ஞாயிறு, 6 டிசம்பர், 2015


சிறுகதை


ராஜகோபாலும்.. ரெக்கார்டு பிளேயரும்...


லாசர் ஜோசப்

 
    ராஜகோபாலுக்கு  இரண்டு மூன்று நாள்களாக  அந்த வீட்டில் தான் பெயின்டிங் வேலை.    பெயின்டிங் கான்டிராக்டரான செல்வமணியோடு   வேலைக்கு அவர் செல்லத் தொடங்கி ஏறக்குறைய மூன்று வருடங்களாகி விட்டன.  உடம்பில் பெரிய வலுவொன்றுமில்லை.   கையில் ஏதோ கொஞ்சம் காசு  புரள்கிறது.  மனசும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.

     அந்த வீடு  ஒற்றை வீடாக இருந்தது. அதுவும் ஒரு வித பழமைத் தன்மையுடன் இருந்தது.    முற்றத்தின் மையப் பகுதியில்  பெருத்த     ரப்பர் மரம்  ஒன்று   நின்றது.      கார் ஒரு ஷெட்டில்   பிளைன் மவுத் கார் நின்று கொண்டிருந்தது.  வீட்டின் வாசல் முன்பு  ஒரு சிறிய  மணி  தொங்கவிடப்பட்டிருந்தது,  அது அழைப்பு மணியாக இருக்கலாம். அந்த வீட்டில் சில சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்பு கூட நடந்துள்ளதாம். வீட்டுக்குச் சொந்தக்காரர்  ஒரு பெரிய ரப்பர் தோட்டத்தின் உரிமையாளராக இருப்பதாகவும் சொல்கிறார்கள். நரைந்த பிரெஞ்ச் தாடி வைத்துக் கொண்டு நெடுநெடுவென உயரமாய் இருக்கும் அவரை இப்போதெல்லாம் அதிகமாக வீட்டின் பக்கம் காண முடிகிறது.

     விசாலமான அறைகளைக் கொண்டிருந்தது அந்த வீடு.   பெயின்டிங்  வேலை   செய்யும்  ஆட்கள்  முந்தினநாளின் தொடர்ச்சியாக ஒவ்வொரு அறைகளிலும் இருக்கும் பொருள்களை எடுத்து வேறு அறைகளில் வைப்பதும், பின்னர் அந்த அறைகளை சுத்தம் செய்து பெயின்டிங் செய்வதுமாக இருந்தார்கள்.
ஒரு அறையில்   அழகும் கலையும் மிளிரும்  பொருள்கள் நிரம்பிக் கிடந்தன.  அவற்றில்,  பழமையும்.... புராதனமும் மிக்க  பொருள்கள் கூட இருந்தன.  இவையெல்லாம்   எங்கிருந்து கிடைத்திருக்கும்..  எப்படி சேகரித்திருப்பார்கள்..?  பெயின்டிங் ஆட்கள் வியப்போடு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     ராஜகோபாலின் கண்ணில்  'ராஜசெல்வி  சவுண்ட்ஸ்' என எழுதப்பட்டிருந்த அந்த ரெக்கார்டு பிளேயர்  பட்டது. இது என்னுடையதல்லவா..!  என் இசைத் தட்டுகள் இதில் அல்லவா ஓடியது...!' அவர் மனம் படபடத்தது. 
"ஓய்... இது எனக்கிட்ட இருந்ததாக்கும் ... தெரியுமா...." என்றார் அருகில் நின்ற சக பெயின்டரின் தோளைப் பிடித்தவாறு.
"அப்பிடியா...!" என்றான் அவன்
"ஆமா... நான் சவுண்ட்ஸ் சர்வீஸ் வச்சிருந்தப்ப  முதல்ல வாங்கின பிளேயர் இது தான்..."
"இது  எப்பிடி இங்க வந்தது...?" அவன் திருப்பிக்  கேட்டான். 
ராஜகோபால் சிறிது நேரம் மௌனமாக நின்றார்.  பின்னர் இடது கையால் முகத்தைத்  தடவிக் கொண்டே  "எல்லாம் எனக்க நேரம்...."  என்றார்.  குரல் தளர்ந்திருந்தது.
அந்த இடத்தில் ஒரு வித இறுக்கம் சூழ்ந்து கொண்டது.
சிறிது நேரத்திற்குப் பின்,
"இப்ப... இத நான்  கேட்டா  எனக்குத்  தருவினுமா...?"  அவனிடம் கேட்டார்.
"ஏன்.. அப்பிடி..?"
"இது எனக்க  வாழ்வோட கலந்தாக்கும்.. இதில தான் எனக்க மனசு சுற்றிக் கிடந்தது. இப்ப இது எனக்க கையில் இருக்காதாண்ணு தோணுது... அதனால தான்.... கேட்டா தருவினுமாண்ணு...."
"இது  வலிய  எடமில்லியா.. ?  இருந்தாலும் கேட்டுப்பாரும்..." என்றான் அவன்.  
ராஜகோபால் அந்த ரெக்கார்ட்  பிளேயரை கையில்  எடுத்து வைத்துப்  பார்த்துக் கொண்டே நின்றார்.
அவரது மன ரெக்கார்டு பிளேயரில்  நினைவுகள் என்னும் இசைத்தட்டு   பின் நோக்கிச் சுழலத் தொடங்கியது.

    கல்லியாண வீடுகளில்  ரெக்கார்டு பிளேயர்களில் இசைத்தட்டு சுழல்வதை வேடிக்கைப்  பார்த்துக் கொண்டே  நிற்பான்   ராஜகோபால்.  அவனுக்கு  பரவசம் தாங்காது.  தானும்  இது போல ரெக்கார்டு பிளேயர் வாங்கி வைத்து தொழில் செய்ய வேண்டுமென்று நினைப்பான்.  பவுலோஸ் சார்   தான் அப்போது  குலசேகரத்தில்  சவுண்ட் சர்வீஸ்  தொழில் செய்து வந்தார். அவர் சில காலம் மலேசியாவில்   இருந்தவர்.  ராஜகோபால்,  பவுலோஸ் சார்  பின்னாலேயே போவான்.  அவனுக்கு அப்போது பதினெட்டோ பத்தொன்பதோ வயது இருக்கும். கொஞ்சம் நாளில் பவுலோஸ் சார்  இவனை உதவிக்கு    வைத்துக் கொண்டார்.  குறுகிய காலத்தில் இவன்   தொழில் கற்று விட்டான்.  ஒருநாள்,
"இந்தத் தொழிலை விட்டிடுலாமிண்ணு நெனக்கியேன்...
நீ இதை எடுத்து நடத்தியாடே...?" என  பவுலோஸ் சாரே   இவனிடம் கேட்டார். இவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.  "உவா.. எடுக்கிலாம்..." என்று உடனே பதில் சொன்னான். தனது தகப்பனிடம் தகராறு  செய்து  ஆரணிவிளையில்   குடும்பச் சொத்தில் நல்ல காவலம்  உள்ள இரண்டு  மூடு புளியமரங்கள் உள்பட ஐந்து சென்று நிலத்தை விற்று  சவுண்ட் செட்டை  வாங்கினான்.  அந்த  ரெக்கார்டு பிளேயர் விஷேசமானது.  சிறிய  சூட்கேஸ் வடிவில் இருந்த அந்த ரெக்கார்டு பிளேயர் சுவிட்சர்லாந்தின் 'லென்கோ' கம்பெனியின் தயாரிப்பு. அதில்  'மேட் இன் சுவிட்சர்லாந்து'  என்று எழுதப்பட்டிருந்தது. அதனை வாங்கிக் கொண்டதில் ராஜகோபால் அதிகமாகப் பெருமைப் பட்டுக்  கொண்டான்.  கொஞ்சம்  நாள்களிலேயே  சவுண்ட் சர்வீஸ் தொழிலில் பிரபலமாகிவிட்டான்.    கல்லியாண வீடா..... பூப்புனித நீராட்டு  வீடா...   கூப்புடு ராஜகோபாலை  என்பார்கள்  ஊரில்.  இவனும் விறுவிறுப்பாக ரேடியோ செட் கட்டுவான்.

      கல்லியாணம்,  பூப்புனித நீராட்டு விழா வீடுகள்... அது தான்,  அவசர  வீடுகள், உறவுகள் சங்கமித்துக்  கிடக்கும் இடங்கள்.    வீட்டை வெள்ளை அடித்தல்,  முற்றத்தில்  பந்தல் போடுதல், அலங்காரத்திற்காக  குலை வாழை, சளை ஓலை, உலத்திப்  பூக்கள் கட்டுதல்... ரேடியோ செட் கட்டுதல்..  என  உறவுகளும், சுற்றமும்  ஓடியாடி உழைக்கும்.  சவுண்ட் சர்வீஸ்காரன் பிளஷர் காரில்  சாதனங்களைக் கொண்டு வந்தவுடனேயே   பரபரப்பு தொற்றிக் கொள்ளும். வீடுகள் தடத்திலயோ, பொற்றைக் கட்டுகளிலயோ... எங்கே இருந்தாலும் காரில் இருந்து சாதனங்களை இறக்கி சுமந்து செல்வதற்கு ஆட்கள் நான் மு்ந்தி... நீ முந்தி... என்று வருவார்கள். ஓலைக் கூரைகளோ.. ஓட்டுக் கூரைகளோ.. எந்த கூரை வீடுகளாக இருந்தாலும்  வீடுகளின்  முன் பக்கம் திறந்த நிலையிலிருக்கும் வராந்தாக்களில்   சவுண்ட்ஸ் சர்வீஸ்  காரருக்கு இடம் கிடைத்து விடும்.  வராந்தா இல்லாத வீடுகளில் தனியாக 'பெரை' கட்டிக்  கொடுக்கப்படும்.  பல வீடுகள்  அவசர நிகழ்ச்சிகளின் போது தான் மின் விளக்கு வெளிச்சத்தைக்  காணும். தூரத்தில் எங்காவது மின் இணைப்பு இருக்கும் வீட்டிலிருந்து ஒயர் இழுத்து வரப்படும். ரேடியோ செட்டின் பெயரில் வீடும் வெளிச்சம் பெறும். அதற்கும்  வாய்ப்பு இல்லாத வீடுகள் ஆயில் மிஷின் உபயத்தில் பாட்டும், வெளிச்சமும் பெறும். ராஜகோபால் தக்கலையிலோ.... தொடுவெட்டியிலயோ இருந்து  வாடகைக்கு ஆயில் மிஷின் எடுத்து வருவான். கூம்பு ஒலி பெருக்கிகளை புளியமரத்திலயோ,  தென்னை மரத்திலயோ கட்ட வேண்டும். அப்போது தான் பல மைல் தூரத்திற்கு பாட்டுச் சத்தம்  கேட்கும்.  அவசர வீடுகளை அக்கம்பக்கத்தவர்களுக்கு அடையாளம் காட்டுவேதே பாட்டுச் சத்தமாகத் தான் இருக்கும்.  தூரத்துச் சொந்தங்களும் பாட்டுச் சத்தம் கேட்கும்  இடத்தை வைத்துக் கொண்டு வந்து சேர்ந்து விடுவர். மரங்களில் ஏறி கூம்பு ஒலி பெருக்கிளைக் கட்டித் தருவதற்கும் ஆட்களுக்கு பஞ்சம் இருக்காது.

    'அன்னக்கிளி' படம் வந்திருந்த காலகட்டம் அது.  'மச்சானப் பாத்தீங்களா....'  பாட்டு ஒலிக்காத கல்லியாண வீடுகளே இல்லை. ராஜகோபாலிடம் மூன்றோ.. நான்கோ..  அன்னக்கிளி இசைத்தட்டுகள்  இருந்தன. 'அன்னக்கிளியே உன்னைத் தேடுதே... மச்சானப் பாத்தீங்களா... ' என பாடல்களைப்  போட்டுத் தாக்குவான் இவன்.   இளம் தலைமுறை  அப்படியே மெய் மறந்து நிற்கும்.  ராத்திரியானா  கதைவசனம்  போட்டாக  வேண்டும். பராசக்தி, மனோகரா, வீரப்பாண்டிய கட்டப் பொம்மன்.. இப்படி ஏதாவது ஒரு கதை வசனத்தை  ஓட விடுவான். கதை வசனத்தின் லயிப்பில் கறிக்காய் வெட்டுதல், தேங்காய் துருவுதல் நடக்கும். கூடவே  ஊரும் மயங்கிக் கிடக்கும்.  ரேடியோ செட் காரனுக்கு கல்லியாண  வீடுகளில்  ஆர்டர் உள்ள ஒவ்வொரு ராத்திரியும்  சிவராத்திரி தான்.

     கல்லியாண வீடுகளில் மாப்பிள்ளையை விட பல நேரங்களில் ரேடியோ செட் காரனுக்குத் தான் மவுசு.  எப்போதும் ரேடியோ செட் காரனை சுற்றி  பொடிகள், இளவட்டங்கள் என ஒரு கூட்டம்  அலையும். தாவணிக் குமரிகள் கூட அப்படித்தான்.  அதிலும்  இளமையா... இன்னும் கல்லியாணம் ஆகாம  இருக்கும் ராஜகோபாலைச்  சுற்றி தாவணிக் குமரிகள்...   வளைய...வளைய. வந்தவாறே ... 'அந்தப் பாட்டப்  போடுமா.. இந்தப் பாட்டப் போடுமா..' என்பார்கள். நக்கலுக்கும், கேலிக்கும் பஞ்சமிருக்காது.  மணப்பெண்கள்  கூட தங்களுக்குப் பிடித்தப் பாடலை  துண்டுத் தாளில்   எழுதி சிறிசுகளிடம்  கொடுத்து விடுவார்கள்.  அதுகளும் 'அக்கா இந்தப் பாட்டைப் போடச் செல்லிச்சி...' என்று வந்து நிற்பார்கள். ராஜகோபாலுக்கு பெருமையாக இருக்கும். அந்த நேரங்களில்  சட்டைக் காலரை  தூக்கி வைத்துக் கொள்வான். ஆனால் அவனது ரெக்கார்டு பிளேயரில் அல்லது இசைத்தட்டுகளில் யாராவது கைவைத்து விட்டால்  பாம்பு போல் சீறிவிடுவான்.   எதுவாக இருந்தாலும்  அவனிடம்  கேட்டுவிட்டு தான் செய்ய வேண்டும்.

      அன்றும் அப்படித்தான்... தும்பகோடு கொச்சுமணி வீட்டில் அவரசம். அவரது மகளுக்கு கல்லியாணம்.  ராஜகோபால் பாட்டைப் போட்டு விட்டு  வெளியே எங்கோ போயிருந்தான்.  'கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ...' பாடல்  ஒலித்து முடிந்து இசைத்தட்டு காலியாக ஓடிக் கொண்டிருந்தது.  அப்போது அங்கு வந்த மணப்பெண்ணின் தோழி  செல்வி ரெக்கார்ட்டு பிளேயரின் ஊசியை தூக்கி விட்டு இசைத்தட்டைத் திருப்பிப் போட்டு விட்டாள், 'அது மாஞ்சோலை கிளி தானோ.. மான் தானோ...' எனப்  பாடத் தொடங்கியது. இதனை எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்த ராஜகோபால் விறைப்பாக வந்துவிட்டான். "யாரு... ரெக்கார்டை மறிச்சிப்  போட்டது... ஒங்களுக்க இஷ்டம்  போல போடியதுக்கா வைச்சிருக்கு..."  என்றான் குரலை உயர்த்தியவாறு.
செல்விக்கு அழுகை வந்து விட்டது.
அவள் திருமணப் பந்தலின்,  ஒரு ஒரம் சென்று தூணைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.. அவளது தோழிகள் அவளை சமாதானப்படுத்த முயன்றனர்.
செல்வியின் அழுகை நிற்கவில்லை.
"லே...தம்பி... அது கரஞ்சிக்கிட்டே இருக்கு...பெய் வல்லதும்  செல்லி சமாதானப்படுத்து..." என்றார்,  அவன் அருகில் வந்த பெண் ஒருத்தி.
ராஜகோபாலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கு  ஒருமாதிரி ஆகிவிட்டது.
நேராக அவள் அருகில் சென்று "போட்டு" என்றான். 
அவள் அழுகையை நிறுத்தினாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்புறம்  முகத்தைத் உயர்த்தி  இவனை ஒரு பார்வை.  இவனும் அப்போது தான் அவளது முகத்தைப் பார்த்தான். இவனுக்குள் ஏதோ நிகழ்ந்து போலிருந்தது.  அவள் அங்கிருந்து ஓடி  மறைந்தாள்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு அவன் மனதில் மாஞ்சோலைக் கிளிதானோ... மான் தானோ... வேப்பங்காட்டுக் கிளியும் நீ தானோ என்ற பாடல் தான் ஓடிக் கொண்டேயிருந்தது.   'இசைத் தட்டை அல்ல...  எனக்க  மனசையில்லியா மறிச்சிப் போட்டுட்டா'   என்ற எண்ணம் அவனுக்குள் வந்தது.  தொடர்ந்து வந்த கல்லியாண  வீடுகளில் மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ... பாடல் இடம்  பெற்ற  கிழக்கே போகும் ரயில் படத்தின்  இசைத்தட்டையே அதிகம் போட்டான்.  அவனது  மன ரெக்கார்டு பிளேயரில் அவள் ஒரு இசைத் தட்டாகவே சுழன்றாள்.   

    அவனிடம் ஒரு 'எஸ்டீ' பைக் இருந்தது. அதனை எடுத்துக் கொண்டு செல்வியின் வீடு இருக்கும் சூரியகோடு  பக்கமாக அடிக்கடி போய் வரத் தொடங்கினான். ஒரு முறை வீட்டு வாசலில் வைத்து  இவனைப் பார்த்த செல்வி, ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு நின்றாள்.  இவனுக்குள் ஆயிரம்  பல்புகள் ஒரே நேரத்தில் எரிந்தது போன்ற வெளிச்சம். அதற்குப் பிறகு இவனது  எஸ்டீ பைக் அடிக்கடி அந்த வழியாகச் செல்லத் தொடங்கியது.  இவனது  பைக்கின்  குடு...குடு... சப்தம் கேட்ட போதெல்லாம் அவள் வீட்டிலிருந்து ஓடி வெளியே வந்து இவனுக்கு தரிசனம் தர தவறவில்லை.
ஒரு முறை இவன்  பைக்கில் சென்ற  போது அவள் ஊற்றுக்குழியில் இருந்து குடத்தில்  தண்ணீர் எடுத்துக் கொண்டு  எதிரில் வந்தாள்.
இவன் அவளது அருகில் பைக்கை  நிறுத்தி காலை தரையில் ஊன்றினான். இவனைப் பார்த்தபோது  அவளுக்கு  பதட்டமாக இருந்தது.  கண்கள் படபடத்தன.  இடையில் இருந்த குடத்தின் எடை அதிகரித்தது போலிருந்தது.  நின்று விட்டாள். 
"பிடிச்சிருக்கா என்ன..." இவன் கேட்டான்.
"ம்..."
"வீட்டுல சம்மந்தம் கேக்கட்டா..."  இவனது நேரடியான கேள்வியில் ஒரு கணம் பதறி விட்டாள்... பின்னர்
"ம்..." என மெதுவாக தலையசைத்து நடக்கத் தொடங்கினாள்
இவன் மீண்டும் ஏதே பேச நினைத்து அவளை மறித்தான்,
அவள் தண்ணீர்  நிறைந்திருந்த குடத்தில் விரல்களை விட்டு இவன் முகத்தில் தண்ணீரைச் சிதறடித்து நடந்து போனாள்.   அவளது கண்களில் நிறைய காதல் இருந்தது.  

     செல்வி அவனது வாழ்விற்குள் வந்து விட்டாள்.  அதன்பின் தான் அவன் தனது சவுண்ட் சர்வீசுக்கு 'ராஜ செல்வி  சவுண்ட்ஸ்' என்று பெயரிட்டான். அதில் தன் பெயரும், தனது மனைவியின் பெயரும் இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்வான்.  அவன் தொழில் தொடங்கும் போது பவுலோஸ் சாரிடமிருந்து    வாங்கிய  அந்த ரெக்கார்ட் பிளேயரின் மேல் மூடியி்ல்  ராஜ செல்வி  சவுண்ட்ஸ் என எழுதினான்.  அந்த ரெக்கார்டு பிளேயரை பின்னர் அவன் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். செல்வி அதனை அடிக்கடி எடுத்து துடைத்து சுத்தப்படுத்தி வைத்துக் கொள்வாள். அதில் அவளுக்கான ரகசிய  இசைத்தட்டுகள் சுழல்வதாகவும், அவளது உயிரின் ராகங்கள் ஒலிப்பதாகவும் நினைத்துக் கொள்வாள். 

     தொழில் விரிவடைந்தது. கூடுதல் ரெக்கார்ட் பிளேயர்கள், ஆம்பிளிபயர்கள், கூம்பு ஒலி பெருக்கிகள், மைக் செட்டுகள் அவன் தொழிலுக்குள் வந்தன.   ஒரு நல்ல இசைப்  பாடல் போலவே தொழில் பிரபலமானது.  இசைத் தட்டுகள் நிற்காமல் சுழன்றன.

    குலசேகரத்திற்கு  மட்டுமல்ல அருகிலுள்ள  திருவரம்பு, மங்கலம், பொன்மனை, சூரிய கோடு, திருநந்திக்கரை, திற்பரப்பு, பேச்சிப்பாறை,  என எங்கும் ரேடியோ செட் கட்டினான். தேர்தல் பிரச்சார காலங்கள் என்றால் அவனுக்கு உற்சாகம் தான்.   பிளஷர் காரின் மேல்பகுதி  இரும்புக்  கேரியரில் முன்னும் பின்னுமாக இரண்டு கூம்பு ஒலிப் பெருக்கிகளை கட்டி வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம்  போவான். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரத்திற்கு அழைத்தால் மறுக்கமாட்டான். அந்தக்கட்சிக் காரர்கள்  பணம் பாக்கி வைத்திருந்தாலும் பரவாயில்லை அவனுக்கு.  மீண்டும் அழைத்தாலும் போவான்.  காடு, மேடு, மூலை, முடுக்கு, தோட்டம்  என பிரச்சார பிளஷர் கார்  போகும்.  காரிலிருந்து வீசி ஏறியப்படும் நோட்டீசுகளை பொறுக்கி எடுக்க சிறுசுகள் பின்னால் ஓடிவருவார்கள்.  பிரச்சார இடைவேளைகளில்  "சகாக்களே மும்போட்டு...., விப்ளவம் ஜெயிக்கட்டே.., மரிக்கான் ஞங்கக்கு மனசில்லா..., செங்கொடி ஜெயிக்கட்டே..."  என   பாடல்களைப் போடுவான். அந்தப் பாடல்களைக்  திரும்பத் திரும்ப கேட்டுக் கேட்டே  அவனுக்கு அவை மனப்பாடம் ஆகிப்போயின.  அவனுக்கு அது பெருமையாக இருந்தது.

    ஊர்களில் நடக்கும்    'சைக்கிள் சவுட்டு' நிகழ்ச்சிக்கு  ரேடியோ செட் கட்டுவதென்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். ஒரு வார காலம் நடக்கும் சைக்கிள் சவுட்டு  நிகழ்ச்சிகளில்,  ரெக்கார்டு டான்ஸூம், காமெடி நாடகங்களும்,  மேஜிக்குகளும், மயி்ர் கூசும் சாகசங்களும்,  சைக்கிளில் களத்தை சுற்றி வரும் சைக்கிள் சவுட்டு கலைஞனின் வித்தைகளும் மக்களின்  மாலைப் பொழுதுகளை  இனிப்பாக்கும்.. களத்தின் நடுவில்  மூங்கில் கம்பு நடப்பட்டு அதில் இரு ஒலி பெருக்கிகள் கட்டப்பட்டிருக்கும்.   நாங்க... புதுசா...கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க....போன்ற அதிரடியான பாடல்களைப் இவன் போட்டுக் கொடுப்பான். ஆட்டம் தூள் பறத்தும். கேரள  திருநங்கைகள்  வேஷம் கட்டி ஆடும் போது விசில் சத்தம் பலமாய் எழும்.  உடைந்த குப்பித் துண்டுகளின் மீது புரண்ட படி டியூப் லைட்டுகளை சாகசக் கலைஞன் நொறுக்கும் காட்சிகளில் பார்வையாளர்களின் மனங்கள்  வலிக்கும்....கண்கள் கசியும். ராஜகோபால்  ஒரு குணச்சித்திர  நடிகனைப்  போல  அங்கே  சுற்றித் திரிவான். சில நேரங்களில்  மைக்கை கையில் எடுத்துக் கொண்டு அலோ... ஒண்ணரை கிலோ... என்பது போன்ற அறுவைகளையும்  அவிழ்த்து விடுவான்.

 அந்த சமயத்தில் தான் ரப்பர் மரம் மலைகளிலிருந்து வேகமாக ஊர்ப்பகுதிகள் நோக்கி  இறங்கி வந்தது. அது பெருவெள்ளத்தைப் போல தென்னையையும், புளியையும், மாவையும், கொல்லாவையும், பலாவையும், மர வள்ளியையும்,  வாழையையும், நெல்லையும்  வாரிச் சுருட்டி அழித்தது. பின்னர் அந்த  இடங்களில் தன்னை நிறுத்திக் கொண்டது.  மக்களும் அதனை  கட்டித் தழுவி வரவேற்றனர்.  அது  அதிகமாய்.... அதிகமாய்.... ரப்பர் பால் கொடுத்தது. ஊர்களில்  ஓலைக் கூரைகள், ஓட்டுக் கூரை வீடுகள் சரிந்து விழுந்து, மட்டுப்பாவு வீடுகளாய் எழத்தொடங்கின.  கூடவே மூலைக்கு மூலை திருமண மண்டபங்களும்  முளைத்தன. திருமணங்கள் வீடுகளிலிருந்து  திருமண மண்டபங்கள் நோக்கி நகர்ந்தன.  இந்த ரப்பரு  உள்ளவனுவ பவுறு கொண்டில்லியா அலையானுவ.'  அவன் நினைத்துக் கொள்வான்.  பொங்கிப் பெருகும் ரப்பர் பாலில் தனது தொழில் மூழ்கிவிடுமோ என்று கூட அஞ்சினான். ஆனால் உடனடியாக அப்படி  எதுவும் பெரிதாய் நடந்துவிடவில்லை. கோயில் விழாக்களும், பெந்தேகொஸ்தே கன்வென்ஷன்களும் கை கொடுத்தன.

     ஒருநாள் காலையில் 'தினமலரை' பார்த்துக் கொண்டிருந்த அவன் அதிர்ந்து விட்டான். 'குமரி மாவட்டத்தில் கூம்பு ஒலி பெருக்கிகளுக்குத் தடை. மண்டைக்காட்டு கலவரத்திற்குப் பின் அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் பரிந்துரை...' என்றெல்லாம் அதில் எழுதப்பட்டிருந்தது. 
 "மதம் பிடிச்ச பயலுவளால ஆருக்கெல்லாம் கஷ்டம்... நமக்க தொழில்ல இல்லியா மண்ணு வந்து விழுது...." என புலம்பினான். அப்போது இவனிடம் இருபதுக்கும் அதிகமான கூம்பு ஒலி பெருக்கிகள் இருந்தன.  கேரளத்தில் இருந்தும் வேற எங்கேயோ இருந்தும் வந்தவர்களுக்கு  அவற்றை சும்மா   கொடுத்தது போல் வாரிக்கொடுத்தான்.  அப்புறம் தான் பெட்டி ஒலி பெருக்கி வாங்கத் தொடங்கினான். "இந்த பெட்டி ஸ்பீக்கர்களின்  சத்தம்  செவியில இல்லியா வந்து அடிச்சுது.."  என ரொம்ப நாட்கள் புலம்பித்  திரிந்தான்.
  
   'லே.. ராஜகோபாலு.. வித்தியாசமா யோசிக்கணும்பிலே.... புதுசு...புதுசா  கண்டுபிடிக்கணும்பில...' என்று அவன் உள் மனம் அடிக்கடி சொல்லும்... அப்படித்தான் அவன் சீரியல் பல்புகளில் வித்தைகள் காட்டத் தொடங்கினான்.   விழாக்களில் அவன் சீரியல் பல்புகள் கட்டினானென்றால்  மொத்த ஊர் ஜனமும் திரண்டு நின்று வேடிக்கைப் பார்க்கும். முட்டையிடும் கோழி, பந்தடிக்கும் யானை, தண்ணீர் குடிக்கும் காகம், சிறுநீர் கழிக்கும்   நாய்... என சீரியல் பல்புகளில் வித்தைக்  காட்டுவான். அதற்காக  அவன் மர உருளையில் செய்த ஒரு கருவி வைத்திருந்தான்.   ஒரு மரப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த அது  சுழலும் போது  சீரியல் பல்புகள் வித்தைக் காட்டும்.  அந்தக் கருவிக்கு   'கட்டவுட்டர்' என்று ஏதோ ஒரு  பெயர் சொல்லுவான். அது  சுழலும் போது  தீப்பொறிகள் வந்த வண்ணம் இருக்கும்  அதனைப் பார்க்க சின்னப்பையன்களின்  கூட்டம்  முண்டியடித்து நிற்கும்.

    ஒரு முறை ஆரணி திடலில்  மே தின பொதுக் கூட்டத்தில் அவன் குரங்கிலிருந்து மனிதன் வந்த பரிணாமக் கோட்பாட்டை சீரியல் பல்பில் காட்டினான்.  அந்த விழாவிற்கு  வந்திருந்த  கேரள மாநில கம்யூனிஸ்ட் தலைவருக்கு அதனைப் பார்த்தபோது  ஆச்சரியம் தாங்கவில்லை. விழா மேடையில் இவனை வரவழைத்து  கட்டிப்பிடித்து  துண்டு அணிவித்துப் பாராட்டினார். இவன் அதை வாழ்நாள் பாக்கியமாகக் கருதிக் கொண்டான். அப்போது எடுத்துக் கொண்ட போட்டோவைக் கூட ரொம்ம நாள் வீட்டின் முன்னறையில்  மாட்டி வைத்திருந்தான்.

    இன்னொருமுறை  கடையாலுமூடு ஆலயத்தில்  கிறிஸ்துமஸ் விழாவில்,   மூன்று ஞானிகளுக்கு   வால்  நட்சத்திரம்  வழி சொல்லி இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தைக் காட்டிக் கொடுப்பதை சீரியல் பல்பில் அமர்க்களப்படுத்தியிருந்தான். ஆலய பாதிரியார் இவனை கட்டி அணைத்து  அரைப் பவுன் தங்கமோதிரம் அணிவித்து  பாராட்டியபோது இவனுக்கு அழுகையே வந்து விட்டது.

      ஒருகட்டத்தில்  தொழிலில்  போட்டி வந்து விட்டது.  இவனது சிஷ்யர்கள் உள்பட பலர்    புதிய தொழில் நுட்பங்களுடன் தொழிலுக்குள் வந்து விட்டனர்.  அப்போது இவனும்  தொழில் நுட்பத்தைப் பிடித்துக் கொண்டான்.  ஹவா...ஹவா.. ஏ... ஹவா...,   ரஹ்மானின் முக்காலா... முக்காபுலா...  என எந்தப் பாடல்கள் வந்த போதும் அந்தப் பாடல்கள் உச்சக்குரலில் ஒலிக்கும் வகையிலான நவீன தொழில் நுட்ப  ஒலி பெருக்கிகள் வைத்தான். அரங்கங்களை  ஒளிவெள்ளத்தில் மிதக்க வைக்கும் வண்ண விளக்குகள் வைத்துக் கொண்டான்.  புதிய ஜெனரேட்டர்கள்,  சவுண்ட் மிக்சர்கள் வைத்துக் கொண்டான்.  அதேவேளையில் மறுபுறம்  வருமானத்தின் பெரும்பகுதியை முதலீடு தின்னத் தொடங்கியது. வருமானம் குறையத் தொடங்கியது.

     இந்தத் தொழில் நுட்பம் தான் எத்தனை எளிதானது...?  ஆனால் தொழில் நுட்பம் இன்று இருப்பதை நாளை குப்பையாக்கி  ஆக்கிவிடுகிறதே...? என் பாட்டன் பயன்படுத்தியது என்று இங்கே எதையும் வைத்துக் கொண்டு காலம் கடத்தி விட முடியுமா...?  தொழில் நுட்பம் தான் தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஆனால் தொழில் நுட்பம் எல்லாவற்றையும் மலிவாகவா  தருகிறது....? சவுண்ட் சர்வீஸ் தொழிலில் தான் எத்தனை புதுப்புது தொழில் நுட்பங்கள்...? நேற்று இருந்தது இன்று பயன்பாட்டில் இல்லையே..? அதற்கான கூடுதல் முதலீட்டிற்கு எங்கே போவது...? ராஜகோபால் பல நேரங்களில் இப்படி யோசித்துக் கொண்டான்.

    ஒன்று இரண்டு முறை அல்ல, பல முறை ஊரில் சக ரேடியோ செட் காரர்களை அழைத்துப் பேசினான்.  "லேய்....  இப்பிடி போட்டி போட்டு தொகையை கொறைச்சி ஆடர் எடுத்து செட் அடிச்சியதால யாருக்கு என்ன லாபம்... ?   வெறும் கையோட தானே வீட்டுக்குப் போகவேண்டியிருக்கு...  ஒரு ரேட்டை முடிவு செஞ்சி செட் அடிப்போம்ல எல்லாருக்கும் வருமானம் கிட்டும்.." என்று சொல்லுவான்..." ஆனால்,  அது அந்த நேரத்திற்கான பேச்சாகவே  காற்றில் கரைந்துப் போகும். நடைமுறைக்கு வருவதில்லை. 

    காலத்தின் ஓட்டம் வேகமாக இருந்தது.  போல் இருந்தது.   ராஜகோபாலுக்கு வயது ஏறிவிட்டது.  தொழில் நுட்பம் அதனோடு இணைந்து  பயணிக்க கட்டாயப்படுத்தியது.  இல்லையெனில் அது குப்புறத் தள்ளிவிடும்  போலிருந்தது. மறுபுறம்   தொழில் போட்டி பாடாய்ப் படுத்தியது. முன்பு போல் தொழிலில் போட்டி போட முடியவில்லை. ஆர்டர்கள் குறைந்து விட்டன. அதுவும் குறைந்த தொகையில் வரும் ஆர்டர்கள். வருவாயை சம்பளமும், பராமரிப்புச் செலவுகளும் தின்றன.  தடுமாறினான்... நன்றாகவே தடுமாறினான்.  'ஒரு இசைத் தட்டைப் போலவோ, ஒரு ஒலி நாடாவைப் போலவோ காலம் என்னையும் குப்பைக் கூடையில் வீசிவிடுமா..?'  கலங்கினான்.

   அன்று  ஊர்க்கோயிலில்   பத்து  நாள்  திருவிழாவிற்கு ரேடியோ செட் கட்ட கொட்டேஷன் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தான். அது அவன் வருடக்கணக்கில் ரேடியோ செட் கட்டும் கோயில்.  குறைந்த கொட்டேஷன் தொகைதான் எழுதியிருந்தான். கொட்டேஷன்கள் பிரிக்கப்பட்ட போது, கவிழ்ந்து விட்டான். ஆமாம்... அவனை விட குறைவான தொகைக்கு கொட்டேஷன் கேட்டவருக்கு ஆர்டர் போய்விட்டது. மின்சாரம் தாக்கி ஏறியப்பட்டவனைப்   போல் உணர்ந்தான். கோபமும்... ஆத்திரமும் வந்தது.  கோயில் நிர்வாகியிடம்  வாக்கு வாதம் செய்தபோது,  பிடித்து அப்புறப்படுத்தப்பட்டான்.

   ஒருநாள்  காலை.  சூரியன்  மிதமான வெக்கையை  இறைத்துக் கொண்டிருந்தது.    ராஜகோபால் வீட்டின் முன், வராந்தாவில் வெற்றுடம்பில் வேட்டியை  கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். கூடத்திலிருந்த  டிவியிலிருந்து   'இரும்பிலே ஒரு இருதயம்  முளைக்குதோ...' பாடல்  வெளியே வரை கேட்டுக் கொண்டிருந்தது.  'தொழில் நுட்பம்  மனுஷ இதயங்களைக் கூட இரும்பில செஞ்சி விடும் போலிருக்கு.'    பாடலைக்   கேட்டு சலித்துக் கொண்டான்.

"நமக்கு  கல்லியாண வயசில்  ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கு தெரியுமில்லியா.. தொழில்ல இப்படி நஷ்டமும், வேதனையும் அடஞ்சா  அதுகள எப்பிடி கரை சேக்கியது... "  அவன் அருகில் வந்து அமர்ந்த  செல்வி கேட்டாள்.
"அதுதான் நானும் யோசிக்கியேன்..."
"இருக்கிய சாதனங்கள விற்று கடனையும் அடச்சி... பிள்ளைகளுக்க கல்யாணத்துக்கான  வழியயும் பாக்கியது இல்லியா... நல்லது..."
"அப்படித்தான் இல்லியா... அவளது பேச்சை ஆமோதிப்பது போல் பதில் சொன்னான்.
"ஆமா..." அவள் முகத்தில் ஒரு வித நிறைவு தெரிந்தது.
"அதுக்கப்பெறவு என்ன தொழில் செய்யியது..." அவன், அவளிடம் கேட்டான்.
"வேற எதாவது புதிய தொழில்  செய்யமுடியாதா..."
" இனி இந்த வயசில புதுசா  என்ன தொழில் செய்யியது..."
"............."
அதற்குப் என்ன பதில் சொல்ல வேண்டுமென்று அவளுக்குத் தெரிந்திருக்க வில்லை.

    பின்னொரு நாள்,  ராஜகோபால் ராஜ செல்வி  சவுண்ட் சர்வீசை நிறுத்தினான்.  சாதனங்கள் அனைத்தையும் விற்றான். அவனிடம் தொழிலின் அடையாளமாய்  இருந்தது,  முதலில் வாங்கிய   அந்த ரெக்கார்டு பியேளர் மட்டும் தான்.
ஒரு நாள், தனது மூத்த மகள்  "அப்பா நான்  இந்த ரெக்கார்டு பிளேயரையும்  மாப்பிள  வீட்டுக்கு போகும் போது கொண்டுப் போகட்டா..." என்று கேட்டப் போது "இது எப்பளும் நம்ம வீட்டுல தான் இருக்கணும்.." என்று கூறி அவளது ஆசையைத் தடுத்து விட்டான்.
ஊருக்கெல்லாம்... பாட்டு கட்டிய  அவனுக்கு, அவனது மகள்களின் திருமணத்திற்கு கொண்டாட்டமாய் பாட்டுப் போட  முடியவில்லை.

     நாள்கள் வேகமாய் நகர்ந்தன. மகள்களைத் திருமணம் செய்து வைத்த திருப்தி அவனுக்குள் நிறைந்திருந்தது.  எனினும்  எளிதாய் வேறு தொழில் ஈடுபட மனக்கூச்சம் தடுத்தது.  இருந்தபோதிலும், கையில் மிச்சமிருந்த பணத்தில் ஏதேதோ தொழில் செய்து பார்த்தான். எதுவும் கை கொடுக்கவில்லை.   பணம் தான் கரைந்தது.
ஒரு நாள் கையில் காசு எதுவும் இல்லை. அப்போது  வந்த ஒரு ஆக்கர் கடைக்காரனிடம், செல்வி தடுத்த போதும்  அந்த ரெக்கார்டு பிளேயரைத் தூக்கிக்  கொடுத்து விட்டான்.
                                                 
      "ரெக்கார்டு பிளேயரை  கையில எடுத்து வைச்சிகிட்டு என்ன ஆராய்ச்சி...."
 குரல் வந்த பக்கம்   திரும்பிப் பார்த்தார் ராஜகோபால்.
வீட்டின் சொந்தக்காரர் அந்த பிரெஞ்ச் தாடிக்காரர் நின்றிருந்தார்.
"இது எப்பிடி உங்களுக்கு....?"
பவ்யமாகக் கேட்டார் ராஜகோபால்.
"எதுக்கு கேட்கிற...?"
"இது எனக்குள்ளதாக்கும்... நான் சவுண்ட் சர்வீஸ்... வைச்சிருந்தப்ப.....முதல் முதல்ல வாங்கினது...     ஒருகட்டத்துல கஷ்டம் வந்து கையில காசு இல்லாம இருந்தப்ப  இத ஒரு ஆக்கர் கடைக்காரனுக்கு எடுத்துக் கொடுத்தேன்..."
"அப்படியா... எனக்கும்  ஒரு ஆக்கர் கடைக்காரன்தான் கொண்டு வந்து கொடுத்தான்... எங்கிட்டயிருந்து  நல்ல விலையும் அவன் வாங்கினானே..." என்றார்.
"இப்ப இத எனக்குத் தருவியளா...?  நீங்க வாங்கின விலையத் தாரேன்.." ராஜகோபாலின் குரல்  உடைந்திருந்தது.
"ஹஹ்...ஹஹ்... ஹ..." என சிரித்தார் வீட்டுக்குச் சொந்தக்காரர்
அப்போது அங்கு வந்த பெயின்டிங் கான்டிராக்டர் "ஓய்... வீட்டுல பெயின்ட் அடிச்ச  வந்தியளா.. இல்ல.. வீட்ட வெல பேச வந்தியளா..." என்று  இடை மறித்து குரல் உயர்த்தினார்.  
இதற்கிடையே
"எங்கிட்ட....கொடுங்க.. கொடுங்க..." என்று சொல்லியவாறு வீட்டுக்குச் சொந்தக்காரர் ராஜகோபாலின் கையிலிருந்த அந்த ரெக்கார்டு பிளேயரை வாங்கிக் கொண்டு விறுவிறுப்பாக அடுத்த அறைக்கு நடந்தார்.
        அன்றைய தினம் சற்று நேரத்திலெல்லாம்  வேலை முடிவுக்கு வந்தது.

            மறுநாள் ராஜகோபால் அந்த வீட்டிற்கு  வேலைக்குச்  செல்லவில்லை.