செவ்வாய், 6 டிசம்பர், 2011




மு. சுந்தரம் - ஆசிரியருக்கான இலக்கணம்


ஆசிரியர் மு. சுந்தரம் அவர்களைப் பார்த்து வியக்கின்றேன். பேச்சிப்பாறை அரசுப் பழங்குடியினர் உண்டுறைவிட மேல் நிலைப் பள்ளியில் வேதியல் ஆசிரியர் மு. சுந்தரம். திருநெல்வேலிக்காரர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சிப்பாறை பள்ளியில் ஆசிரியராக தொடர்கிறார்.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக அவரை நான் பார்க்கின்றேன். மாணவர் நலன், பள்ளிக்கூட நலன், பிறரோடு நல்லுறவு, ஆழ்ந்த படிப்பு, அறிவு நுட்பம், பேச்சாற்றல், தகவல் பரிமாற்றம், தியாகம், அர்ப்பணிப்பு என்பன போன்ற ஆளுமைகளின் மொத்த உருவம் தான் ஆசிரியர் சுந்தரம்.
பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளது அவரது சிறப்பு. ஆசிரியர் சுந்தரத்தின் பணியைப் பாராட்டி குமரி அறிவியல் பேரவை ஆசிரியர் திலகம் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
குமரி மாவட்டம் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து மாணவர்கள் நலனுக்காக, அவர்களின் உயர்கல்விக்காக அவர் ஆற்றும் பணிகள் அளப்பரியது. 2011 டிச. 6 ல் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை ஆசிரியர் மு. சுந்தரத்திற்கு அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆசிரியர் சுந்தரம் அவர்களை வணங்குகிறேன்.

வியாழன், 1 டிசம்பர், 2011

பேராசிரியர் தியாகசுவாமி


பேராசிரியர் தியாகசுவாமி ஒரு பல்கலைக் கழகம்


பேராசிரியர் தியாகசுவாமி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் 36 ஆண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிவர். தனது வாழ் நாளில் பெரும் பகுதியை கல்விப் பணிக்காகவும், இளைஞர் மேம்பாட்டு நலனுக்காவும் செலவிட்டவர். நடமாடும் பல்கலைக் கழகம் என்ற அறியப்பட்ட இவர், தனது வருவாயில் பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தினார். தனது வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை அமைத்ததுடன், பத்திரிகைகளில் வரும் செய்திகளை தனித்தனி தலைப்புகளாகப் பிரித்து அவற்றையும் தொகுத்து வைத்திருந்தார்.
மார்த்தாண்டம் இலக்கியப் பேரவை அமைப்பை நிறுவி, அதன் தலைவராக இருந்தார். குமரி அறிவியல் பேரவை, போதை தடுப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்பட்டதுடன் ஏராளமான இளையோர் மன்றங்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டுவந்தார். தனது கல்லூரி பேராசிரியர் பணி நாள்களில் விடுப்பு எடுக்காமல் மாணவர் படிப்பு நலனைக் காத்தவர்.
இவரது பணிகளைப் பாராட்டி குமரி தமிழ் எழுத்தாளர் இலக்கியப் பட்டறை தமிழ்ச் சுடர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் இதே அமைப்பு இவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு தமிழ் சிற்பியின் பயணம் என்ற நூல் மூலமாக பதிவு செய்துள்ளது. குமரி மாவட்ட போதை தடுப்பு இயக்க அமைப்பாளர் வேலையன், இவரது பேச்சுக்களையும், சிறுகதைகளையும் தொகுத்து சிந்தனை முழக்கம் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் பதிவுத் திருமணம் என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
ஒரு பேராசிரியருக்கு இலக்கணமாகத் திகழ்ந்துடன், சமூக அக்கறையுடன் எளிமையான வாழ்க்கை நடத்திய இவர், 27 நவம்பர் 2011 ல் இயற்கை எய்தினார். அவர் நம் மத்தியில் நடமாடிய பல்கலைக் கழகம். அவரது மறைவு குமரி மாவட்ட தமிழ் ஆர்வலர்களுக்கும், மனித நேயச் செயல்பாட்டாளர்களுக்கும் பெரும் இழப்பு.

சனி, 26 நவம்பர், 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம்





தம்பி வெட்டோத்தி சுந்தரம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு தொடர் சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். .
படம் தொடங்குவதற்கு முன், இயக்குனர் வி.சி. வடிவுடையான் திரையில் தோன்றி, குமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் ஆனால் இந்த மாவட்டம் தான் அக்யூட்ஸ்டுகளும் நிறைந்த மாவட்டம் என்ற குற்றப் பத்திரிகையை வாசிக்கிறார். அதற்கேற்றாற்போல் படத்தின் கதையும் அமைந்துள்ளது.

அரபிக் கடலின் காலடியில் கிடக்கும் கிராமம் பொழியூர். அங்கு
ஆசிரியர் வேலைக்கான படிப்பு படித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்யும் கதாநாயகன் கரண், அவனுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. அதற்கு அடுத்தப்படியாக போலீஸ் தேர்வுக்கு செல்கிறான். அதுவும் கிடைக்கவில்லை. உள்ளூர் அரிசி கடத்தும் கும்பலைச் சேர்ந்த சித்தப்பு சரவணனுடன் நட்பு ஏற்படுகிறது. அவன் கடத்தல் தொழிலுக்கு அழைக்கிறான். கதாநாயகன் மறுக்கிறான். இதற்கிடையில் உள்ளூர் பஸ்சில் பயணம் செய்யும் போது டிக்கெட் எடுப்பதற்காக எடுத்த ஒரு ரூபாய் நாயணம் நழுவி அதே பஸ்சில் அமர்ந்திருக்கும் கதாநாயகியான கல்லூரி மாணவி அஞ்சலியின் ஜாக்கெட்டுக்குள் புகுந்துவிட, இருவருக்குள்ளும் காதலும் புகுந்துவிடுகிறது.

வேலை கிடைக்காத விரக்தியில் கரணின் நண்பன் தூக்குப்போட்டு தற்கொ லை செய்கிறான். ஒரு கட்டத்தில் சொந்த வீடு ஜப்தி போகும் நிலையில் அதனை மீட்க கடத்தல் தொழிலுக்கு தாவுகிறான் கதாநாயகன். அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம் காதல், கடத்தல், மோதல், மரணம் என விறுவிறு திருப்பங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளின் பிற்பகுதி அல்லது தொண்ணுறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு தொடர் நிகழ்வை திரைப்பதிவாகக் கொண்டுவந்த இயக்குனர் வி.சி. வடிவுடையானுக்கு பாராட்டுக்கள். இந்தப் படம் தான் முழுக்க முழுக்க குமரி மாவட்டத்தைக் கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்ட முதல் படமாக கருதுகிறேன். அலையடிக்கும் பொழியூர் கிராமம் தொடங்கி குமரி மாவட்டத்தில் பல இடங்களில் குறிப்பாக குலசேகரம் அருகே மங்கலம், தோவாளை, மார்த்தாண்டம், களியக்காவிளை என பல இடங்களில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அறிமுக இயக்குனர் வி.சி. வடிவுடையான் தனது முதல் படத்திலேயே தொட்டிருக்கும் கதை மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை ஆகியவை மிகுந்த கவனம் பெறுகிறது. மட்டுமல்ல இது ஒரு ஒரு பட்ஜெட் படம் என்கின்றபோது தனக்குக் கிடைத்த வாய்ப்பை இயக்குனர் நிறைவாய் செய்திருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

எனினும் சில கருத்துகளை பதிவு செய்யாமல் இருக்கமுடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளில் இறுதிப் பகுதி முதல் தொண்ணுறுகளின் மையப்பகுதி வரை வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு மிகமுக்கியப் பிரச்னையாக இருந்தது. மட்டுமல்ல அகஸ்தீஸ்வரம் பகுதியில் வேர்விட்டு கிளைபரப்பிய கொலை வெறி ரவுடிகள், விளவங்கோடு பகுதியில் பன்றிமலை, செண்பகத்தரிசு, பொழியூர் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் வடிப்பு என பல பிரச்சனைகளை, சவால்களை இந்த மாவட்டம் சந்தித்தது.

இதில் அலையடித்துக் கொண்டிருக்கும் பொழியூர் கிராமத்தில் சாராயம் வடிப்பது குடிசைத் தொழில். இதே காலகட்டத்தினை மையமாகக் கொண்டு தான் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகியோரின் காதல் காட்சிகளில் நேசமணி போக்குவரத்துக் கழக பஸ்சில் தொடங்குகிறது. ஆனால் அதே காலகட்டத்தை மையமாகக் கொள்ளமால் படம் தடுமாறுகிறது.

கதாநாயகன் தனது நண்பர்களுடன் அமர்ந்திருக்கும் மங்கலம் பாலத்தின் அருகில் கட்டப்பட்டிருக்கும் பிளக்ஸ் போர்டு, தற்கொலை செய்யும் கரனின் நண்பர் அழுது புலம்பும் பஸ் ஸ்டாண்டில் வந்து செல்லும் தற்காலத்திய பஸ்கள், வில்லன் கோஸ்டியினர் சுமோ காரை வெடி குண்டால் தகர்த்து விட்டு மண் அள்ளிப்போட பயன்படுத்தும் பொக்ளின் இயந்திரம். இதற்கு மேலாக செல்போன்கள். என ஏராளம் காலத்தை மீறி நிற்பவை. கரனுக்கு, அஞ்சலிக்கும் இடையில் ரெமான்ஸ் கட்சிகளைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகளும், குமரி மண்ணில் அதிக இயற்கை வனப்பும் இருக்கையில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்யாமல் விடப்பட்டுள்ளது. குமரி வட்டார வழக்கிலுள்ள அதிகச் சொற்கள் இடம் பிடித்துள்ளன. ஆனால் பாத்திரங்கள், கரன் உள்பட பேசுவது இருவேறு வழக்கு மொழிகளாக தென்படுகிறது.

அரிசி மற்றும் சாராயம் கடத்துவதை மட்டும் காட்டும் இந்தப் படம் பொழியூர் பகுதியில் குடிசைத் தொழிலாக சாராயம் வடிப்பதையும், சாராயத்திற்காக கச்சாப் பொருள்களில் ஒன்றான கருப்புகட்டி வாங்கச் செல்லும் பெண்கள், தங்கள் தாலிச் சங்கிலிகள் உள்பட பொட்டு தங்க நகைகளை கருப்புக்கட்டி வியாபாரிகளின் அடகு வைத்து கருப்புக் கட்டி பெற்றுச் செல்லும் உண்மை நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கலாம்.

எனினும் விறுவிறுப்புடன் உண்மைச் சம்பவம் தொடர்புடைய ஒரு திரைப்படத்தை கொடுத்த வி.சி. வடிவுடையானுக்கும், நேர்த்தியாக நடித்த கதாநாயகன் கரன், நாயகி அஞ்சலி், வில்லன் சிலுவை, சித்தப்பு சரவணன், கஞ்சா கருப்பு ஆகியோரைப் பாராட்டுக்குரியவர்கள். இதில் வில்லன் சிலுவையின் நடப்பு தான் என்னை அதிகம் கவர்ந்தது.

இறுதியாக குமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் அதிகம், இங்கு தான் அக்யூஸ்டுகளும் அதிகம் என்று கூறும் இயக்குனர் வடிவுடையானின் கருத்தில் முரண்படுகிறேன். குமரி மாவட்டத்தில் வரதட்சிணை குற்றங்கள், தற்கொலைகள் அதிகமே தவிர வடிவுடையான் சொல்லும் அர்த்தம் கொண்ட வன்முறை சார்ந்த குற்றங்கள் குறைவு.

புதன், 26 அக்டோபர், 2011

மீறப்படும் பத்திரிகை தர்மம்

இப்போதெல்லாம் ஒரு சில தமிழ்ப் பத்திரிகைகளை எடுத்துப் பார்க்க நேர்ந்தால் அதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ஜனநாயகத்தின் தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகைகளில் இப்போதையை போக்கு, ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தில் குழிதோண்டும் செயலாகவே நினைக்கத் தோன்றுகிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது தமிழ் பத்திரிகைகள் சில அரங்கேற்றிய செயல்களைத் தான் வேதனையோடு எழுதுகிறேன்.

ஒரு பத்திரிகையில் ஒரு செய்தியை செய்திக்குரிய அமைப்போடு date line கொடுத்து வெளியிடுவதும், விளம்பரத்தை கட்டம் போட்டு அதன் கீழே advt என்று பதிவு செய்வதும், விளம்பரதாரர் கட்டுரையாக இருப்பின் advertorial என்று பதிவு செய்வதும் மரபு.
ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த மரபு முழுமையாக மீறப்பட்டு காற்றில் விடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களைக் குறித்த விளம்பரங்களை கட்டணம் பெற்றுக் கொண்டு, அல்லது 1000, 500 என ஒரு குறிப்பிடட அளவு பத்திரிகைகளை சம்மந்தப்பட்ட வேட்பாளர் வாங்க வேண்டுமென்ற நிபந்தனையோடு செய்தி போல் விளம்பரங்களை, பத்திரிகைகள் வெளியிட்டன.

சில பத்திரிகைகள் பேக்கேஜ் முறை என ஒரு குறிப்பிட்ட தொகையை வேட்பாளர்களிடம் பெற்றுக் கொண்டு அவர்கள் சார்ந்த செய்திகளை குறிப்பிட்ட நாள்கள் வெளியிட்டன. வாசகர்கள் இவை அனைத்தையும் செய்தி என்று கருதும் நிலை ஏற்பட்டது. பல வாசகர்கள் உண்மையான செய்தி எது, விளம்பரம் எது (அல்லது போலிச் செய்தி) என்று குழம்பிப்போனார்கள். paid news என்று கூறப்படும் இத்தகைய செய்திகள் வாசர்களை ஏமாற்றும் செயலாகும். மட்டுமல்லாமல் ஒரு நாளிதழ் தனது வாசகனையே ஏமாற்றும் நடவடிக்கையாகத் தான் சமூக நலம் கொண்ட பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்குமுன் வட இந்திய மாநிலங்களில் இதுபோன்ற செயல்களைப் பத்திரிகைகள் அரங்கேற்றியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் சென்று அவை விசாரணை நிலையிலுள்ளன.
தேர்தல் விதிகள் படி ஒரு வேட்பாளர் இத்தனை ரூபாய் தான் செலவளிக்க வேண்மென்ற நிலையில் paid news க்காக வேட்பாளர்கள் செலவழிக்கும் தொகை தேர்தல் கணக்கில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பில்லை. இதனால் வேட்பாளர்களின் தேர்தல் விதி மீறல்களுக்கு பத்திரிகைகள் துணைபோகின்றன.
பத்திரிகைகளின் இத்தகைய செயல்பாடு வலுவான ஜனநாயகத்திற்கும், நல்லவர்கள் ஆட்சியில் வருவதற்கும் எதிரான செயல்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து தலைப்புச் செய்திகள் வெளியிடும் இத்தகைய பத்திரிகைகள் தங்கள் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டாமா...? ஏற்கனவே ஒவ்வொரு செய்தியிலும் தனது மூக்கை நுழைத்து ஏதாவது ஒரு கமென்ட் அடித்து அதனை வெளியிடும் இத்தகைய பத்திரிகைகள். தற்போது காசேதான் கடவுளடா என்ற பாணிக்கு இறங்கியுள்ளது வேதனையிலும், வேதனை. வாசகர்கள்தான் விழிப்பாய் இருக்க வேண்டும்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

மௌனம்

ஒரு மௌனத்தைச்
சொல்லிவிட்டுப் போய்விட்டாய்...

அப்போது
உன் உதட்டுப் பள்ளத்தாக்கில்
விழுந்த நான்
இன்னும் எழுந்திருக்கவில்லை..

குளிரும் ராத்திரிகளில்
ஒரு உஷ்ணப் பெருமூச்சு..
நான்
கம்பளியாய்க் கொள்வேனே..

வெப்பம் தகிக்கும்
வெயில் ராத்திரிகளில்
ஒரு இதழசைவு...
நான் தென்றலாய்க் கொள்வேனே...

எதுவுமில்லை
மௌனத்தைத் தவிர
எதுவுமில்லை...

ஒரு நத்தைக் குஞ்சு
இழுத்துச் செல்லும்
ரயில் வண்டி ராத்திரிகளில்
வாய் முளைத்த பகல் மௌனங்கள்
என்னருகே வருகின்றன...

பாதம்.. கணுக்கால்... கொலுசு - என
அவைகள்-உன்
அவையங்கள் குறித்து
நலம் விசாரிக்கின்றன...

என்ன செய்வது
பதில் சொல்வதற்குள்
ஒவ்வொரு நாளும்
கிழக்கு பூத்துவிடுகிறது...

நான் மட்டும்
வற்றிய மார்பு சப்பும்
பசித்த பச்சிளமாய்
உன் நினைவுகளோடு...

வியாழன், 1 செப்டம்பர், 2011

கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப் ஆண்டு விழா


கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப்பின் 6 வது ஆண்டு விழா நாகர்கோவிலில் ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பத்திரிகை செய்தியாளர்கள், வார இதழ் செய்தியாளர், தொலைக் காட்சி செய்தியாளர்கள் மற்றும் புகைப் பட கலைஞர்களைக் கொண்ட அமைப்பு கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப் PRESS CLUB OF KANYAKUMARI DISTRICT.
செய்தியாளர்கள், குறிப்பாக கிராமப் புறங்களில் பணியாற்றும் பகுதி நேரச் செய்தியாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு மலர் ஒன்றை வெளியிட்டு ஆண்டு விழாவை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 6 வது ஆண்டு விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி அரங்கில் ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் தா. டென்சன் தலைமை வகித்தார்.
பொருளர் ஜே.எம். பெகின், ஆண்டு விழா மலர்க்குழு அமைப்பாளர் ஜே. லாசர், மலர் குழு உறுப்பினர்கள் குமுதம் செல்வராஜ், ஜி. முத்துக் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, துணைத் தலைவர் என். கமலன் அனைவரையும் வரவேற்றார். கிளப் செயலர் ஜி.எஸ். ராமபத்ரன் அறிக்கை சமர்பித்து உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் குமரி மாவட்ட ஆட்சியர் சோ. மதுமதி ஆண்டு விழா மலரை வெளிட அதனை எழுத்தாளர் முனைவர் எஸ். ஸ்ரீகுமார் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மறைந்த கிளப் உறுப்பினர் எம்.சி. கோபகுமாரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்பட்டது, மட்டுமல்ல மூத்த உறுப்பினர் தினகரன் தாசையாவிற்கு ரூ. 10 ஆயிரம் பொற்கிழி வழங்கப்பட்டது.
வாழ்த்திப் பேசிய எழுத்தாளர் முனைவர் எஸ். ஸ்ரீகுமார், கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ஜான் ஜேக்கப், மாவட்ட பாசனத்தார் சபைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ ஆகியோர் தங்களது பேச்சில் பகுதி நேரச் செய்தியாளர்களின் ஆதங்கங்களைப் பதிவு செய்து கொண்டனர். குமரி மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு செய்தியாளர்களுக்கான சலுகைகளை பெற்று தர முயற்சிப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மூத்த செய்தியாளர்கள் புலவர் மு. அருளப்பன், ஜி.எஸ். ராமபத்ரன், என். கமலன், எஸ். நஜ்முதீன், ஐ. கிருஷ்ணராஜா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு மலருக்கான அட்டைப் படம் வரைந்த ஓவியர் வாமனன், ஆசிரியர் திலகம் எம். சுந்தரம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். செயற் குழு உறுப்பினர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.
நிகழ்வில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஊருக்குப் போன உலக மயம்



அந்த உலகம்
புதியதாய் இருந்தது.

அலுமினியப் பறவைகள்
எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தன.

அழகில்லாதவர்கள்
அங்கில்லை.

ஒப்பனையும்
கற்பனையும் கொண்டவர்களுக்கே
அங்கு குடியுரிமை.

நுகராதவன்
சுவாசிக்கலாகாது
இது சட்டம்.

எனது-மூளைக்குள்ளும்
கணினி இடம் பெயர்ந்திருந்தது
நரம்புகளில் - மின்சாரம்.

அந்த மரம்
அங்கு நின்றது
உலுக்கிய போது - அது
கரன்சிகளை உதிர்த்தது.

என் உறவு யாது
எது என் மொழி
எனது தேசம் எது
எல்லாம் மறந்தெனக்கு.

உடல் மொழியும்
ஊடல் மொழியும் வசப்பட்டது.

நுகர்வின் மயக்கத்தில்
பேதமற்றுக் கிடந்தன
பகலும்-இரவும்.

உரசிய உதடுகளும்
ஓங்கியக் கோப்பைகளுமாய்
துள்ளிக் குதித்ததில்
தலையில் மோதியது வானம்.

ஒரு நாள்
உலுக்கிய போது
கரன்சி மரம்
கற்களை உதிர்த்தது.

மெல்லனவாய்
நினைவில் வந்ததது-
எனது தேசம்
எனது மொழி
எனது தாய்.

முதியோர் இல்லத்தில்
முனகிக் கொண்டிருக்கும்
தாய்க்கு
என்னை நினைவில்லை.

உண்மையில் நான்தான்
தாயை
எப்போதோ மறந்திருக்கிறேன்....

திங்கள், 23 மே, 2011

மக்கள் புரட்சி

நடந்து முடிந்த தமிழகப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது. மக்களுக்குத் தான் எத்தனைக் கோபம்.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையா.. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வேலை நியமண தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு பல ஆயிரம் பேர் மீண்டும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றனர். சென்னை நகர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வெளி நாட்டு உதவியுடன் பல்வேறு தொழிற்சாலைகள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம். 108 ஆம்புலன்ஸ் சேவை என எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை அந்த அரசு செய்தது.
ஆனாலும் வீழ்ச்சி. ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது போல இலவசங்களைக் கொடுத்து விட்டு இமாலய ஊழல்கள் செய்தனர். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தனர். சுனாமி போல் சுழன்றடித்த மின் வெட்டால் தமிழகம் இருண்ட போது உருப்படியாய் எதுவும் செய்வில்லை. குடும்ப உறுப்பினர்களின் கோரத் தாண்டவம், எல்லாத் துறையிலும் ஆதிக்கம் என மக்களுக்கு கொடுத்த இன்னல்கள், மக்கள் நலப்பணிகளை எல்லாம் விழுங்கி்க் கொண்டது. இடைத் தேர்தல்களில் வாக்காளர்களை விலைக்கு வாங்கி செயற்கையான வெற்றி பெற்று மக்களின் உண்மையான மனநிலைய நிலையை புறம் தள்ளினர். அல்லது கவனிக்க மறந்தனர்.
தமிழகத்தில் திராவிட இனத்தின் அரணாக ஒடுக்கப்பட்டு நொறுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவர்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்றும், அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வந்த இயக்கம் ஒருகட்டத்தில் அதிலிருந்து சறுக்கியது பெரும் சோகம். திமுக ஜாதி அரசியலுக்குள் சிக்கியதும், திமுகவின் பெரும் தலைகள் ஜாதியத்தின் ஆதரவாளர்களாய் ஆதிக்க சக்திகள் போல் வலம் வந்ததும். திமுக தலைமையின் அங்கத்தினர்கள் பகுத்தறிவு சிந்தனைக்கு எதிரானப் போக்குகளைக் கொண்டதும், அந்த இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்ற கேள்வி நோக்கி மக்களை குறிப்பாக இன உணர்வாளர்களை சிந்திக்க வைத்தது. திமுகவின் மாறிய சிந்தனைப் போக்கு மக்களுக்கு இலவசமாய் எதையாவது வீசி அவர்களை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு ஆடம்பரமாக அரியணையில் அமர்ந்திருக்க வேண்டுமென்பதாகத் தான் இருந்தது.
ஆனால் மக்கள் எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டு காத்திருந்தனர். மக்களுக்குத் தான் எத்தனைக் கோபம். நியாயமாக நடைபெற்ற ஓர் தேர்தலில் ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளனர். யார் வந்தாலும் கவலையில்லை.. திமுக அல்லது திமுக கூட்டணி வரக்கூடாது என்ற முடிவை எழுதி விட்டனர்.
அதனால் தான் அதிமுக அரியணை ஏறிவிட்டது. அதிமுகவும் இந்த மக்கள் புரட்சியை மனதில் கொள்வது நல்லது.

வெள்ளி, 6 மே, 2011

வல்லரசு

அவர்களிடம்
அரிவாள் இருக்கின்றது
கத்தி இருக்கின்றது
கடப்பாரை இருக்கின்றது
ஏன்...
அணு குண்டுகள் கூட இருக்கின்றதாம்.

நெருங்க முடியாதாம்
வல்லரசாம்.

அங்கே
வறுமைப் பானைகளில் தான்
பட்டினியை சமைக்கின்றார்களாம்.

இரட்டைத் டம்ளர்களின் தான்
ஜாதிகளை ஆற வைக்கின்றார்களாம்.

பாப்பா பட்டிகள்
ஜனநாயகத்தின் உதாரணங்களாம்.

ரத்ததானம்
மனிதனுக்கும் மண்ணுக்கும் தானாம்.
அதற்கு
மதங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாம்.

அவர்களிடம்
அணு குண்டுகள் கூட
இருக்கின்றதாம்..

நெருங்க முடியாதாம்
வல்லரசாம்...

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

வெட்கப்பட வேண்டாம்..




இன்னும் பெரிய கோப்பைகளை
வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள்
பெருத்த வயிறுகளுக்கு
இதைவிட பெரிய கோப்பைகள் வேண்டுமென்று
நாம்
உணர்ந்துள்ளோம்.

செந்நிற திரவமோ
கருநிற திரவமோ
உங்கள் கோப்பைகளில்
எப்போதும்
நிரம்பி வழிந்து கொண்டேயிருக்கட்டும்.

நீங்கள்
இன்பம் என கருதுவதைத் தானே
நாம்
தரவேண்டும் ?

உங்களில் பலர்
வெட்கத்துடனும்
புன் முறுவலுடனும்
புட்டிகளுக்காக
வரிசையில் நிற்பதை
நாம்
கண்டு வருகிறோம்..

வெட்கப்பட வேண்டாம்
எனெனில்
நாமே
வெட்கப்படுவதில்லை...

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சுற்றுச் சூழல்


தமிழகத்தின் குன்றுகளை உடைத்து கேரளாவிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன ?


கன்னியாகுமரி மாவட்டம் களியல் சந்திப்பில் ஒரு சகோதரர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். ஆரம்ப கல்வி மட்டுமே கற்ற அவருக்கு, சுற்றுச் சூழல் குறித்து இருக்கும் கவலை, நம்மில் பலருக்கு இல்லை. அந்த சகோதரர் காங்கீரீட் கட்டுமானங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது குறித்து பல் வேறு சுற்றுச் சூழல் அமைப்புகளுக்கும் அரசுக்கும் தொடர் கடிதங்கள் எழுதி வருகிறார். ஆனால் அவரது கடிதங்களுக்கு எந்த நடவடிக்கைகளும் இல்லை.
இந்தியாவில் சுனாமிக்கு பிறகு சுற்றுச் சூழல் குறித்த அக்கறை பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் அதனை முழுமையாக உணர்ந்ததாக தெரியவில்லை.
தமிழகத்தில் தற்போது அனைத்தையும் விற்று காசாக்குவது என்ற நோய் வேகமாக பரவிவருகின்றது. இதில் ரீயல் எஸ்டேட் தொடங்கி பாறைகள், குன்றுகள் என எல்லாவற்றையும் உடைத்து விற்று தங்கள் கஜானாவை நிரம்பி விட வேண்டுமென்று அரசியல் பிரமுகர்கள், அல்லது அவர்களது பினாமிகள் துடித்துக் கொண்டிருகின்றனர்.
இதில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுக்கும் வித்தியாசமில்லை.
இதன் ஒரு பகுதியாகத் தான் இயற்கை வளம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இயற்கை அரணாக திகழும் பாறைகள் மற்றும் குன்றுகளை உடைப்பதும், தினம் நூற்றுக்காணக்கான லாரிகள் மணல் மற்றும் பாறைத் துகள் ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு செல்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தை விட கேரளாவில் அதிக அளவு பாறைகளும், குன்றுகளும் உள்ள நிலையில் தமிழகத்திலுள்ள பாறைகளை உடைத்து கேரளாவிற்கு கொண்டு செல்ல என்ன அவசியம் வந்தது என்ற கேள்வி ஒவ்வொரு சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் மனதில் எழும்பும் நியாயமான கேள்வியாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லைக் கிராமமான களியல் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த கல்குவாரி நிறுவனம் ஒன்று பாறைகளை உடைத்து அதன் துகளை தண்ணீரில் கழுவி எம்-சான்ட் என்று செயற்கை மணலாக மாற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கிறது. இதற்காக இங்குள்ள கோதையாற்றிலிருந்து தினம் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுத்துத் வருகின்றது. இதற்காக விதிகளை மீறி மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளது. இதனை தடுக்க பொதுப்பணித் துறை முன்வரவில்லை. 50
டன் சுமையோடு மணல் அல்லது பாறைத் துகள் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும், அதனால் பிற வாகனங்களில் பயணிப்போருக்கு நேர விரயமும், பிற வாகனங்களுக்கு கூடுதல் எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. இது தவிர அதிக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகளால் குமரி மாவட்டதில் தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்துச் சாலைகளும் சேதமடைந்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் அழகான சாலை என்றால் அது ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையாகத் தான் இருக்கும். பரந்து விரிந்து கிடக்கும் சிற்றாறு அணையின் கரைப் பகுதி வழியாக இருபுறமும் பூத்துக் குலுங்கி நிற்கும் கொன்றை மரங்களுக்கு மத்தியில் செல்லும் சாலை இயற்கை பிரியர்களை, இறக்கை கட்டி பறக்க வைக்கும் அழகு கொண்டது. ஆனால் அந்த சாலை இப்போது கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறிய சாலை போல் காட்சியளிக்கின்றது.
இத்தகைய சேதங்களையும், இழப்புகளையும் கணக்கிட்டால் அரசுக்கு மணல், அல்லது பாறைத் துகள் மூலம் கிடைக்கும் வருவாய் வெறும் கொசுறு தான். குத்தகை தாரர்களுக்கும் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் கொள்ளை லாபம்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் தமிகத்தில் பாறைகள், குன்றுகள் எதிர்காலத்தில் இருக்குமா... நமது சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுமா... அனைத்தையும் விற்று காசாக்குவது தொடருமா... தமிழத்தின் குன்றுகளை உடைத்து கேரளாவிற்கு அனுப்புவதற்கான அவசியம் என்ன.. கேள்விகள் ஏராளம்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ரோபோக்கள் போதும்

தன்னைத் தானே
வெட்டிக் கொண்டு
செத்துப் போனான் பா.கி.

கணினியிலிருந்து வெளியேறிய
கனலில்
கருகிப் போனார்கள்
தினக் கவர்ச்சிப் பத்திரிகை
ஊழியர்கள்

நாளை
நட்டு வைத்திருந்த
சூலாயுதத்தில் விழுந்து
செத்துப் போகக் கூடும்
ராம சங்கரன்

நீதி மன்றங்களுக்கு
சாட்சி முக்கியம்
மனசாட்சி ?

இனி
தீர்ப்புகளை
ரோபோக்கள் சொல்லும்..

சனி, 29 ஜனவரி, 2011

மாத்தூர் தொட்டிப் பாலம்





மாத்தூர் தொட்டிப்பாலம்

மாத்தூர் தொட்டிப்பாலம், ஆசியாவின் அதிசயம், சுற்றுலாப் பயணிகளை தாலாட்டும் தொட்டில், அதன் மேல் பகுதியில் மெல்லியதாய் வீசும் காற்றுக்கிடையில் நின்று கொண்டு பச்சைப் பசேலென விரிந்து கிடைக்கும் இயற்கை வனப்புகளை ரசிப்பது அலாதியானது.
எத்தனை உயரம்... எத்தனை பிரம்மாண்டம்... ஆற்று வெள்ளத்திற்கு மத்தியில் இத்தனை உயரத்திற்கு அந்த வசதியில்லாத காலத்தில் எப்படி எழுப்பினார்கள் இந்த அதிசயத்தை என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆம். 1969 ம் ஆண்டு குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதி பாசனத்திற்கு சிற்றாறு அணையைக் கட்டி, அதற்கான கால்வாயை வெட்டும் போது இப்படி ஒரு இக்கட்டில் சிக்கி விட்டோமே என்று பொறியாளர்கள் எண்ணியிருக்கக் கூடும். அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை மாத்தூரில் குறுக்காக 100 அடி ஆழத்தில் பாய்ந்து செல்லும் பரளியாற்றைக் கடந்து எப்படி கொண்டு செல்வது ? உண்மையில் சவாலான பணி தான். சாதித்திருக்கிறார்கள் நமது பொறியாளர்கள்.
1240 அடி நீளம், 101 அடி உயரம், 29 தூண்கள் என பிரமாண்டமாய் நிற்கிறது தொட்டிப்பாலம். ஒரு பக்கம் கால்வாய், அதற்கு இணையாக மக்கள் நடந்து செல்ல நடைபாதை.
தமிழக சுற்றுலாத் துறையும், குமரி மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் பஞ்சாயத்துகளான அருவிக்கரை, வேர்க்கிளம்பி நிர்வாகங்களும் இங்கு எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் பல வசதிகளை செய்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு இப்பகுதியில் உற்பத்தியாகும் அன்னாசிப் பழங்களும், வருக்கை பலாப்பழங்களும் கிடைக்கும்.
வாருங்கள்.. இயற்கை இங்கு உங்களுக்காக தொட்டில் கட்டி காத்திருக்கின்றது. இது உங்கள் இதயத்தை கொள்ளைக் கொள்ளும் இடம்.
நாகர்கோவிலிலிருந்து தக்கலை அழகியமண்டபம் திருவட்டார் மாத்தூர் வழியாக இந்த பாலத்திற்கு செல்லாம். திருவட்டாரிலிருந்து மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு 3 கி.மீட்டர் தூரம்.