செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சை க் கி ள்   பை ய ன்



 அதிகாலைப் பரபரப்பில் இருந்தது குலசேகரம் அரசுமூடு சந்திப்பு.  ரப்பர் மரம் ஏற்றும் பிளாட் லாரிகளில் வாள், கோடாரி, வெட்டுக்கத்தி, வடம், பானை, அரிசி, மரவள்ளிக் கிழங்கு, பான்பராக், பீடிக்கட்டு எடுத்துக் கொண்டு ஆண், பெண் தொழிலாளர்கள் ஏறிக் கொண்டிருந்தனர்.
      "அண்ணா கிழங்கு வாங்கலியா" என்று மரவள்ளிக்கிழங்கு விற்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணும் அவளுக்குப் போட்டியாக கிழங்கு விற்கும் அவளது அண்ணிக்காரியும் அப்பகுதியில் செல்வோரை அழைத்துக் கொண்டிருந்தனர். அடகுக் கடை செட்டியார் அரசுமூட்டுப் பிள்ளையார் கோயிலில் மணி அடித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்
     மரைக்கார் டீ கடையில் எப்போதும் போலவே டீ, சிகரெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது. ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், மண்வெட்டி வெட்டுத் தொழிலாளர்கள் என பலர் கடை முன்பு குவிந்திருந்தனர். பார்சல் டீ வாங்கிச் செல்வோர் குறைவாகத் தான் இருந்தனர்.
    செய்தித் தாள் பார்சல்கள் வந்திறங்கும் 'செல்லப்பா டெக்டைல்ஸ்' வராண்டா காலியாகவே இருந்தது. இன்னும் செய்தித் தாள் பார்சல்கள் வந்து சேரவில்லை. வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினான் கணேசன். சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு "பார்சல் இன்னும் வரலியா" என்று அங்கு அமர்ந்திருந்த சப் ஏஜண்டுகளிடம் கேட்டான். . "வந்திருந்தா இங்க இருக்காதா.. எங்க இறக்கிட்டு இருக்கானுவளோ.." அங்கு அமர்ந்திருந்த இருவரும் சலிப்பான குரலில் சொன்னதைக் கேட்ட கணேசன் பதட்டமானான். அவன் முகம் அந்த அதிகாலையிலும் வியர்த்தது.
கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு மாணவன். கல்லூரிக்குச் செல்லும் முன்பு செய்தித் தாள் விநியோகிக்கும் சைக்கிள் பையன்.. லைன் பாய்.
  பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்த கணேசன், ஏதோ எண்ணை தட்டி காதில் வைத்தான். "சரவணனா.. நான் கணேசன் பேசுறேன் டேய்... பேப்பர் பார்சல் இதுவரை வரல.. இண்ணக்கி செமஸ்டர் பரிட்சை தொடங்குது.. பார்சல் இனியும் பிந்திச்சுன்னா பரிச்சை எழுதப் போவ முடியாது. இண்ணக்கியுள்ள பேப்பரை நீ தான் கொடுக்கணும் வருவியா..?"
"இண்ணக்கி சைமன் அண்ணனுக்க வேனுல கிளியா ஆற்றுவா பள்ளிக்கு வருலாமிண்ணு சொல்லியிட்டேன். நாளைக்கு வேணுமின்னா வரலாம் டேய்." "இண்ணக்கி வேற யாரையாவது கூட்டிட்டு போகச் சொல்லுடே..."
 "சைமன் அண்ணன்கிட்ட பேசியிட்டு ஒன்ன விளிக்கிறேன்." போனை துண்டித்தான். கணேசனுக்கு வயிறு கலங்குவது போல் இருந்தது.
    இதற்குள் பேப்பர் ஏஜன்ட் மகாதேவன் பேப்பர் பார்சில் வந்திறங்கும் பாயின்டுக்கு வந்திருந்தார். மகாதேவன் ரொம்ப காலமாக பேப்பர் ஏஜன்டா இருக்கிறார். பழைய பியூசி காரர், கடும் உழைப்பாளி, வயசுக் காலத்திலயும் அதிகாலையில் வயலுக்குப் போய் 25 மூடு வாழைக்காவது தண்ணீர் இறைத்து விட்டுத் தான் பேப்பர் பாயின்டுக்கு வருவார். பத்துக்கு மேற்பட்டோர் அவரிடம் சப் ஏஜண்டுகளாகவும், சைக்கிள் பையன்களாகவும், 'சைக்கிள் முதியவர்களாகவும்' பணி செய்கின்றனர். அவருடன் யாராவது பேச்சுக் கொடுத்தா இனியெல்லாம் இந்தத் தொழிலை வச்சி நடத்த முடியாது. வேலைக்கு ஆள் கிடைக்கல.. வேலைக்கு வாறவங்களும் வசூல் பணத்தைத் தராம இழுத்தடிப்பு செய்யுறாங்க... என்பார். தினத்தந்தி, தினமணி, தினமலர், தினகரன், தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், மலையாள மனோரமா, மாத்ரூபூமி, கேரளா கௌமுதி என அவரிடம் இல்லாத நாளிதழ்களும், சஞ்சிகைகளும் கிடையாது.
  இருள் மெதுவாக வடிந்து கொண்டிருந்து. கணேசன் நிலை கொள்ளாமால் நின்றிருந்தான். போனை எடுத்து மறுபடியும் சரவணனுக்கு டயல் செய்தான். மறுமுனையில் "நீங்கள் அழைக்க நினைக்கும் வாடிக்கையாளர் எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது" என்று பதில் வந்தது.
   கணேசனுக்கு தேர்வு எழுதப் போகணும், என்ன செய்வதென்று தெரியவில்லை. சுவரோரமாக உட்கார்ந்தான். கணசேன் இரண்டு வருஷமா மகாதேவனிடம், "சைக்கிள் பையனாக" இருக்கிறான். அதிகாலை 4 மணிக்கு பேப்பர் பாயின்டிற்கு வந்து, அவனது லைனுக்கான பேப்பர்களை அடுக்கி எடுத்துக் கொண்டு சந்தாதாரர்களுக்கும் இதர வாசகர்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்பா ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி தினம் அறுநூறு ரூபாய் சம்பளம், நாநூறு ரூபாய்க்கு அதிகமாக டாஸ்மாக் போய்விடும். அம்மா வீட்டைக் கவனிக்கிறாள். தங்கை பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.
      திருவட்டாறிலுள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் அவனுக்கு செமஸ்டருக்கு பதினெட்டாயிரத்து ஐநூறு ரூபாய் பீஸ் கட்டணும். அவனுக்குள் ஒரு கனவு எப்படியாவது பாலிடெக்னிக்ல நல்ல மார்க் எடுத்து சென்னையில ஏதாவது ஒரு கம்பெனியில வேலைக்கு சேரணும். அம்மா தான் சொன்னாள் காலேஜ் பீஸ் கட்ட எங்கிட்ட பணம் இல்ல... காலையில் பால் பாக்கெட்டோ, பேப்பரோ போடப் போ என்று.. அது தான் இரண்டு வருஷமாக பேப்பர் போடுறான். ஏறக்குறைய தான் உழைக்கிற காசுல காலேஜில படிக்கிறேன் என்ற எண்ணம்.. பெருமிதம் அவனுக்குள் இல்லாமல்.. இல்லை. 
     சற்று நேரத்தில் செய்தித்தாள் பார்சல் வண்டிகள் வந்தன. 'மகாதேவன், குலசேகரம்' என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்த பார்சல்கள் இறக்கப்பட்டன. "என்ன... அடிக்கடி இப்படி பிந்தி வாறீங்களே... இதுக்கப் பிறகு நாங்க யாருக்கு பேப்பர் போடுறது ?. விக்காம இருக்கிற பேப்பர யாரு திருப்பி எடுக்கிறா ? இதில நம்மகிட்ட கேட்காம அப்பப்போ 50 பேப்பரு 100 பேப்பருன்னு கூடுதல் அனுப்புறாங்க, எங்க போட்டு விக்கிறது. எடை போட்டு தான் விக்கணும்.. ஆபிஸ் ரூமுல வந்துப் பாருங்க ஒரு லாறிக்கு இருக்கும் அன்சோல்டு."
 "இல்ல அண்ணாச்சி வழியில தக்கலைப் பக்கத்தில ஏதோ காரும், லாரியும் ஆக்சிடன்டாகி ஒரு மணி நேரத்திற்கு மேலா டிராபிக் ஜாம்." "எண்ணக்கும் இப்படித் தான் ஏதோ காரணம் சொல்றீங்க..." இதற்குள் பார்சல்கள் பிரிக்கப்பட்டு, சைக்கிள் பையன்களும், சப் ஏஜன்டுகளும் தங்களுக்கான செய்தித்தாள்களை அடுக்கக் தொடங்கினர். கணேசன் அவனுக்கான செய்தித்தாள்களை அடுக்கி எடுப்பதில் தீவிரம் காட்டினான். "இந்த சப்பிளிமென்டுகளை எதுக்குத் தான் வச்சிருக்காங்களோ... அதுவும் இந்த இங்கிலீஸ் பேப்ருல ஏழெட்டு சப்பிளிமென்டு... சப்பிளிமென்டை வச்சி அடுக்குறதுக்குள்ள அர நாள் போயிரும்." முணுமுணுத்தப்படி சப்பிளிமென்டுகளை அடிக்கிய கணசேனுக்கு கோபமாக வந்தது.
    "இந்த பேப்பர் போடுற தொழிலாளிக்குத் தான் உள்ளதிலேயே சம்பளம் ரொம்பக் கொறவு...கேரளத்திலே பேப்பர் போடுற தொழிலாளிக்கு சங்கம் இருக்கு.. தனி நல வாரியம் இருக்கு.. சட்டப்படியான பாதுகாப்பும் இருக்கு... நம்ம இடத்தில பேப்பர் போடப் போகும் போது ஏதாவது ஆகி... போயிட்டா.. அப்பிடியே போயிட வேண்டியது தான்.. அப்புறம் குடும்பம் தெருவில தான்.." மூத்த தொழிலாளி, தோழர் கந்தசாமி சம்பிளிமென்டுகளை அடிக்கி வைக்கும் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்.
       தோழரே.. நீரு.. சொல்லுதது சரிதான்... நாட்டில் செய்தித்தாளும்.. தீப்பெட்டியும் தானே இப்ப வெலக்கொறைவு..? இந்த தொழில்ல என்ன லாபம் கிடைக்குது..? வாற பேப்பருல விக்காம இருக்கிறது கொஞ்சமா..? ஏஜன்ட் மகாதேவன் தனது ஆதங்கத்தை கொட்டினார். கணேசன் இந்தப் பேச்சையெல்லாம் கவனிக்கிற நிலையில இல்லை. அவன், செய்தித்தாள்களை அடுக்கி எடுப்பதிலும், ஒரு தந்தி, ஒரு கரன் என்று கையை நீட்டுபவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு செய்தித்தாள்களை கொடுப்பதிலுமாக இருந்தான்.
    அதிகாலையில் தூங்கப் பிடிக்காமல் பேப்பர் பாயின்டுக்கு வரும் வயதானவரான தங்கமணி, சப்பிளிமென்டுகளை அடுக்கித் தருவதில் உதவி செய்வதால் கணேசனுக்கு சற்று ஆறுதல். ஆனா தங்கமணி சும்மா இருக்க மாட்டாரு.. வருகிற ஆட்களிடம் வணக்கம் சொல்லி ஏதாவது நாட்டு நடப்பு பேசாம விடமாட்டாரு. அப்பத்தான் அங்கு செய்தித்தாள் வாங்கச் சென்றிருந்த நிருபர் ஒருவரிடம் "நிருபர் தம்பி வணக்கம்" என்று பேசத் தொடங்கி விட்டார். "இந்தப் பையனப் பாத்தீங்களா.. நல்ல.. சொடி... காலையில வீடு தோறும் பேப்பர் போட்டுவிட்டு பாலிடெக்னிக் காலேஜுக்கு போறான். படிக்கிற காலத்தில நாலு காசு சம்பாதிக்கணுமிண்ணு எண்ணம் இருக்குது பாத்தீங்களா... இவனப்பத்தி பேப்பர்ல் போடப்பிடாதா.." அப்போது வராண்டாவில் அமர்ந்து கணக்கெழுதிக் கொண்டிருந்த ஏஜன்ட் மகாதேவன் குறுக்கிட்டார்...
   "பையனுக்கு காசு சம்பாதிக்கணுமிண்ணு எண்ணம் இருக்கு ஆனா நம்ம கணக்குல வரவேண்டிய பணத்தில துண்டு போட்டுக்கிட்டு இல்லியா இருக்கான்." என்றார் கணேசனுக்குப் தான் கொடுக்க வேண்டிய பணம் பத்தித் தான் ஏஜன்ட் பேசுகிறார் என்று புரிந்தது. "முதலாளி... கலெக்சன் பணத்துல கொஞ்சத்தை எடுத்து காலேஜூல பீஸ் கட்டிட்டேன். இந்த மாசக்கடைசியில எல்லாத்தையும் சேர்த்து தந்திருவேன்."
   "நீ சொல்லுதது கன்னித்தீவு கத போலயில்லியாடே இருக்குது?" "தம்பி அப்பா என்ன வேலை செய்யிறாரு". அங்கு நின்ற நிருபர் கணேசனைப் பார்த்துக் கேட்டார். "அப்பா ரப்பர் மரத்தடி லோடு வைக்கப் போகும். அறுநூறு ரூபா சம்பளத்தில நாநூறு ரூபாயாவது டாஸ்மாக் கடைக்குப் போகும்." கணேசனின் கண்கள் கலங்கியது போல் இருந்தது, பதற்றத்திற்குள்ளாகிக் கொண்டிருந்தான்.
   "என்னடே ஒரு மாதிரியாட்டு இருக்கிற?" ஏஜண்ட் கேட்டார் "இல்ல... மொதலாளி.. இண்ணக்கி காலேஜ் பரிட்சை தொடங்குது... நேரம் பிந்தியாச்சி இனி எப்ப பேப்பர் போட்டுக்கிட்டு பரிட்சை எழுதப் போறது?"
   "ஓ.. அப்படியா.. ஒனக்குப் பதிலா யாரையாவது கூட்டிகிட்டு வந்திருக்கலாம்மில்லியா...: "எனக்க லைன் தெரிஞ்ச ஒரு பயல கூப்பிட்டேன். வந்தாம்மில்ல.. இண்ணக்கு உள்ளப் பேப்பரை மட்டும் நாளைக்கு கொடுத்தாப் போதுமா. மொதலாளி ? "
    "பட பட எடுத்துப் போட்டுக்கிட்டு போயிருடே.... இப்போயெல்லாம் ஒரு நாள் பேப்பர் கிடைக்கலயிண்ணா கம்பெனி மொதலாளிக்கு கூட போன் கூப்பிட்டு பேசுறானுவ... நெறய பேரு வீ்ட்டுல காப்பியப் போட்டு வைச்சுக் கிட்டு பேப்பர் வந்தாத் தான் குடிப்பேன்ணு இருப்பாங்க தெரியுமா... ஓடிப்போயிரு... எனக்க கல்லியாண நாள்ள கூட நான் பேப்பர் போட்டுக்கிட்டுத் தான் பொண்ணு கெட்டப் போனேன். " என்றார்.
   அங்கிருந்த அவனை விட மூத்த சைக்கிள் பையன்களின் முகத்தைப் பார்த்தான் கணேசன். இவன் ஏதாவது கேட்டு விடுவான் என்ற எண்ணத்தில் அவர்கள் முகங்களை வேறு பக்கம் திருப்பி வைத்துக் கொண்டிருந்தனர். வேறு வழியில்லை. அடுக்கப்பட்ட செய்தித்தாள்களை சைக்கிள் கேரியரில் வைத்து ரப்பரால் கட்டினான் கணேசன் கேரியர் ஒரு மாதிரியா ஆடியது. 11 ம் வகுப்பில் அரசு கொடுத்த சைக்கிள் அது.
  கணசேன் செல்போனை எடுத்து மணி பார்த்தான் மணி 7 ஆகியிருந்தது.. பேப்பர் போட்டு முடிக்கணுமிண்ணா இன்னும் சரியா இரண்டு மணி நேரம் ஆகும். பதற்றம் மேலும் அதிகரித்தது. சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து இறக்கி ஏற முயற்சித்த போது செல் போன் ஒலித்தது.
   "அண்ணா நான் தங்கச்சி பேசறேன்... பேப்பர் குடுத்து முடிஞ்சா..? பரிச்சை எழுத போகண்டாமா..? பேப்பர் குடுத்தது போதும் வந்துரு.. அம்மா தேடிகிட்டே இருக்கு..." "சரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவேன்.." போனை துண்டித்த கணேசன், எப்படியாவது 9 மணிக்குள்ள எல்லாப் பேப்பரையும் கொடுத்து விட்டா பரிட்சை எழுதப் போய்விடலாம். சைக்கிளை வீறு கொண்டு மிதித்தான்.. வீடு.. கடை, பள்ளிக்கூடம் என செய்தித்தாள்கள் பறந்து சென்று விழுந்தன.
   "தம்பி ஒரு தினமணி கொடுங்க.." 50 ஐ கடந்த ஒருவர் கை நீட்டினார். "தினமணி எக்ஸ்ட்ரா இல்ல... தந்தியோ... கரனோ வேணுமா..?" "எல்லா பேப்பருலயும் ஒரே கொலையும், கொள்ளையும் செய்தியாயில்ல இருக்கு.." "நாட்டுல நடக்குறது தானே போடுவாங்க". 'இந்த பல்லாங்குழி ரோட்டை கிராஸ் பண்ணிப்.... பண்ணி பேப்பர் போடுறது பெரிய கொடுமை.. சைக்கிளை மிதிக்கவா முடிகிறது.... சரிந்து விழுந்து மண்டை அடிபட்டால் அவ்வளவு தான்... இந்த காம்பவுண்ட் கேட்டுகளைத் திறந்து பேப்பர் போடுறது அதவிடக் கொடுமை. இதுலவேற வழியில சைக்களை நிறுத்தி ஒரு தந்தி, ஒரு கரனுன்ணு கேட்பவர்களுக்கு பாக்கி சில்லறை கொடுப்பதற்குள் ஒரு வழியாகி விடுகிறது.' சலித்துக் கொண்டான். ஒரு டிப்பர் லாரி அவனை உரசுவது போல் மின்னல் வேகத்தில் சென்றது.
   'இந்த டிப்பர் லாரிகளுக்கயும், மினி பஸ்ஸூகளுக்கயும் காற்றப் பிடுங்க ஆள் இல்லையா..? கொல வெறியிலயில்லியா ஓட்டுறானுவ...?' வேகங்கொண்டு சைக்கிளை மிதித்தான்... காவல்ஸ்தலம், நாக்கோடு, படநிலம், செருப்பாலூர் என சைக்கிள் போய்க் கொண்டிருந்தது. செருப்பாலூரில் ஐயரின் டீ கடையில் பேப்பரை போட்ட வேகத்திலேயே சைக்கிளில் ஏறினான்.
   "என்ன தம்பி டீ வேண்டாமா...? "இல்ல.. டீ குடிச்சிட்டிருக்க நேரமில்ல.." வழக்கமான டீயையும் வேண்டாமென்று சொல்விவிட்டு சைக்கிளை மிதித்தான். மண்விளை, பாய்க்காடு, கொட்டூர், மலைவிளை என சைக்கிள் கடந்து கொண்டிருந்து. இன்னும் போக வேண்டும்.. அண்டூர்... வெண்டலிகோடு.. என.... அண்டூரில் ஏழெட்டு வீடுகளுக்கு நாளிதழ் போட்டுவிட்டு செல்போனை எடுத்து மணியைப் பார்த்தான், மணி 9 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுக்குள் பதற்றம் மேலும் அதிகரித்தது. வியர்வையால் சட்டை தொப்பென்றாகியது. நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்து விட்டு, மீண்டும் பிரதான சாலையில் சைக்கிளில் ஏறி முன்பை விட வேகமாக மிதித்தான்.

அப்போது தான் அது நிகழ்ந்தது-
      கண்கள் இருள்வது போல் இருந்தது அவனுக்கு, சாலை இரண்டு மூன்றாக விரிந்தது... சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்த முயன்றான். அதற்குள் சைக்கிள், நிலை குலைந்து நடுசாலையில் சரிந்தது. பின்னால் கருங்கல் பாரம் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டெம்போ 5 அடி இடைவெளியில் திடீர் பிரேக் போட்டு நின்றது. செய்தித்தாள் கட்டுடன் கவிழ்ந்து கிடந்த சைக்கிளின் அடியில் கணேசன் உணர்வற்றுக் கிடந்தான். அவன் பாக்கெட்டிலிருந்து சாலையில் விழுந்து கிடந்த செல்போன் ஒலித்துக் கொண்டிருந்து.
       அப்பகுதியில் ஓடி வந்த யாரோ ஒரு இளைஞன் செல் போனை எடுத்து தனது காதில் வைத்தான். "அண்ணா நான் தங்கச்சி பேசுறேன்... இண்ணிக்கி பாலிடெக்னிக் பரிட்சை இல்லியாம்... கொஸ்டின் பேப்பர் லீக்காச்சாம்.. டிவி யில போட்டிருக்கான்.." செல்போனை காதில் வைத்திருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
      கணேசனின் முகத்தில் தண்ணீர் தெளித்து யாரோ ஒருவர் எழுப்பிக் கொண்டிருந்தார்..

செவ்வாய், 6 டிசம்பர், 2011




மு. சுந்தரம் - ஆசிரியருக்கான இலக்கணம்


ஆசிரியர் மு. சுந்தரம் அவர்களைப் பார்த்து வியக்கின்றேன். பேச்சிப்பாறை அரசுப் பழங்குடியினர் உண்டுறைவிட மேல் நிலைப் பள்ளியில் வேதியல் ஆசிரியர் மு. சுந்தரம். திருநெல்வேலிக்காரர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சிப்பாறை பள்ளியில் ஆசிரியராக தொடர்கிறார்.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக அவரை நான் பார்க்கின்றேன். மாணவர் நலன், பள்ளிக்கூட நலன், பிறரோடு நல்லுறவு, ஆழ்ந்த படிப்பு, அறிவு நுட்பம், பேச்சாற்றல், தகவல் பரிமாற்றம், தியாகம், அர்ப்பணிப்பு என்பன போன்ற ஆளுமைகளின் மொத்த உருவம் தான் ஆசிரியர் சுந்தரம்.
பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளது அவரது சிறப்பு. ஆசிரியர் சுந்தரத்தின் பணியைப் பாராட்டி குமரி அறிவியல் பேரவை ஆசிரியர் திலகம் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
குமரி மாவட்டம் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து மாணவர்கள் நலனுக்காக, அவர்களின் உயர்கல்விக்காக அவர் ஆற்றும் பணிகள் அளப்பரியது. 2011 டிச. 6 ல் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை ஆசிரியர் மு. சுந்தரத்திற்கு அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆசிரியர் சுந்தரம் அவர்களை வணங்குகிறேன்.

வியாழன், 1 டிசம்பர், 2011

பேராசிரியர் தியாகசுவாமி


பேராசிரியர் தியாகசுவாமி ஒரு பல்கலைக் கழகம்


பேராசிரியர் தியாகசுவாமி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் 36 ஆண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிவர். தனது வாழ் நாளில் பெரும் பகுதியை கல்விப் பணிக்காகவும், இளைஞர் மேம்பாட்டு நலனுக்காவும் செலவிட்டவர். நடமாடும் பல்கலைக் கழகம் என்ற அறியப்பட்ட இவர், தனது வருவாயில் பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தினார். தனது வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை அமைத்ததுடன், பத்திரிகைகளில் வரும் செய்திகளை தனித்தனி தலைப்புகளாகப் பிரித்து அவற்றையும் தொகுத்து வைத்திருந்தார்.
மார்த்தாண்டம் இலக்கியப் பேரவை அமைப்பை நிறுவி, அதன் தலைவராக இருந்தார். குமரி அறிவியல் பேரவை, போதை தடுப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்பட்டதுடன் ஏராளமான இளையோர் மன்றங்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டுவந்தார். தனது கல்லூரி பேராசிரியர் பணி நாள்களில் விடுப்பு எடுக்காமல் மாணவர் படிப்பு நலனைக் காத்தவர்.
இவரது பணிகளைப் பாராட்டி குமரி தமிழ் எழுத்தாளர் இலக்கியப் பட்டறை தமிழ்ச் சுடர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் இதே அமைப்பு இவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு தமிழ் சிற்பியின் பயணம் என்ற நூல் மூலமாக பதிவு செய்துள்ளது. குமரி மாவட்ட போதை தடுப்பு இயக்க அமைப்பாளர் வேலையன், இவரது பேச்சுக்களையும், சிறுகதைகளையும் தொகுத்து சிந்தனை முழக்கம் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் பதிவுத் திருமணம் என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
ஒரு பேராசிரியருக்கு இலக்கணமாகத் திகழ்ந்துடன், சமூக அக்கறையுடன் எளிமையான வாழ்க்கை நடத்திய இவர், 27 நவம்பர் 2011 ல் இயற்கை எய்தினார். அவர் நம் மத்தியில் நடமாடிய பல்கலைக் கழகம். அவரது மறைவு குமரி மாவட்ட தமிழ் ஆர்வலர்களுக்கும், மனித நேயச் செயல்பாட்டாளர்களுக்கும் பெரும் இழப்பு.

சனி, 26 நவம்பர், 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம்





தம்பி வெட்டோத்தி சுந்தரம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு தொடர் சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். .
படம் தொடங்குவதற்கு முன், இயக்குனர் வி.சி. வடிவுடையான் திரையில் தோன்றி, குமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் ஆனால் இந்த மாவட்டம் தான் அக்யூட்ஸ்டுகளும் நிறைந்த மாவட்டம் என்ற குற்றப் பத்திரிகையை வாசிக்கிறார். அதற்கேற்றாற்போல் படத்தின் கதையும் அமைந்துள்ளது.

அரபிக் கடலின் காலடியில் கிடக்கும் கிராமம் பொழியூர். அங்கு
ஆசிரியர் வேலைக்கான படிப்பு படித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்யும் கதாநாயகன் கரண், அவனுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. அதற்கு அடுத்தப்படியாக போலீஸ் தேர்வுக்கு செல்கிறான். அதுவும் கிடைக்கவில்லை. உள்ளூர் அரிசி கடத்தும் கும்பலைச் சேர்ந்த சித்தப்பு சரவணனுடன் நட்பு ஏற்படுகிறது. அவன் கடத்தல் தொழிலுக்கு அழைக்கிறான். கதாநாயகன் மறுக்கிறான். இதற்கிடையில் உள்ளூர் பஸ்சில் பயணம் செய்யும் போது டிக்கெட் எடுப்பதற்காக எடுத்த ஒரு ரூபாய் நாயணம் நழுவி அதே பஸ்சில் அமர்ந்திருக்கும் கதாநாயகியான கல்லூரி மாணவி அஞ்சலியின் ஜாக்கெட்டுக்குள் புகுந்துவிட, இருவருக்குள்ளும் காதலும் புகுந்துவிடுகிறது.

வேலை கிடைக்காத விரக்தியில் கரணின் நண்பன் தூக்குப்போட்டு தற்கொ லை செய்கிறான். ஒரு கட்டத்தில் சொந்த வீடு ஜப்தி போகும் நிலையில் அதனை மீட்க கடத்தல் தொழிலுக்கு தாவுகிறான் கதாநாயகன். அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம் காதல், கடத்தல், மோதல், மரணம் என விறுவிறு திருப்பங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளின் பிற்பகுதி அல்லது தொண்ணுறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு தொடர் நிகழ்வை திரைப்பதிவாகக் கொண்டுவந்த இயக்குனர் வி.சி. வடிவுடையானுக்கு பாராட்டுக்கள். இந்தப் படம் தான் முழுக்க முழுக்க குமரி மாவட்டத்தைக் கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்ட முதல் படமாக கருதுகிறேன். அலையடிக்கும் பொழியூர் கிராமம் தொடங்கி குமரி மாவட்டத்தில் பல இடங்களில் குறிப்பாக குலசேகரம் அருகே மங்கலம், தோவாளை, மார்த்தாண்டம், களியக்காவிளை என பல இடங்களில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அறிமுக இயக்குனர் வி.சி. வடிவுடையான் தனது முதல் படத்திலேயே தொட்டிருக்கும் கதை மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை ஆகியவை மிகுந்த கவனம் பெறுகிறது. மட்டுமல்ல இது ஒரு ஒரு பட்ஜெட் படம் என்கின்றபோது தனக்குக் கிடைத்த வாய்ப்பை இயக்குனர் நிறைவாய் செய்திருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

எனினும் சில கருத்துகளை பதிவு செய்யாமல் இருக்கமுடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளில் இறுதிப் பகுதி முதல் தொண்ணுறுகளின் மையப்பகுதி வரை வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு மிகமுக்கியப் பிரச்னையாக இருந்தது. மட்டுமல்ல அகஸ்தீஸ்வரம் பகுதியில் வேர்விட்டு கிளைபரப்பிய கொலை வெறி ரவுடிகள், விளவங்கோடு பகுதியில் பன்றிமலை, செண்பகத்தரிசு, பொழியூர் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் வடிப்பு என பல பிரச்சனைகளை, சவால்களை இந்த மாவட்டம் சந்தித்தது.

இதில் அலையடித்துக் கொண்டிருக்கும் பொழியூர் கிராமத்தில் சாராயம் வடிப்பது குடிசைத் தொழில். இதே காலகட்டத்தினை மையமாகக் கொண்டு தான் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகியோரின் காதல் காட்சிகளில் நேசமணி போக்குவரத்துக் கழக பஸ்சில் தொடங்குகிறது. ஆனால் அதே காலகட்டத்தை மையமாகக் கொள்ளமால் படம் தடுமாறுகிறது.

கதாநாயகன் தனது நண்பர்களுடன் அமர்ந்திருக்கும் மங்கலம் பாலத்தின் அருகில் கட்டப்பட்டிருக்கும் பிளக்ஸ் போர்டு, தற்கொலை செய்யும் கரனின் நண்பர் அழுது புலம்பும் பஸ் ஸ்டாண்டில் வந்து செல்லும் தற்காலத்திய பஸ்கள், வில்லன் கோஸ்டியினர் சுமோ காரை வெடி குண்டால் தகர்த்து விட்டு மண் அள்ளிப்போட பயன்படுத்தும் பொக்ளின் இயந்திரம். இதற்கு மேலாக செல்போன்கள். என ஏராளம் காலத்தை மீறி நிற்பவை. கரனுக்கு, அஞ்சலிக்கும் இடையில் ரெமான்ஸ் கட்சிகளைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகளும், குமரி மண்ணில் அதிக இயற்கை வனப்பும் இருக்கையில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்யாமல் விடப்பட்டுள்ளது. குமரி வட்டார வழக்கிலுள்ள அதிகச் சொற்கள் இடம் பிடித்துள்ளன. ஆனால் பாத்திரங்கள், கரன் உள்பட பேசுவது இருவேறு வழக்கு மொழிகளாக தென்படுகிறது.

அரிசி மற்றும் சாராயம் கடத்துவதை மட்டும் காட்டும் இந்தப் படம் பொழியூர் பகுதியில் குடிசைத் தொழிலாக சாராயம் வடிப்பதையும், சாராயத்திற்காக கச்சாப் பொருள்களில் ஒன்றான கருப்புகட்டி வாங்கச் செல்லும் பெண்கள், தங்கள் தாலிச் சங்கிலிகள் உள்பட பொட்டு தங்க நகைகளை கருப்புக்கட்டி வியாபாரிகளின் அடகு வைத்து கருப்புக் கட்டி பெற்றுச் செல்லும் உண்மை நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கலாம்.

எனினும் விறுவிறுப்புடன் உண்மைச் சம்பவம் தொடர்புடைய ஒரு திரைப்படத்தை கொடுத்த வி.சி. வடிவுடையானுக்கும், நேர்த்தியாக நடித்த கதாநாயகன் கரன், நாயகி அஞ்சலி், வில்லன் சிலுவை, சித்தப்பு சரவணன், கஞ்சா கருப்பு ஆகியோரைப் பாராட்டுக்குரியவர்கள். இதில் வில்லன் சிலுவையின் நடப்பு தான் என்னை அதிகம் கவர்ந்தது.

இறுதியாக குமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் அதிகம், இங்கு தான் அக்யூஸ்டுகளும் அதிகம் என்று கூறும் இயக்குனர் வடிவுடையானின் கருத்தில் முரண்படுகிறேன். குமரி மாவட்டத்தில் வரதட்சிணை குற்றங்கள், தற்கொலைகள் அதிகமே தவிர வடிவுடையான் சொல்லும் அர்த்தம் கொண்ட வன்முறை சார்ந்த குற்றங்கள் குறைவு.

புதன், 26 அக்டோபர், 2011

மீறப்படும் பத்திரிகை தர்மம்

இப்போதெல்லாம் ஒரு சில தமிழ்ப் பத்திரிகைகளை எடுத்துப் பார்க்க நேர்ந்தால் அதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ஜனநாயகத்தின் தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகைகளில் இப்போதையை போக்கு, ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தில் குழிதோண்டும் செயலாகவே நினைக்கத் தோன்றுகிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது தமிழ் பத்திரிகைகள் சில அரங்கேற்றிய செயல்களைத் தான் வேதனையோடு எழுதுகிறேன்.

ஒரு பத்திரிகையில் ஒரு செய்தியை செய்திக்குரிய அமைப்போடு date line கொடுத்து வெளியிடுவதும், விளம்பரத்தை கட்டம் போட்டு அதன் கீழே advt என்று பதிவு செய்வதும், விளம்பரதாரர் கட்டுரையாக இருப்பின் advertorial என்று பதிவு செய்வதும் மரபு.
ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த மரபு முழுமையாக மீறப்பட்டு காற்றில் விடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களைக் குறித்த விளம்பரங்களை கட்டணம் பெற்றுக் கொண்டு, அல்லது 1000, 500 என ஒரு குறிப்பிடட அளவு பத்திரிகைகளை சம்மந்தப்பட்ட வேட்பாளர் வாங்க வேண்டுமென்ற நிபந்தனையோடு செய்தி போல் விளம்பரங்களை, பத்திரிகைகள் வெளியிட்டன.

சில பத்திரிகைகள் பேக்கேஜ் முறை என ஒரு குறிப்பிட்ட தொகையை வேட்பாளர்களிடம் பெற்றுக் கொண்டு அவர்கள் சார்ந்த செய்திகளை குறிப்பிட்ட நாள்கள் வெளியிட்டன. வாசகர்கள் இவை அனைத்தையும் செய்தி என்று கருதும் நிலை ஏற்பட்டது. பல வாசகர்கள் உண்மையான செய்தி எது, விளம்பரம் எது (அல்லது போலிச் செய்தி) என்று குழம்பிப்போனார்கள். paid news என்று கூறப்படும் இத்தகைய செய்திகள் வாசர்களை ஏமாற்றும் செயலாகும். மட்டுமல்லாமல் ஒரு நாளிதழ் தனது வாசகனையே ஏமாற்றும் நடவடிக்கையாகத் தான் சமூக நலம் கொண்ட பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்குமுன் வட இந்திய மாநிலங்களில் இதுபோன்ற செயல்களைப் பத்திரிகைகள் அரங்கேற்றியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் சென்று அவை விசாரணை நிலையிலுள்ளன.
தேர்தல் விதிகள் படி ஒரு வேட்பாளர் இத்தனை ரூபாய் தான் செலவளிக்க வேண்மென்ற நிலையில் paid news க்காக வேட்பாளர்கள் செலவழிக்கும் தொகை தேர்தல் கணக்கில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பில்லை. இதனால் வேட்பாளர்களின் தேர்தல் விதி மீறல்களுக்கு பத்திரிகைகள் துணைபோகின்றன.
பத்திரிகைகளின் இத்தகைய செயல்பாடு வலுவான ஜனநாயகத்திற்கும், நல்லவர்கள் ஆட்சியில் வருவதற்கும் எதிரான செயல்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து தலைப்புச் செய்திகள் வெளியிடும் இத்தகைய பத்திரிகைகள் தங்கள் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டாமா...? ஏற்கனவே ஒவ்வொரு செய்தியிலும் தனது மூக்கை நுழைத்து ஏதாவது ஒரு கமென்ட் அடித்து அதனை வெளியிடும் இத்தகைய பத்திரிகைகள். தற்போது காசேதான் கடவுளடா என்ற பாணிக்கு இறங்கியுள்ளது வேதனையிலும், வேதனை. வாசகர்கள்தான் விழிப்பாய் இருக்க வேண்டும்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

மௌனம்

ஒரு மௌனத்தைச்
சொல்லிவிட்டுப் போய்விட்டாய்...

அப்போது
உன் உதட்டுப் பள்ளத்தாக்கில்
விழுந்த நான்
இன்னும் எழுந்திருக்கவில்லை..

குளிரும் ராத்திரிகளில்
ஒரு உஷ்ணப் பெருமூச்சு..
நான்
கம்பளியாய்க் கொள்வேனே..

வெப்பம் தகிக்கும்
வெயில் ராத்திரிகளில்
ஒரு இதழசைவு...
நான் தென்றலாய்க் கொள்வேனே...

எதுவுமில்லை
மௌனத்தைத் தவிர
எதுவுமில்லை...

ஒரு நத்தைக் குஞ்சு
இழுத்துச் செல்லும்
ரயில் வண்டி ராத்திரிகளில்
வாய் முளைத்த பகல் மௌனங்கள்
என்னருகே வருகின்றன...

பாதம்.. கணுக்கால்... கொலுசு - என
அவைகள்-உன்
அவையங்கள் குறித்து
நலம் விசாரிக்கின்றன...

என்ன செய்வது
பதில் சொல்வதற்குள்
ஒவ்வொரு நாளும்
கிழக்கு பூத்துவிடுகிறது...

நான் மட்டும்
வற்றிய மார்பு சப்பும்
பசித்த பச்சிளமாய்
உன் நினைவுகளோடு...

வியாழன், 1 செப்டம்பர், 2011

கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப் ஆண்டு விழா


கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப்பின் 6 வது ஆண்டு விழா நாகர்கோவிலில் ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பத்திரிகை செய்தியாளர்கள், வார இதழ் செய்தியாளர், தொலைக் காட்சி செய்தியாளர்கள் மற்றும் புகைப் பட கலைஞர்களைக் கொண்ட அமைப்பு கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப் PRESS CLUB OF KANYAKUMARI DISTRICT.
செய்தியாளர்கள், குறிப்பாக கிராமப் புறங்களில் பணியாற்றும் பகுதி நேரச் செய்தியாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு மலர் ஒன்றை வெளியிட்டு ஆண்டு விழாவை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 6 வது ஆண்டு விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி அரங்கில் ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் தா. டென்சன் தலைமை வகித்தார்.
பொருளர் ஜே.எம். பெகின், ஆண்டு விழா மலர்க்குழு அமைப்பாளர் ஜே. லாசர், மலர் குழு உறுப்பினர்கள் குமுதம் செல்வராஜ், ஜி. முத்துக் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, துணைத் தலைவர் என். கமலன் அனைவரையும் வரவேற்றார். கிளப் செயலர் ஜி.எஸ். ராமபத்ரன் அறிக்கை சமர்பித்து உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் குமரி மாவட்ட ஆட்சியர் சோ. மதுமதி ஆண்டு விழா மலரை வெளிட அதனை எழுத்தாளர் முனைவர் எஸ். ஸ்ரீகுமார் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மறைந்த கிளப் உறுப்பினர் எம்.சி. கோபகுமாரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்பட்டது, மட்டுமல்ல மூத்த உறுப்பினர் தினகரன் தாசையாவிற்கு ரூ. 10 ஆயிரம் பொற்கிழி வழங்கப்பட்டது.
வாழ்த்திப் பேசிய எழுத்தாளர் முனைவர் எஸ். ஸ்ரீகுமார், கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ஜான் ஜேக்கப், மாவட்ட பாசனத்தார் சபைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ ஆகியோர் தங்களது பேச்சில் பகுதி நேரச் செய்தியாளர்களின் ஆதங்கங்களைப் பதிவு செய்து கொண்டனர். குமரி மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு செய்தியாளர்களுக்கான சலுகைகளை பெற்று தர முயற்சிப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மூத்த செய்தியாளர்கள் புலவர் மு. அருளப்பன், ஜி.எஸ். ராமபத்ரன், என். கமலன், எஸ். நஜ்முதீன், ஐ. கிருஷ்ணராஜா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு மலருக்கான அட்டைப் படம் வரைந்த ஓவியர் வாமனன், ஆசிரியர் திலகம் எம். சுந்தரம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். செயற் குழு உறுப்பினர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.
நிகழ்வில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஊருக்குப் போன உலக மயம்



அந்த உலகம்
புதியதாய் இருந்தது.

அலுமினியப் பறவைகள்
எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தன.

அழகில்லாதவர்கள்
அங்கில்லை.

ஒப்பனையும்
கற்பனையும் கொண்டவர்களுக்கே
அங்கு குடியுரிமை.

நுகராதவன்
சுவாசிக்கலாகாது
இது சட்டம்.

எனது-மூளைக்குள்ளும்
கணினி இடம் பெயர்ந்திருந்தது
நரம்புகளில் - மின்சாரம்.

அந்த மரம்
அங்கு நின்றது
உலுக்கிய போது - அது
கரன்சிகளை உதிர்த்தது.

என் உறவு யாது
எது என் மொழி
எனது தேசம் எது
எல்லாம் மறந்தெனக்கு.

உடல் மொழியும்
ஊடல் மொழியும் வசப்பட்டது.

நுகர்வின் மயக்கத்தில்
பேதமற்றுக் கிடந்தன
பகலும்-இரவும்.

உரசிய உதடுகளும்
ஓங்கியக் கோப்பைகளுமாய்
துள்ளிக் குதித்ததில்
தலையில் மோதியது வானம்.

ஒரு நாள்
உலுக்கிய போது
கரன்சி மரம்
கற்களை உதிர்த்தது.

மெல்லனவாய்
நினைவில் வந்ததது-
எனது தேசம்
எனது மொழி
எனது தாய்.

முதியோர் இல்லத்தில்
முனகிக் கொண்டிருக்கும்
தாய்க்கு
என்னை நினைவில்லை.

உண்மையில் நான்தான்
தாயை
எப்போதோ மறந்திருக்கிறேன்....

திங்கள், 23 மே, 2011

மக்கள் புரட்சி

நடந்து முடிந்த தமிழகப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது. மக்களுக்குத் தான் எத்தனைக் கோபம்.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையா.. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வேலை நியமண தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு பல ஆயிரம் பேர் மீண்டும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றனர். சென்னை நகர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வெளி நாட்டு உதவியுடன் பல்வேறு தொழிற்சாலைகள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம். 108 ஆம்புலன்ஸ் சேவை என எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை அந்த அரசு செய்தது.
ஆனாலும் வீழ்ச்சி. ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது போல இலவசங்களைக் கொடுத்து விட்டு இமாலய ஊழல்கள் செய்தனர். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தனர். சுனாமி போல் சுழன்றடித்த மின் வெட்டால் தமிழகம் இருண்ட போது உருப்படியாய் எதுவும் செய்வில்லை. குடும்ப உறுப்பினர்களின் கோரத் தாண்டவம், எல்லாத் துறையிலும் ஆதிக்கம் என மக்களுக்கு கொடுத்த இன்னல்கள், மக்கள் நலப்பணிகளை எல்லாம் விழுங்கி்க் கொண்டது. இடைத் தேர்தல்களில் வாக்காளர்களை விலைக்கு வாங்கி செயற்கையான வெற்றி பெற்று மக்களின் உண்மையான மனநிலைய நிலையை புறம் தள்ளினர். அல்லது கவனிக்க மறந்தனர்.
தமிழகத்தில் திராவிட இனத்தின் அரணாக ஒடுக்கப்பட்டு நொறுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவர்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்றும், அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வந்த இயக்கம் ஒருகட்டத்தில் அதிலிருந்து சறுக்கியது பெரும் சோகம். திமுக ஜாதி அரசியலுக்குள் சிக்கியதும், திமுகவின் பெரும் தலைகள் ஜாதியத்தின் ஆதரவாளர்களாய் ஆதிக்க சக்திகள் போல் வலம் வந்ததும். திமுக தலைமையின் அங்கத்தினர்கள் பகுத்தறிவு சிந்தனைக்கு எதிரானப் போக்குகளைக் கொண்டதும், அந்த இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்ற கேள்வி நோக்கி மக்களை குறிப்பாக இன உணர்வாளர்களை சிந்திக்க வைத்தது. திமுகவின் மாறிய சிந்தனைப் போக்கு மக்களுக்கு இலவசமாய் எதையாவது வீசி அவர்களை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு ஆடம்பரமாக அரியணையில் அமர்ந்திருக்க வேண்டுமென்பதாகத் தான் இருந்தது.
ஆனால் மக்கள் எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டு காத்திருந்தனர். மக்களுக்குத் தான் எத்தனைக் கோபம். நியாயமாக நடைபெற்ற ஓர் தேர்தலில் ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளனர். யார் வந்தாலும் கவலையில்லை.. திமுக அல்லது திமுக கூட்டணி வரக்கூடாது என்ற முடிவை எழுதி விட்டனர்.
அதனால் தான் அதிமுக அரியணை ஏறிவிட்டது. அதிமுகவும் இந்த மக்கள் புரட்சியை மனதில் கொள்வது நல்லது.

வெள்ளி, 6 மே, 2011

வல்லரசு

அவர்களிடம்
அரிவாள் இருக்கின்றது
கத்தி இருக்கின்றது
கடப்பாரை இருக்கின்றது
ஏன்...
அணு குண்டுகள் கூட இருக்கின்றதாம்.

நெருங்க முடியாதாம்
வல்லரசாம்.

அங்கே
வறுமைப் பானைகளில் தான்
பட்டினியை சமைக்கின்றார்களாம்.

இரட்டைத் டம்ளர்களின் தான்
ஜாதிகளை ஆற வைக்கின்றார்களாம்.

பாப்பா பட்டிகள்
ஜனநாயகத்தின் உதாரணங்களாம்.

ரத்ததானம்
மனிதனுக்கும் மண்ணுக்கும் தானாம்.
அதற்கு
மதங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாம்.

அவர்களிடம்
அணு குண்டுகள் கூட
இருக்கின்றதாம்..

நெருங்க முடியாதாம்
வல்லரசாம்...

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

வெட்கப்பட வேண்டாம்..




இன்னும் பெரிய கோப்பைகளை
வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள்
பெருத்த வயிறுகளுக்கு
இதைவிட பெரிய கோப்பைகள் வேண்டுமென்று
நாம்
உணர்ந்துள்ளோம்.

செந்நிற திரவமோ
கருநிற திரவமோ
உங்கள் கோப்பைகளில்
எப்போதும்
நிரம்பி வழிந்து கொண்டேயிருக்கட்டும்.

நீங்கள்
இன்பம் என கருதுவதைத் தானே
நாம்
தரவேண்டும் ?

உங்களில் பலர்
வெட்கத்துடனும்
புன் முறுவலுடனும்
புட்டிகளுக்காக
வரிசையில் நிற்பதை
நாம்
கண்டு வருகிறோம்..

வெட்கப்பட வேண்டாம்
எனெனில்
நாமே
வெட்கப்படுவதில்லை...

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சுற்றுச் சூழல்


தமிழகத்தின் குன்றுகளை உடைத்து கேரளாவிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன ?


கன்னியாகுமரி மாவட்டம் களியல் சந்திப்பில் ஒரு சகோதரர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். ஆரம்ப கல்வி மட்டுமே கற்ற அவருக்கு, சுற்றுச் சூழல் குறித்து இருக்கும் கவலை, நம்மில் பலருக்கு இல்லை. அந்த சகோதரர் காங்கீரீட் கட்டுமானங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது குறித்து பல் வேறு சுற்றுச் சூழல் அமைப்புகளுக்கும் அரசுக்கும் தொடர் கடிதங்கள் எழுதி வருகிறார். ஆனால் அவரது கடிதங்களுக்கு எந்த நடவடிக்கைகளும் இல்லை.
இந்தியாவில் சுனாமிக்கு பிறகு சுற்றுச் சூழல் குறித்த அக்கறை பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் அதனை முழுமையாக உணர்ந்ததாக தெரியவில்லை.
தமிழகத்தில் தற்போது அனைத்தையும் விற்று காசாக்குவது என்ற நோய் வேகமாக பரவிவருகின்றது. இதில் ரீயல் எஸ்டேட் தொடங்கி பாறைகள், குன்றுகள் என எல்லாவற்றையும் உடைத்து விற்று தங்கள் கஜானாவை நிரம்பி விட வேண்டுமென்று அரசியல் பிரமுகர்கள், அல்லது அவர்களது பினாமிகள் துடித்துக் கொண்டிருகின்றனர்.
இதில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுக்கும் வித்தியாசமில்லை.
இதன் ஒரு பகுதியாகத் தான் இயற்கை வளம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இயற்கை அரணாக திகழும் பாறைகள் மற்றும் குன்றுகளை உடைப்பதும், தினம் நூற்றுக்காணக்கான லாரிகள் மணல் மற்றும் பாறைத் துகள் ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு செல்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தை விட கேரளாவில் அதிக அளவு பாறைகளும், குன்றுகளும் உள்ள நிலையில் தமிழகத்திலுள்ள பாறைகளை உடைத்து கேரளாவிற்கு கொண்டு செல்ல என்ன அவசியம் வந்தது என்ற கேள்வி ஒவ்வொரு சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் மனதில் எழும்பும் நியாயமான கேள்வியாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லைக் கிராமமான களியல் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த கல்குவாரி நிறுவனம் ஒன்று பாறைகளை உடைத்து அதன் துகளை தண்ணீரில் கழுவி எம்-சான்ட் என்று செயற்கை மணலாக மாற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கிறது. இதற்காக இங்குள்ள கோதையாற்றிலிருந்து தினம் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுத்துத் வருகின்றது. இதற்காக விதிகளை மீறி மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளது. இதனை தடுக்க பொதுப்பணித் துறை முன்வரவில்லை. 50
டன் சுமையோடு மணல் அல்லது பாறைத் துகள் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும், அதனால் பிற வாகனங்களில் பயணிப்போருக்கு நேர விரயமும், பிற வாகனங்களுக்கு கூடுதல் எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. இது தவிர அதிக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகளால் குமரி மாவட்டதில் தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்துச் சாலைகளும் சேதமடைந்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் அழகான சாலை என்றால் அது ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையாகத் தான் இருக்கும். பரந்து விரிந்து கிடக்கும் சிற்றாறு அணையின் கரைப் பகுதி வழியாக இருபுறமும் பூத்துக் குலுங்கி நிற்கும் கொன்றை மரங்களுக்கு மத்தியில் செல்லும் சாலை இயற்கை பிரியர்களை, இறக்கை கட்டி பறக்க வைக்கும் அழகு கொண்டது. ஆனால் அந்த சாலை இப்போது கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறிய சாலை போல் காட்சியளிக்கின்றது.
இத்தகைய சேதங்களையும், இழப்புகளையும் கணக்கிட்டால் அரசுக்கு மணல், அல்லது பாறைத் துகள் மூலம் கிடைக்கும் வருவாய் வெறும் கொசுறு தான். குத்தகை தாரர்களுக்கும் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் கொள்ளை லாபம்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் தமிகத்தில் பாறைகள், குன்றுகள் எதிர்காலத்தில் இருக்குமா... நமது சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுமா... அனைத்தையும் விற்று காசாக்குவது தொடருமா... தமிழத்தின் குன்றுகளை உடைத்து கேரளாவிற்கு அனுப்புவதற்கான அவசியம் என்ன.. கேள்விகள் ஏராளம்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ரோபோக்கள் போதும்

தன்னைத் தானே
வெட்டிக் கொண்டு
செத்துப் போனான் பா.கி.

கணினியிலிருந்து வெளியேறிய
கனலில்
கருகிப் போனார்கள்
தினக் கவர்ச்சிப் பத்திரிகை
ஊழியர்கள்

நாளை
நட்டு வைத்திருந்த
சூலாயுதத்தில் விழுந்து
செத்துப் போகக் கூடும்
ராம சங்கரன்

நீதி மன்றங்களுக்கு
சாட்சி முக்கியம்
மனசாட்சி ?

இனி
தீர்ப்புகளை
ரோபோக்கள் சொல்லும்..

சனி, 29 ஜனவரி, 2011

மாத்தூர் தொட்டிப் பாலம்





மாத்தூர் தொட்டிப்பாலம்

மாத்தூர் தொட்டிப்பாலம், ஆசியாவின் அதிசயம், சுற்றுலாப் பயணிகளை தாலாட்டும் தொட்டில், அதன் மேல் பகுதியில் மெல்லியதாய் வீசும் காற்றுக்கிடையில் நின்று கொண்டு பச்சைப் பசேலென விரிந்து கிடைக்கும் இயற்கை வனப்புகளை ரசிப்பது அலாதியானது.
எத்தனை உயரம்... எத்தனை பிரம்மாண்டம்... ஆற்று வெள்ளத்திற்கு மத்தியில் இத்தனை உயரத்திற்கு அந்த வசதியில்லாத காலத்தில் எப்படி எழுப்பினார்கள் இந்த அதிசயத்தை என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆம். 1969 ம் ஆண்டு குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதி பாசனத்திற்கு சிற்றாறு அணையைக் கட்டி, அதற்கான கால்வாயை வெட்டும் போது இப்படி ஒரு இக்கட்டில் சிக்கி விட்டோமே என்று பொறியாளர்கள் எண்ணியிருக்கக் கூடும். அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை மாத்தூரில் குறுக்காக 100 அடி ஆழத்தில் பாய்ந்து செல்லும் பரளியாற்றைக் கடந்து எப்படி கொண்டு செல்வது ? உண்மையில் சவாலான பணி தான். சாதித்திருக்கிறார்கள் நமது பொறியாளர்கள்.
1240 அடி நீளம், 101 அடி உயரம், 29 தூண்கள் என பிரமாண்டமாய் நிற்கிறது தொட்டிப்பாலம். ஒரு பக்கம் கால்வாய், அதற்கு இணையாக மக்கள் நடந்து செல்ல நடைபாதை.
தமிழக சுற்றுலாத் துறையும், குமரி மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் பஞ்சாயத்துகளான அருவிக்கரை, வேர்க்கிளம்பி நிர்வாகங்களும் இங்கு எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் பல வசதிகளை செய்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு இப்பகுதியில் உற்பத்தியாகும் அன்னாசிப் பழங்களும், வருக்கை பலாப்பழங்களும் கிடைக்கும்.
வாருங்கள்.. இயற்கை இங்கு உங்களுக்காக தொட்டில் கட்டி காத்திருக்கின்றது. இது உங்கள் இதயத்தை கொள்ளைக் கொள்ளும் இடம்.
நாகர்கோவிலிலிருந்து தக்கலை அழகியமண்டபம் திருவட்டார் மாத்தூர் வழியாக இந்த பாலத்திற்கு செல்லாம். திருவட்டாரிலிருந்து மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு 3 கி.மீட்டர் தூரம்.

வியாழன், 9 டிசம்பர், 2010







மறுபடியும் மறக்க முடியாத நாள்...
டி
சம்பர் 7 ம் தேதி நண்பகல், ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பலத்த மழையில் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
சன் டிவி ஜெரால்டிடமிருந்து போன் வந்தது. "லாசர், பேச்சிப்பாறையிலிருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தெறந்து விட்டிருக்காங்களாம்". எனது மனதிற்குள்ளும் அந்த எண்ணம் ஏற்பட்டிருந்தது. மழை மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் தினமலர் நண்பர் ஜெயமோகன் திருநந்திக்கரை கோயிலில் வெள்ளம் புகுந்து விட்டதாக போனில் சொன்னார். "உடனடியாக புறப்பட்டு வாருங்கள் இருவரும் அங்கு செல்லலாம்" என்றேன்.
சற்று நேரத்தில் அவரும் வந்துவிட்டார். இருவருமாக திருநந்திக்கரை விரைந்தோம்.
செல்லும் வழியில் திட்ட விளை கிராமம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தை பார்த்தபோது நிலமையை முழுமையாக உணர்ந்து கொண்டோம்.
ஏறக்குறைய இருள் சூழ்ந்து விட்டிருந்தது. நந்தியாறு நிரம்பி நந்தீஸ்வரர் கோயிலுக்குள் வெள்ளம் வேகமாக புகுந்து கொண்டிருந்தது. கோயில் வெள்ளத்தில் மிதந்தது போலவே காணப்பட்டது. அந்த நேரத்திலும் கோயிலில் அர்ச்சகர் பூசை நடத்திக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அவரை வெளியே அழைத்து வந்தார்கள்.
பின்னர் ஒருவழியாக புகைப்பட காரரை அழைத்து படம் எடுத்தோம். பின்னர் அவசர அவரசமாக வீடு வந்து அடுத்த நாள் செய்திக்கு படத்துடன் அதனை கணினியின் தட்டிவிட்டேன்.
மழை தொடர்ந்து தீவிரமானது. சற்று நேரத்தில் பேச்சிப்பாறை அருகில் வசிக்கும் அண்ணன் சேவியர் வீட்டிலிருந்து போன் வந்தது. வெள்ளம் வீட்டின் முற்றம் வரை வந்து விட்டதாக சொன்னார். எனது மனக்கண் முன்னால் 1992 நவம்பர் 13 தான் ஓடிக்கொண்டிருந்தது. விமலாவிடமும் அதனை விவரிதேன். நண்பர்கள் ஜெயமோகன், கமலன், பிரதீஸ் ஆகியோரிடமிருந்து தொடர்ந்து போன் வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் ஜெரால்டிடமிருந்து அழைப்பு, கலெக்டர் ராஜேந்திர ரத்னூ திருவட்டாரில் முகாம் என்றார்.
இரவு தூக்கம் வரவில்லை. அதிகாலை 3 மணிக்கு நண்பர் மைக்கேல் ராஜிடமிருந்து அழைப்பு, லாசர் மழை நிற்கவில்லை. பலத்த இடி வெட்டும் உள்ளது என்றார்.
காலையில் எழுந்து முதல் வேலையாக மழைக் கோட்டை அணிந்து கொண்டு திற்பரப்பு அருவிக்கு விரைந்தேன். நிலைமையின் தீவிரம் மேலும் உறைத்தது. அப்புறம் களியல், பின் தொடர்ச்சியாக திருவட்டார், தேமானூர், மூவாற்றுமுகம், பின்னர் பேச்சிப்பாறை என கொட்டும் மழையில் ஒரே ஓட்டம் தான். எங்கும் வெள்ளத்தின் ருத்ர தாண்டவம். இடையில் மோட்டார் சைக்கிள் வேறு பல இடங்களில் மக்கர் செய்தது. ஒரு வழியாக சம்வங்களை பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்து கணினி முன் அமர்ந்தேன்.....
றக்க முடியாத நாள்கள்... . ஆம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டம் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ளது. 1992 நவம்பர் 13 க்கு பிறகு 2010 டிசம்பர் 7, 8 தேதிகளில்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மறுகால் வெள்ளமும், இதர பகுதிகளிலிருந்து புறப்பட்டு வந்த வெள்ளமும் ஆற்றில் பிரவாகம் எடுத்து ஓடியது.
உண்மையில் 1992 ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு இப்போது இல்லை. ஊடகங்கள் வழியாகவும், இதர தகவல் தொடர்பு கருவிகள் வழியாகவும் கிடைத்த தகவல்கள் மக்களை முன்னெச்சரிக்கையாக வைத்து விட்டன. எனினும் ஆறுகளின் கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை இந்த வெள்ளம் பாதித்து விட்டது. அவர்களின் உடமைகளை வெள்ளம் களவாடி விட்டது. அது போல் நெல் வயல்களையும் மழை வெள்ளம் பதம் பார்தது விட்டது.
ஆற்றின் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்படும் போதும், தண்ணீர் பாய்ந்து செல்லும் தடங்கள் தடுக்கப்படும் போதும் அரசு அதிகாரிகள் வேடி்க்கை பார்ப்பதைத் தவிர வெறென்ன செய்வார்கள் ?.
மறுபடியும் வெள்ளம் நமக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நீ வருவாய் என..


அறையில்
முடங்கிக் கிடக்கிறது
இந்தப் பகல்.

நீ
தட்டும் தருணத்திற்காக
காத்திருக்கிறது
கதவு.

முதலில்
பேப்பர்காரன் வந்தான்
அப்புறம்
தபால் காரன்.

இன்னும்
சோப்பு விற்பவன்
பீனாயில் விற்பவன்
டெட்டால் விற்பவன்
வரக்கூடும்.

அலைபேசி
அதிசயமாய்
உறங்கிக்கிடக்கிறது.

சாரலாய் தொடங்கி
பேயாய் மாறிப்போன
மழை போலிருந்தது
உனது காமம்.

நீ
தட்டும் தருணத்திற்காக
காத்திருக்கிறது
கதவு.

நீ
வரலாம் - அல்லது
இந்நேரம்
வேறு யாருக்கேனும்
புதிதாய்
எஸ்எம்எஸ்களை
விட்டுக் கொண்டிருக்கலாம்
.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

திற்பரப்பு அருவி







திகட்ட திகட்ட






குளிக்கலாம்






திற்பரப்பு அருவியில்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது திற்பரப்பு அருவி. முதன்முதலாக குலசேகரம் கான்வென்ட் பள்ளியில் 1 ம் வகுப்பு படிக்கும் போது தான் அங்கு சுற்றுலா சென்றோம். அப்போதைய பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. அருகில் பிராமாண்டமான கற்களால் எழுப்பப்பட்ட மகாதேவர் கோயிலும், கோயிலுக்கு செல்லும் நடை பாதையில் செதுக்கப்பட்டுள்ள தவளையைப் பிடிக்கத் துடிக்கும் பாம்பு சிற்பமும் ஆச்சரியமாய் இருந்தது. அதன் பிறகு பதின் பருவத்தில் மிதிவண்டியில் அவ்வப்போது அருவி சென்று குளித்து மகிழ்வதுண்டு. அப்போதெல்லாம் அந்த அருவி அரிதாரம் பூசாத அருவியாகவே இருந்தது.
இன்று ஏறக்குறைய ஒரு இந்திய அளவிலான சுற்றுலாத் தலமாக அது மாற்றப்பட்டிருக்கின்றது. பூங்காக்களும், சிறார் நீச்சல் குளமும், படகு துறையுமாய் அருவின் சுற்றுப்பகுதிகள் விரிவடைந்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு தான் இங்கு அருவியாக கொட்டுகிறது. ஆதிகாலத்தில் இந்த ஆறு தற்போது அருவியாக விழுந்த இடத்தின் வழியாக பாயவில்லை என்பது தான் உண்மை. பிற்காலத்தில் தான் ஆற்றின் போக்கை முழுமையாக திருப்பி உயரமான அருவியாக்கியுள்ளனர். யுகங்களுக்கு முன்னர் இந்த ஆறு பாறைகளின் வழியாய பாய்ந்தோடிய தடங்களை இப்போது காணமுடியும், அவை பார்ப்போரை பரசமூட்டும் நல்ல ஓவியங்கள், அல்லது கவிதைகள் எனலாம்.
தமிழகத்தில் குற்றாலம் அருவி வறண்டாலும், திற்பரப்பு அருவி வறண்டு போவதில்லை. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். நகரத்தின் வெகு அருகில் இருபதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை எளிதில் வந்து செல்லலாம். ஆபத்து என்பது இல்லாத சுற்றுலாத் தலம்.

திங்கள், 24 மே, 2010

லாசர் ஜோசப் கவிதை




ஆன்லைனில் ஆடுகள் வளர்க்கலாம்

ஏ... !
எதிர்காலச் சந்ததியினரே
எதை விட்டுச் செல்வோம்
உங்களுக்காக....

அதோ
பள்ளத்தாக்குகளில் குதித்து
பேச்சியிடம் கதை பேசிவரும்
கோதை நதியையா...

அகிலும், தேக்கும்
அழகிய
சந்தனங்களும் கொண்ட
அசம்பு வனத்தையா...

மழை மேகங்கள்
தழுவிச் செல்லும்
தாடகை மலையையா...

தண்ணீருக்கு மார்பு காட்டி
படுத்துக் கிடக்கும்
திற்பரப்பு பாறைகளையா...

கன்னியும், கும்பமுமாய்
இரண்டு போகம்
விளையும்
நாஞ்சில் வயல்களையா....

ஆடுகள்
குட்டிகளோடு
துள்ளி விளையாடும்
பசும் புல் வெளிகளையா...

எதை விட்டுச் செல்வோம்
சந்ததியினரே
உங்களுக்காக...?

துகிலுரியப்பட்ட
பூமியைத் தவிர
வேறென்ன இருக்கும்
விட்டுச் செல்வதற்கு...?


சபிக்காதாதீர்
சந்ததியினரே
எங்கள் வயிறு பெரிது
பசி பெரிது

எனினும் உங்களுக்கான
கணினிகளை சேமித்து
வைத்திருக்கிறோம்

நீங்களும் தான்
ஆன்லைனில்
ஆடுகள் வளர்க்கலாம்...



சனி, 20 மார்ச், 2010

குருசுமலை







சிலுவையை சுமக்கும் மலை

அந்த மலை சிலுவையை சுமந்து கொண்டிருக்கிறது. சிலுவை என்ற சொல் குருசு என்றும் அறியப்படுகிறது. அதனால் அந்த மலை குருசு மலை என்று அழைக்கப்படுகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்துவால் சிலுவை புனிதம் பெற்றது. அந்த சிலுவையின் அடிபணிந்து வணங்கினால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறும், வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை லட்சக்கணக்கான மக்களை அதன் பாதை நோக்கி அழைத்துச் செல்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. பயணம் அழகிய சிற்றாறு 2 அணையின் கரைப்பகுதி வழியாக சென்றால் கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை சந்திப்பு வரும், அதிலிருந்து 2 கி.மீ. தூரம் குருசு மலை அடிவாரம்.
ஆகா.. எத்தனை அழகு... விழிகளை வியப்பிலாழ்த்தும் அந்த மலை.. அதுதான் குருசுமலை. அந்த மலை உச்சியில் தான் குருசு நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரம். அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வது சற்றுக் கடினமானப் பயணம் தான் . மலை உச்சிக்கு சென்றால் இதமான தென்றல் தழுவும். கூடவே ஒரு புறம் நெய்யாறு அணைக்கட்டும், மறுபுறம் சிற்றாறு அணைக்கட்டும் தெரியும். மலை உச்சி தமிழக எல்லையில் இருக்கிறது. அந்த உச்சிப் பகுதியில் சிலுவை தன்னந்தனியாக கைகளை விரித்தவாறு நிற்கிறது.. அது
அன்பிற்காய்... ஆதரவிற்காய்.. நல் வாழ்விற்காய் ஏங்குபவர்களே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருப்பதாய் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டம் சார்பில் தவக்கால நாள்களின் இறுதிப் பகுதியில் இங்கு திருப்பயணம் நடத்தப்படுகிறது. கேரளாவிலிருந்தும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குச் செல்கின்றனர்.