சனி, 16 ஜனவரி, 2010

குழந்தைகளை கிழிக்கும் புத்தகங்கள்

குழந்தைகளைக் கிழிக்கும் புத்தகங்கள்
  • ஓ...
    குழந்தைகளே..
    அறிவீர்களா
    எனது பள்ளி நாட்களை.. ?
  • இறுக்கிக் கட்டிய நிக்கரும்
    ஊக்குக் குத்திய சட்டையுமாய்
    அழகான நாட்கள் அவை.
  • மூலை உடைந்த சிலேட்டும்
    அட்டைக் கிழிந்த தமிழ்ப் புத்தகமும்
    அதிக பட்ச சுமைகள்.
  • அ.. ஆ...
    உயிர் எழுத்துக்கள் படித்து விட்டாலே
    உலகம் படித்த சந்தோஷம்.
  • நவரைப் பச்சிலைகள்
    அழிப்பான்களாகும்.
    மயில் பீலிகள்
    புத்தக இடுக்குகளில்
    குட்டி போடும்.
  • மழை நாட்களில்
    சிலேட்டு குடையாவதால்
    டீச்சர் போட்ட நட்சத்திரம்
    அம்மாவின் கண் படாமலேயே
    அழிந்து போகும்.
  • மாலைப் பொழுதுகள்
    டயர் வண்டியோ
    நொங்கு வண்டியோ
    உருட்டுவதில்
    ஓடிச் செல்லும்.
  • ஓ...
    குழந்தைகளே
    அறிந்தீர்களா ...
    எனது பள்ளி நாட்களை ..?
  • இப்போதெல்லாம்
    எனது ஐன்ஸ்டீன் கனவுகள்
    உங்கள் முதுகில் சுமத்தப்படுகிறது.
  • உங்களின் பொம்மைகளைப் பறித்து விட்டு
    புத்தக் கட்டுகள் தந்து விட்டேன்.
  • நீங்களும் தான்
    சுமை சுமந்து
    சோர்ந்து போயிருக்கிறீர்கள்.
    காலையில் மாலையில் இரவினில்
    ஓயாது உங்களை
    புத்தகங்கள்
    துரத்திக் கொண்டிரு்க்கின்றன.
  • புத்தகங்கள் கிழித்த
    காயங்களுடனேயே தூங்கி விடுகிறீர்கள்
    ஒவ்வொரு நாளும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக