சனி, 23 ஜனவரி, 2010

கவிதைகள்

கொஞ்சம் தண்ணீர்... நிறைய...


எப்போதாவது
வெடித்து வரும்
பால்ய கால எண்ணங்களில்
இதுவும் ஒன்றாகி விட்டது.

பள்ளிக்கூட விடுமுறையென்றால்
யுத்தம் கால்வாயோடு தான்-
கால்வாய் தீப்பிடித்துக் கொள்ளும்.

குண்டன் குமரேஷன்
குதிக்கும் போது
தெறி்க்கும் தண்ணீர்
வானம் தொடும்.

தவளை நீச்சலிடும்
பெற்றி்க் கோட் குமரிகளின்
முதுக்குப் புறங்களில்-
காற்றின் சில்மிஷத்தில்
பலூன்கள் பூக்கும்.

தொட்டு விளையாடுகையில்
துணி துவைக்கும்
மாமிகளின் இடையில் புகுந்து ஓடி
அறுப்புக் கேட்பது அலாதியானது.

டவுசருக்கு விடை கொடுத்து
ஆடும் 'அது'களோடு
வெட்டிப் போட்ட வாழை மரம்
சுமந்து வந்து
பயணம் போகும் பையன்களிடம்
மாலுமிக் கனவுகள்.

மான்களுக்கு
தூண்டில் போடும் வயதில்
மீன்களுக்கு
தூண்டில் போடும் வாலிபர்களின்
வால் பிடித்து நிற்கும்
சிறார் கூட்டம்.

இப்போதெல்லாம்
தொலைக்காட்சி்ப் பெட்டி வயர்களில்
சிக்கிக் கிடக்கிறார்கள்
சிறார்கள்.

கால்வாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
கொஞ்சம் தண்ணீரும்
நிறைய சாக்கடையுமாய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக