொண்டுவரும்  இட்லி... எனது தட்டிற்கு இடம் பெயரும், நான் கொண்டு செல்லும் சாதமும் துவையலும் அவனது தட்டுக்கு இடம்பெயரும். வகுப்புகளின் இடைவேளைகளில் எனது தோளில் கையைப் போட்டுக் கொண்டே நடப்பான்.

ஒருநாள் முத்துக்குமரன் வீட்டில் இல்லை. ஊருக்குப் போயிருந்தான்.  எனக்கு சைக்கிள் ஓட்டணும் போல் இருந்தது. கையில் பத்து பைசா தான் இருந்தது.  சைக்கிள் தாத்தாவிடம் போனேன். நல்ல வேளை சைக்கிள் இருந்தது.
"தாத்தா கால் மணிக்கூரு சைக்கிள் தருமா..?"
"லேய்... கால் மணிக்கூருக்கெல்லாம் தரமுடியாது. அரை மணிக்கூரோ... ஒரு மணிக்கூரோ வேணுமிண்ணா எடுத்துக்கிட்டுப் போ."
"கால் மணிக்கூருக்குள்ள பைசா தான் எனக்கிட்ட இருக்கு."
"லேய்...  நீ வேணுமிண்ணா பைசா தரண்டாம்... சைக்கிள எடுத்துக் கிட்டுப் போய் அரை மணிக்கூரோ.. ஒரு மணிக்கூரோ.. சவுட்டியிட்டு கொண்டுவந்திரு...போ.." என்றார். எனக்குள் உற்சாகம் கரைபுரண்டது.   தாத்தா நல்ல மனிதர்.

இன்னொரு நாள் முத்துக்குமரன் என்னிடம் வந்து "வா...தாத்தாவிடம் சைக்கிள் எடுக்கப் போவோம்" என்றான்.
அதற்குக்   கொஞ்சம் நாள்களுக்கு முன்பு தான் அண்ணாநகர் குடியிருப்பில்  தீ ஏற்பட்டு குடிசைகள் எரிந்து போயிருந்தன.

இருவருமாக சைக்கிள் தாத்தாவின் கடை நோக்கிச் சென்றோம்.  தாத்தாவின் கடைக்கு  தீ  பாதிப்பில்லை. கடைக்குள்  வீட்டிலுள்ள  பாத்திரங்கள், துணிகள் என பொருள்கள் குவிந்து கிடந்தன.
தாத்தா அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தார்.
"தாத்தா சைக்கிள்" என்றோம்.
"லேய்...சைக்கிள் எந்த மூலயில கெடக்குதோ... இப்ப இருக்கிய நெலமையில சைக்கிள எடுக்க முடியுமால.. ஓடுங்கல..." என்றார்.
நாங்கள் திரும்பி நடந்தோம்.

இரண்டு, மூன்று நாள்கள்தான் இருக்கும். முத்துக்குமரன்  ஒரு சைக்கிளை எடுத்து  வந்தான். அது யாரோ ஒரு விறகு காரனிடமிருந்து  பறிக்கப்பட்டு மூலையில் போடப்பட்டிருந்த முழு சைக்கிள். பெரிய அளவிலான  கேரியர் மற்றம் ஸ்டேன்டுடன் செக்கு போல கனமாகவும், இறுக்கமாகவும் இருந்தது அந்த சைக்கிள்.

"இது செக்கு போல இல்லியா இருக்கு" என்றேன் நான்.

"இருக்கட்டும்.. ரெண்டு நாள் ஓட்டுனா சரியாயிடும்" என்றான்.
முத்துக்குமரன் குரங்கு பெடல் போட்டவாறு சைக்கிள ஓட்டிக் கொண்டிருந்தான்.
நான் வழக்கம் போல பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன்.
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.
ஒரு சிறு கல்தான். பாதையில் கிடந்த ஒரு சிறிய கல்லில்தான் சைக்கிள் ஏறியது. கண் இமைக்கும் நேரத்தில் சைக்கிளோடு கீழே விழுந்தான். அவன் மீது சைக்கிள் சரிந்து  கிடந்தது. நான் பதறிவிட்டேன். கூடவே பயமும் வந்து விட்டது.
பின்பு  ஒருவழியாக சிரமப்பட்டு சைக்கிளை தூக்கி அகற்றிவிட்டு முத்துக்குமரனை எழுப்ப முயன்றேன். அவனால் எழும்ப முடியவில்லை. "கை... கை..." என்று  அலறினான். அவனால் இடது கையைத் தூக்கி உயர்த்த  முடியவில்லை. ஒடிந்து விட்டதா? எனக்குள் பயம் மேலும் அதிகரித்தது. ஒருவழியாக அவனை தூக்கி உட்காரவைத்துவிட்டு அவன் வீட்டுக்கு ஓடிச் சென்று அம்மாவிடம் பயந்தவாறே விசயத்தைச் சொன்னேன். அவர் "ஓ..."வென்று சத்தமிட்டவாறே ஓடி வந்தார். இதற்குள் அங்கு வந்த  வனவர்கள்  முத்துக் குமரனை தூக்கிக் கொண்டிருந்தனர்.

தங்கக்கண் வைத்தியரின் வைத்தியசாலை பரபரப்பானது. வைத்தியர் முத்துக்குமரனின் கையை பிடித்துப்பார்த்தார். கையை நீட்டச் சொன்னார்....மடக்கச் சொன்னார். விரல்களை வைத்து மணிக்கட்டுப் பகுதியில் அழுத்தினார். முத்துக்குமரன்  "ஆ...அம்மா.."  என அலறினான்.

"கடவுள் சகாயத்தில பெரிய ஒடிவு ஒண்ணும்  இல்ல..   ஒரு செறிய சொட்டலு  தான்.. செரியாக்கியிருலாம்..." என்று சொன்ன வைத்தியர். அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார்.
இதற்குள் முத்துக்குமரனின் அப்பாவும் வைத்தியசாலைக்கு  வந்திருந்தார்.
என்னையும் சேர்த்து யாரெல்லாமோ திட்டிக் கொண்டிருந்தனர். எனது  தலையில் ஒன்றிரண்டு கொட்டு விழுந்தது.
"பிள்ளயள பறயண்டாம்... அதுவ இந்தப் பிறாயத்துல யாது சைக்கிள் கிட்டுனாலும் எடுத்துச் சவுட்டத் தான் செய்யும்... இப்ப எடுத்து சவுட்டுணது...வெறவு லோடு காரமாருக்க சைக்கிளு இல்லியா...? அவனுவ சைக்கிளயும், வெறவையும் பறிகொடுத்திட்டு சாமம் இட்டுங்கொண்டில்லியா  பெயிருப்பானவ?"
வைத்தியர் சற்று சத்தமாக முணுமுணுத்தவாறு எண்ணெய் போட்டு முத்துக்குமரனின் கையைத் தடவிக் கொண்டிருந்தார். முத்துக்குமரன் "ஆ... ஊ..." என சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தான்.
சற்று நேரத்திற்குப் பின்னர்  சிறிய துண்டுகளாக வெட்டி வைத்திருந்த தென்னம் மட்டைச் சீம்பிளிகளை முத்துக் குமரனின்  கையில் வைத்து எண்ணை ஊற்றி துணியால் கட்டுப் போட்டு கையைத்  தோள் வழியாகத் தொங்கப் போட்டார்.
முத்துக்குமரனின்  அப்பா சட்டைப் பையில் கையைப் போட்டவாறு வைத்தியரைப் பார்த்தார்.
அதனைப் புரிந்து கொண்ட வைத்தியர்
"ஒண்ணும் வேண்டாம்... பிள்ளைக்கு கை செரியான மதி.. கொறச்சு தெவசத்தைக்கு பிள்ளைய ஓடிச்சாடாத பாத்துக்கிடணும்..."  என்று கூறியவாறு ஒரு சிறிய குப்பி நிறைய  முறிவெண்ணையும்  கொடுத்தார்.
"அப்ப நாங்க வாறோம்..." என்று
முத்துக்குமரனின் அப்பா வைத்தியனை கை கூப்பி வணங்கி விட்டு,  "சும்மா இருக்கும் போது ஆபிஸ் பக்கம் வாங்க..." என்று கூறிவிட்டு, முத்துக்குமரனின் வலது கையைப் பிடித்துக் கொண்டு ஜீப்பில் ஏற்றினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு வைத்தியர் ரேஞ்ச் ஆபிஸ் பக்கம் அடிக்கடி வந்து போனார். வைத்தியருக்கு ஊரிலும் நல்ல செல்வாக்கு உண்டு.

முத்துக்குமரன் தோள் வழியாகக் தொங்க விடப்பட்ட கையுடன் பள்ளிக்கு வருவான். பெரும்பாலும் ஆபிஸ் ஜீப்பிலேயே வருவான்.  சில நாட்களிலேயே கை சரியாகிவிட்டது.  ஒரு நாள் என்னிடம், "எங்க அப்பாவை வேறு ஊருக்கு மாத்தியிருக்காங்க.. நாங்க இங்கயிருந்து கொஞ்ச நாள்ல  போயிருவோம்..." என்று  சொன்னான். அவன் கண்கள் லேசாக கலங்கியிருந்தன. நான் அவனை அணைத்துக் கொண்டேன் எனது கண்களும் கலங்கின.

ஒரு நாள் நள்ளிரவு. ரேஞ்ச் ஆபிசுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும்  ஒரே கூச்சலும், ஆதாளியுமாக இருந்தது. என் வீட்டிலும் அப்பா விளக்கைப் போட்டு  வெளிக்கதவைத் திறந்தார். ரேஞ்ச் ஆபிஸ் நோக்கி ஊர் மக்களில்  பலர் ஓடிக் கொண்டிருந்தனர். மழை  லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. அப்பாவும், அண்ணனும் கூட ரேஞ்ச் ஆபிஸ் நோக்கி செல்ல ஆயத்தமாகினர்.
"அப்பா நானும் கூட வாறேன்..." என பிடிவாதமாக நானும் அவர்களுடன் சென்றேன்.
கூச்சல் கூறையவில்லை. மகாகனி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்களின் சத்தம் அதிகமாகியிருந்தது.
தார்ப்பாயால் பின்பக்கம் மூடப்பட்டிருந்த  லாரி ஒன்று அங்கு புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்து. ஆள்கள் லாரியைச் சுற்றி  திரண்டு நின்று கொண்டிருந்தனர்.
சிலர்,  "லோடை எறக்கு" என்று கத்திக் கொண்டிருந்தனர்.
என்ன லோடு எனக்குப் புரியவில்லை...
நான் அருகில் நின்று கொண்டிருந்த எனது அண்ணனிடம் 'என்ன லோடு... என்ன பிரச்னை..' என மெதுவாகக் கேட்டேன்.
"ரேஞ்ச் ஆபிசருக்கு  இடம் மாற்றமாம்... போற போக்குல இங்கயிருந்த கொஞ்சம் தடிகளையும் ஏற்றிகிட்டு போறாராம்..." என்றான்.
கூட்டம் அதிகரித்ததைத்  தொடர்ந்து கூச்சலும் அதிகரித்தது.
"தார்பாயை அவுத்து லோடை எறக்கு..." சத்தம் அதிகரித்தது.
இதற்குள் ஒன்றிரண்டு பேர் லாரியின் மேல் ஏறத் தொடங்கினர்.
"நீங்க நெனக்கிறது மாதிரி லாரியில தடி ஒண்ணும் இல்ல... வீட்டுச் சாதனங்கள் மட்டும் தான் இருக்கு..." முத்துக்குமரின் அப்பா கைகளை கூப்பியவாறு அவர்களிடம் சொல்லிக்  கொண்டிருந்தார்.  அவரது குரல் உடைந்திருந்தது.
"அப்ப தார்பாயைத் தொறந்து காட்ட வேண்டியது தானே..."
கூட்டத்தில் சிலர் ஆவேசமாகிக் கொண்டிருந்தனர்.
முத்துக்குமரன் வாடிய முகத்துடன் அவனது அம்மாவை ஒட்டிக் கொண்டு வீட்டு முற்றதில் நின்று கொண்டிருந்தான். மழைத் தூறலில் நனையாதவகையில் தலைவழியாக சேலைத் தலைப்பை போட்டிருந்த அவனது அம்மா விசும்பிக் கொண்டிருந்தார்.
நான் முத்துக்குமரனின் அருகில் சென்று அவனது கையைப் பிடித்தேன். அவன் எதுவும் பேசாமல் நின்றான்.
கூட்டம் மேலும் அதிகரித்தது. சத்தமும் அதிகரித்தது.
அப்போது தான் வைத்தியரும், ஊர் முக்கியஸ்தர்கள் சிலரும் உள்ளே வந்தனர்.
அவர்கள் முத்துக்குமரனின் அப்பாவை தனியே அழைத்துச் சென்று ஏதோ பேசினர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த  சிலரை தனியே அழைத்துச் சென்று பேசினர். பேச்சின் போது சிலர் கைகளை உயர்த்தி ஆவேசமாய் சத்தமிடுவது  தெரிந்தது. அந்தப் பேச்சு சிறிது  நேரம் நீடித்தது.  ஒருகட்டத்தில் கூச்சல்  அடங்கியது. 

லாரி புறப்பட்டது.

கூட்டமும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு கலைந்து போய் கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் நான் முத்துக்குமரனைப் பார்க்க ரேஞ்ச் ஆபிஸ்  வீட்டிற்குப் போயிருந்தேன். வீடு பூட்டிக்கிடந்தது. இரவோடு இரவாக ஊருக்குப் போயிருக்கிறார்கள். அதன்பின் நான் முத்துக் குமரனை பார்க்கவில்லை.

ரேஞ்ச் ஆபிஸ் வளாகம் நிறையவே மாறியிருக்கிறது. நட்சத்திரக் கள்ளிகள் நின்ற இடத்தில்  கருங்கல் சுவர்,  கோட்டை போல் எழும்பி நிற்கிறது.  இப்போதெல்லாம் சிறுவர்களும், பதின்பருவத்தினரும் அங்கு விளையாடுவதில்லை போலும். கால்சவுட்டடி குறைந்து  மரங்களுக்கிடையில் புதர் மண்டிக்கிடக்கிறது. மூங்கில் கூட்டம் பெருத்திருக்கிறது.  தடிகளின் குவியல்கள் இல்லை. துருபிடித்த நிலையில் வேன்களும், மினி லாரிகளும், வள்ளங்களும் ஆங்காங்கே  கிடக்கின்றன. பழைய கட்டடங்கள் சிதிலமடைந்துக் கிடக்கின்றன.  புதிய கட்டடங்கள் சில எழும்பியிருக்கின்றன.

செண்பக மரங்கள்  இளமஞ்சள் நிறத்தில் நிறையப்  பூக்களை  மண்பாதையி்ல்   பாதையில்   உதிர்த்துப் போட்டிருக்கின்றன.

மோட்டார் சைக்கிளை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு ரேஞ்ச் ஆபிசரின் அலுவலக வாசலில் போய் நின்று, எதிரில் தெரிந்த அலுவலக பணியாளரிடம் "ரேஞ்ச் ஆபிசர் இருக்காங்களா..?" என கேட்கும்போதே "ஆனந்தகுமார்.."  என என் பெயரைச் சொல்லிக் கொண்டே வெளியே வந்து விட்டான் முத்துக்குமரன்.
வந்த கையோடு என்னை இழுத்து அணைத்துக் கொண்டான்.
"பார்த்து எத்தனை வருஷங்களாகிவிட்டது..." என்றவாறே உள் அறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தான். எனக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. சீருடையில் மிடுக்காக இருந்தான். அவன் அப்பாவின் சாயல் அதிகமாகவே தெரிந்தது.
ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம்.
"ஊரும், ஆபிசும் ரொம்பவே மாறியிருக்கிறது இல்லையா...?" என்றான்.
"ஆமாம்..." என்றேன் நான்.
அம்மா நலமாக இருப்பதாகவும், அப்பா காலமாகிவிட்டதாகவும்  சொன்னான்.
அப்பாவின் வேலைதான் தனக்கு கிடைத்துள்ளதாகவும், முதலில் வேறு சில இடங்களில் பணி செய்தாகவும்  சொன்னான்.
இதற்கிடையில் டீ வந்தது. டீயை குடித்துக் கொண்ட பேச்சைத் தொடர்ந்தோம். பேச்சு பால்ய காலங்களுக்குச் சென்றது. "ஆபிஸ் வளாகத்தில் முன்பு போல் சின்னப்பசங்க விளையாடுவதில்லை போல் தெரிகிறதே...?" என்றான்.
"சின்னப்பசங்க  இப்பயெல்லாம்  எங்க வெளயாடுறாங்க...? டி.வி. பெட்டிதானே அவுங்க  உலகம்...!  நீ தானே பகல், ராத்திரியிண்ணு இல்லாம இந்த ஆபிஸ்  வளாகத்தில  சைக்கிள் ஓட்டிக்கிட்டே இருப்ப... என்றேன்.
அவன் ஹ..ஹ..ஹ.... என்று சத்தமாக   சிரித்தான். எனக்கும் சிரிப்பு வந்தது.
டீ கொண்டு வந்த அலுவலக உதவியாளர் பெண், அறையின் கதவுப்  பக்கமே நின்று  கொண்டிருந்தார்.
"நீங்க உங்க அறைக்குப் போங்க அப்புறமா கூப்புடுறேன்..." என்று அந்தப் பெண்ணிடம் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னான். அந்தப் பெண் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
பின்னர்  கண்களை நாலாபுறமும் சுழற்றிப் பார்த்தான். ஏதோ சொல்ல வருகிறான் என எனக்குத்  தோன்றியது.
"ஆனந்த குமார்.. என்னோட பணிக்கு கொஞ்சம் உதவியா இருக்கணும்..."
"நானா... எப்படி.?"
"ஆமா நான் இந்த ஊருக்கு வரும் போது அதையும் நெனச்சிச்சிக்கிட்டு தான் வந்தேன்..."
"என்னது..?"
முத்துக்குமரன் ஒரு முறை கூட கதவுப் பக்கம் பார்த்துக் கொண்டான்... அவனது முகத்தில்  புன்னகை வெளிச்சமிட்டது.  அது செயற்கையான புன்னகையாகக் கூட எனக்கு தோன்றியது. 
"பட்டா நிலத்தில சொந்த மரத்தை வெட்டி வேற  எடங்களுக்குக் கொண்டு போறவங்களுக்கு  நான் தான் பெர்மிட் கொடுக்கணும்... அது போல மர அறுவை மில் வெச்சிருக்கவங்க... இன்னும் பலருக்கும் என்னோட ஒத்துழைப்பு அவசியம்... அப்படிப்பட்டவங்கள  நான் உன்னப் பார்க்க வரச் சொல்லலாம்மிண்ணு நெனைக்கிறேன்... நீ அவங்ககிட்ட,  நமக்குவாங்க வேண்டிய வாங்கணும்..." என்று  எனது முகத்திற்கு நேராய்  பார்த்துச்   சொன்னான்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது.  அதிர்ந்து விட்டேன். முகம் லேசாக வியர்த்தது.
மேசை மீதிருந்த டேபிள் வெயிட்டை கையில்  எடுத்து சுழற்றிவாறே மேல் சுவற்றை  அண்ணார்ந்துப்  பார்த்தேன். எனக்குள் அந்த நாள்... அதுதான்... முத்துக்குமரனும், அவனது அம்மாவும் அழுது கொண்டு நின்ற கூச்சலும், ஆதாளியுமான அந்த நாள்  கண் முன்னே வந்தது. சுவற்றிலிருந்து நான் பார்வையை விலக்கவில்லை.

"நீ...என்ன யோசிக்கிறண்ணு தெரியுது...
இந்த சேரில... இந்தப் பதவியில வந்து உட்கார்ந்திருக்கிறண்ணா.... அதுக்கு  எவ்வளவு போராட்டம்... எவ்வளவு செலவு..  எத்தனைக் கைகளுக்கு அள்ளிப் போட்டிருக்கேன்... இனியும் எத்தனைக் கைகளுக்கு அள்ளிப் போடணும்...  ஒவ்வொரு நாளும் எவ்வளவு சவால்.. எவ்வளவு செலவு... என்று உற்சாகமில்லாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்  அவன். 

நான் இதற்கிடையில் செல்போனை எடுத்து  மகிக்கு மிஸ்டு கால் கொடுத்தேன்.  அந்த இடத்தில் கனத்த மௌனம் நிலவியது.

சற்று நேரத்தில் மகியிடமிருந்து  திரும்ப அழைப்பு வந்தது.

"ஸ்கூல்லயிருந்து  ஹெட் மாஸ்டர் கூப்பிடுகிறார்... நமக்குப்  பெறகு பேசலாம்..." என்று முத்துக் குமரனிடம் கூறிவிட்டு இருக்கையை  விட்டு எழுந்தேன்.
அவன்  முகத்திலிருந்த மலர்ச்சி வடிவது தெரிந்தது. நான் கிளம்பினேன்.

பாதையில் அழகாய் உதிர்ந்துக் கிடந்த செண்பகப் பூக்கள் இப்போது  மண்படர்ந்து கசங்கிக்  கிடந்தன. யாரோ   அவற்றை மிதித்து நடந்திருக்கக் கூடும்?

நேராக வீட்டுக்கு வந்துவிட்டேன்.
"என்ன முகம் வாடி கெடக்கு...? நண்பரப் பார்க்கப்போய் என்னாச்சு..." மகி கேட்டாள்.
"பார்த்தேன்..."
"என்ன நடந்தது...?"
நடந்ததை அவளிடம் சொன்னேன்.
"அப்ப.. புரோக்கராகவா...?"
"அதுபோலத் தான்..."
"நல்ல.... நண்பர்... ?    உங்கள   கூட்டு நிக்கச்..."
"அவன குத்தம் சொல்றதுக்கில்ல... அவனோட சட்டைப் பாக்கெட் பக்கம் நோக்கியும் பல  கைகள் நீளும் தானே..? அதனால தான் அவனும் கை நீண்ட வேண்டியிருக்கு..."  என்று அவளது பேச்சை இடைமறித்துக் கூறினேன்.
"அப்ப நீங்க கடைசியா.. என்ன  சொல்லிகிட்டு வந்தீங்க...?"
"பிறகு பேசலாமிண்ணு   எழுந்து  வந்துட்டேன்..."
செல் போன் அடித்தது.
"யாரு...?" மகி கேட்டாள்
"முத்துக்குமரன் தான்.."
"என்ன பேசப் போறீங்க...?"
நான் போனை எடுத்து  அழைப்பைத் துண்டித்தேன்.
---------------------------------------------------------------------------