ஞாயிறு, 2 நவம்பர், 2014

திற்பரப்பு குகைக் கோயில்

திற்பரப்பு அருவி அருகே புராதன குகைக் கோயில்!

By ஜே.லாசர், குலசேகரம்

First Published : Dinamani  19 February 2014 
  
குமரி மாவட்டம், திற்பரப்பு அருவிப் பகுதியில் மறைந்திருக்கும் புராதனச் சின்னமான பத்திரகாளி குகைக் கோயிலில் தொல்லியல் ஆய்வு நடத்தி, அதனை வழிபாட்டுத் தலமாக மாற்ற வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு மகாதேவர் கோயில் புகழ்பெற்ற சிவத் தலம். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், வீரபத்திரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயில் 9-ஆம் நூற்றாண்டில், இப்பகுதியை ஆண்ட ஆய்குல மன்னர் ஸ்ரீவல்லபா முதல் தொடர்ந்து வந்த திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் மேம்படுத்தப்பட்டதாக திருவிதாங்கூர் தொல்பொருள் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இக்கோயிலின் மேற்கு வாசலின் எதிரே பரந்து விரிந்து கிடக்கும் பாறைகளின் வழியாக கோதையாறு பாய்ந்து அருவியாக விழுகிறது. இந்த ஆற்றின் கரையில் இரண்டு கல்மண்டபங்கள் உள்ளன. இவை திருவிதாங்கூர் மன்னர் விசாகம் திருநாள் ஆட்சிக் காலத்தில் 1880-1885 ஆண்டுகளில் கட்டப்பட்டவை. இந்த ஆறு முன்காலங்களில் வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து கொண்டிருந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு உள்பட்ட காலத்தில்தான் இதன் போக்கு சற்று திருப்பப்பட்டு திற்பரப்பு அருவியாக மாற்றப்பட்டுள்ளது.

அருவியும் குகையும்: இந்த அருவிப் பகுதியில் ஒரு குகைக் கோயில் உள்ளது. இந்தக் குகையின் முகப்புப் பகுதியை தற்போது அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடத்துக்குச் சற்று கீழ்ப்பகுதியில் காணமுடிகிறது. மகாதேவர் கோயிலின் தெற்கேவுள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இக்குகைக்கு பாதை உள்ளது.

இக்குகைக் கோயிலினுள் பத்திரகாளியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இந்தக் குகைக் கோயிலில் நம்பூதிரிகள் தாந்திரிக பூஜைகள் செய்ததாக கதைகள் உள்ளன.

பத்திரகாளியின் புடைப்புச் சிற்பம்: இதுகுறித்து நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான அ.கா. பெருமாள் கூறியதாவது: திற்பரப்பு அருவி அருகே குகைக் கோயில் இருப்பது ஓர் ஆதாரபூர்வமான உண்மையாகும். 1928-ஆம் ஆண்டு இப்பகுதியில் பெருமழை பெய்து, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின்னர் ஆறு வற்றியது. அப்போதுதான் அருவியின் அருகே ஒரு குகை இருப்பதுகுறித்த செய்தி ஊர் முழுவதும் பரவியது.

அதைத் தொடர்ந்து, திற்பரப்பைச் சேர்ந்த என். கோபாலகிருஷ்ணன் என்பவர் தீப்பந்தத்துடன் குகைக்குள் நுழைந்தார். அவருடன் இளைஞர்கள் சிலரும் சென்றனர். இவர்கள் குகை விரிந்து கோயிலாக மாறுவதைக் கண்டனர். பின்னர் இதுகுறித்த செய்தியை திருவனந்தபுரத்தில் உள்ள தொல்லியல் அறிஞர்களிடம் தெரிவித்தனர்.

இதன்பின்னர் தொல்லியல் அறிஞர் கோபிநாதராவ் ஆதரவுடன் தொல்லியல் ஆய்வாளரான தக்கலையைச் சேர்ந்த டி.கே. ஜோசப் இந்தக் குகையைப் பார்வையிட்டு, குகை பற்றிய செய்தியை "கேரளா சொசைட்டி பேப்பர்ஸ்' இதழில் 1928-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இக்குகையில் முகப்புப் பகுதி 2.10 மீட்டர் உயரமும், 90 செ.மீ. அகலமும் கொண்டது. இதன் வழியாக உள்ளே சென்றால் குகையின் உள்ளே செல்வதற்கான பாதை உள்ளது. இந்தப் பாதை 45 மீட்டர் வரை நீள்கிறது. இப்பாதையின் இரண்டு புறமும் வாசல்கள் உள்ளன. இதில் வலதுபுற வாசலையடுத்து 4.50 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய அறை உள்ளது. இதில் பத்திரகாளி புடைப்புச் சிற்பமாக இருக்கிறாள். இந்த அறையின் எதிரே உள்ள வாசலையடுத்து 6.25 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், 2.10 மீட்டர் உயரும் கொண்ட அறை இருக்கிறது.

இந்த அறையில் தாந்திரிக பூஜைகள் நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அஸ்தி கலசங்கள் இங்கே இருந்துள்ளன. இக்குகையின் வழியே தொடர்ந்து நடந்தபோது, குகையின் வழி சுருங்கிச் செல்வதைக் கண்டிருக்கின்றனர். இதன் இறுதிப் பகுதி 60 செ.மீ. அகலமுடையதாக உள்ளது. இப்பாதையின் முடிவில் 24 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலம் 2.50 மீட்டர் உயரமுடைய விசாலமான கூடம் உள்ளது. இந்தக் கூடம் அருவி பாயும் இடத்திலிருந்து 180 மீட்டர் தொலைவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தக் கூடத்தின் மேல் வடகிழக்கில் மகாதேவர் கோயில் உள்ளது. மகாதேவர் கோயிலின் தெற்கேவுள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இக்குகைக் கூடத்துக்கு வரலாம். தற்போது இந்த நிலவறை அடைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குகைக் கோயிலில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டு, இதனை ஒரு வழிபாட்டுக்குரிய தலமாக மாற்ற அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் முன்வர வேண்டும் என்றார்.

பக்தர்கள் கருத்து: திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது. திற்பரப்பு பகுதி ஆன்மிக மணம் கமழும் புண்ணிய பூமியாகும். இங்குள்ள பத்திரகாளி குகைக் கோயில் ஒரு புராதனமான தொல்லியல் சின்னமாகும். இக்குகைக்குள் பத்திரகாளியின் சிற்பம் மற்றும், வழிபாட்டு அறைகள் உள்ளன. இதனை தொல்லியல் துறையினர் மூலம் ஆய்வு செய்து மின்சார வசதி ஏற்படுத்தி வழிபாட்டுக்குரிய தலமாக மாற்ற வேண்டும். இதன்மூலம் புராதனமான ஒரு தலம் மக்களின் வழிபாட்டுக்குக் கிடைக்கும். இத்தலம் இந்திய அளவில் புகழ் பெற்று, அதிக அளவில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை தரும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

பட  விளக்கம்:  குகையின்  முகப்பு.
தினமணி நாளிதழில் 19-2-2014 ல் வெளி வந்த  செய்தி.






வியாழன், 23 அக்டோபர், 2014


குமரி ஆதவன் கவிதை

1.
 செருப்பைக் கழற்றி விட்டு
கோயிலுக்குள் நுழைந்த பாம்பு
வெளியில் வந்து
செருப்பை அணிந்ததும்
படமெடுத்தாடுகிறது.




கல்லறையில் காயப்போட்டேன்
சீக்கிரமாய் உலர்ந்தது
என் கர்வம்

திங்கள், 20 அக்டோபர், 2014

கொலை வெட்டு


சிறுகதை:





கொலை வெட்டு


லாசர் ஜோசப்




ஸ்பெட்டாஸ் கூரையின் வெக்கையை மின் விசிறி அதிகமாய் கீழே இறக்கிக் கொண்டிருந்தது. மறுபடியும் புரண்டு படுத்தாள் கமலாவதி. தூக்கம் பிடிபடவில்லை. எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு வரலாமென்று யோசித்தாள். அதற்காக விளக்கைப் போடவேண்டும், அப்போது அருகில் படுத்துக் கிடக்கும் தனது மகள்கள் விழித்துக் கொள்ளக் கூடும், கூடவே நடு அறையில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் கணவன் தூக்கம் கலைந்து "இன்னும் ஒறக்கம் வரலியா" என கத்தக்கூடும் என எண்ணிக்கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு வரும் யோசனையை விட்டுவிட்டு மீண்டும் புரண்டு படுத்தாள்.

ஆரணிவிளை சிஎஸ்ஐ ஆலய எலக்ரானிக் மணி மறுபடியும் ஒரு இசையை ஒலித்து விட்டு இரண்டு முறை அடித்துக் கொண்டது. பின் "கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும். சங்கீதம் 17: 8" என்ற வேத வசனத்தையும் சொல்லி அடங்கியது. எத்தனையோ முறை கேட்ட வசனம் தான் அது. ஒவ்வொரு முறையும் மனதிற்குள் ஆறுதலை விதைத்துவிட்டுச் செல்லும் வசனம். இந்த முறை அந்த வசனத்திலிருந்து ஆறுதலைப் பெற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாதவளாகவே இருந்தாள் அவள். நெஞ்சின் படபடப்பு அதிகரித்தது. மூச்சுக் காற்று வெப்பமாய் வெளியேறிக் கொண்டிருந்தது.

"ஓய் கேட்டீரா..... இப்ப உள்ள நிலையில இருநூறு மரங்களுக்கும் 3 லட்சம் தான் கிட்டும், ரப்பர் ஷீட் வெல கொறஞ்சுங்கொண்டு போறது தெரியுமில்லியா, ரப்பர் தடிக்கும் அந்த கதிதான்..." ஒவ்வொரு ரப்பர் மரங்களின் மூட்டிலும் வந்து மரங்களின் பருமனையும் உயரத்தையும் பார்த்தவாறு காலையில் வந்திருந்த ரப்பர் மர தரகன் அவற்றிற்கு விலை சொன்னது கமலாவதியின் கண்களிலிருந்து இன்னும் அகலவில்லை. அந்த தரகன் ஏற்கனவே வந்த தரகன்கள் கூறிய மூன்றரை லட்சம், மூன்று லட்சத்தித்தி இருபத்தைந்தாயிரம்.. என்பதை விட குறைவாக மூன்று லட்சம் என்று விலை சொன்னது அவளை கதிகலங்கச் செய்துவிட்டது. கழுத்திலிருந்து அடகு கடைக்குப் போன 7 பவுன் தங்கச் சங்கிலியும், அருகில் தூங்கிக் கொண்டிருக்கும் மகள்களையும் நினைத்து கண்ணீர் முட்டியது அவளுக்கு.

"கொலைவெட்டிற்கு மரங்களை விலைக்குத் தந்திருந்த சங்கரன்விளை தாமஸிடம் நஷ்டத்தைச் சொல்லி கொடுத்தப் பணத்தில் கொஞ்சத்த திருப்பிக் கேட்டுப்பாம்பமா ?" என்று கமலாவதி அவள் கணவனிடம் சொன்னபோது அவன் "அதெல்லாம் நடக்காத கத... நான் ரெண்டு தடவ கேட்டுப் பார்த்தாச்சு... அவன் மொகம் கொடுத்து பேசல... அந்த ஆளும் மேற்குவிளை செல்லப்பனுக்க மரங்களை கொல வெட்டுக்கு எடுத்து 25 லட்சம் ரூபாய் பூந்தி நிக்கியாரு... எல்லாம் நம்ம தலையெழுத்து வாறது போல வரட்டும்" என்று தனது வருத்தத்தை மறைத்துவிட்டு அவளிடம் ஆறுதல் வார்த்தை சொன்னான்.

"ஒரு தடவை கூட கேட்டுப்பார்த்தாதான் என்ன... ?" என்று அவள் அவனிடம் திரும்பத் திரும்ப சொன்னபோது. கூடுதல் லாபம் கெடச்சா மட்டும் நம்ம திருப்பிக் குடுத்திருவமா... நஷ்டம் வந்தா அனுபவிச்சுதான் ஆகணும். யாவாரம் போல இல்லியா... இதுவும்... அதுமில்லாத.. இப்ப ஆருக்கு மனசாட்சி இருக்கு... அவனுவயெல்லாம் வலிய ஆளுவ... நம்மளயெல்லாம் புழு போல பாப்பானுவ... நான் வரல்ல...நீ வேணுமிண்ணா போய் கேட்டுப்பாரு" என்று சொன்னது அவள் மனத்திரையில் ஓடியது.

கமலாவதி மறுபடியும் புரண்டு படுத்தாள். 'காலையில மொத வேலையா சங்கரன்விளை தாமஸ் வீட்டிற்குச் சென்று அழுது... ஆர்ப்பாட்டம் பண்ணியாவது கொடுத்த பணத்திலிருந்து நஷ்டம் வரக்கூடிய தொகையை திரும்பக் கேட்கணும்....' என்று தீர்மானித்துக் கொண்டாள். சிஎஸ்ஐ கோயில் மணி மறுபடியும் அடித்து விட்டு "நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். சங்கீதம் 33:20" என்றது.

மலாவதி ஆரல்வாய்மொழிக்காரி. கல்லியாணத்திற்கு முன்பு வரை அவளுக்கு ரப்பர் மரம் என்றால் என்னவென்று தெரியாது. பழங்களை போல ரப்பரும் மரத்தில் காய்க்கும் என்றே அவள் நினைத்து வைத்திருந்தாள். கல்லியாணத்திற்கு பொண்ணு பார்க்கப் வந்த செபாஸ்டின் குடும்பத்தினர் மாப்பிள்ளைக்கு ரப்பர் தோட்டத்தில பால்வெட்டு வேல.. என்று சொன்ன போது அவளுக்கு புரியவில்லை... "எதுக்கு பால வெட்றாங்களாம்...?" என்று அவள் அம்மாவிடம் கேட்டாள்.

ஆரல்வாய்மொழிகாரி..... குலசேகரம் ஆரணிவிளை வாசியான பிறகு அதுவும் ரப்பர் பால்வெட்டுக்காரன் செபாஸ்டினுக்கு பொண்டாட்டியான பிறகு ரப்பருண்ணா எல்லாம் அவளுக்கு அத்துப்படியாகிவிட்டது. கல்லியாணமான புதுசில செபாஸ்டின் திருநந்திக்கரையிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் பால்வெட்டிக் கொண்டிருந்தான். வேலைமுடிந்து மதியம் வீட்டிற்கு வரும் அவனின் உடலிருந்தும், உடையிலிருந்தும், கப்புண்ணு வரும் ரப்பர் நாற்றம்... அவளுக்கு வாந்தி வருவது போல இருக்கும். போகப்போக அந்த நாற்றம் அவளுக்குப் பழகிவிட்டது. ஒரு நாள் அவனிடம் கேட்டாள் "எதுக்கு ரப்பர் பால்வெட்டுண்ணு சொல்றீங்க... ரப்பர் பால யாரும் வெட்டுறதில்லையே.... ரப்பர் மரப் பட்டையைத் தானே வெட்டுறீங்க...?" அவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். பின்பு சொன்னான்.... "உங்க தூய தமிழ்ல அதுக்குப் பேரு ரப்பர் பால்வடிப்பு.. "உங்க தமிழ புரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு எவ்வளவு நாள் ஆகுமோ தெரியல..." அவள் சொன்னாள். அவன் ஹக்...ஹக். ஹ.. என உரக்கச் சிரித்தான். இரவு பக்கத்தில் வந்து கொண்டிருந்தது.

இரண்டு மூன்று நாள்களாக நல்ல மழை. செபாஸ்டின் பால்வெட்டச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த போதுதான் "ஒரு அபிப்பிராயம் செல்லட்டா" என்றான் கமலாவதியிடம்

"என்ன சொல்லுங்க..,"

"எத்தனை நாளைக்குத் தான் இப்படி சம்பளத்திற்கு பால் வெட்டிட்டு இருக்கியது. அதுவும் மழையான பால்வெட்டு இல்ல... சம்பளம் இல்ல... நமக்கும் ரெண்டு கொமரு இருக்கு, அதுக்கு ஏதெங்கிலும் சேத்து வைக்கணும்..... ஒவ்வொருத்தனும் ரப்பர் மரங்களை கொல வெட்டுக்கு எடுத்து நல்லா பணம் சம்பாதிச்சிட்டு இருக்கானுவ... ஒண்ணுயில்லாம கிடந்த கிழக்குவிளை குமரசேன் பய கூட எங்கெங்கெயோ கொல வெட்டுக்கு மரங்களை எடுத்து... இப்பபாரு... கையில் 5 பவுன் பிரேஸ்லெட் என்ன... சுமோ காரு என்ன.... பெஞ்சாதிக்க கழுத்தில வடம் போல தாலிச்சரடு என்ன... வெலசயில்லியா செய்யுதான்... நமக்கு அது போலயில்லையெங்கிலும் கொறச்சு ரப்பர் மரங்கள கொல வெட்டுக்கு எடுத்து.... செறுதாட்டெங்கிலும் காசு பாக்கணும்...." என்றான்.

"அதுவும் சரிதான்..." என்றாள் அவள்.

சங்கரன்விளை தாமஸின் இருநூறு ரப்பர் மரங்கள் கொலைவெட்டிற்கு வந்தன. அவன் வீட்டுற்கு பக்கம் தான் அந்த மரங்களும் நின்றிருந்தன. செபாஸ்டினும், கமலாவதியும் சென்று மரங்களைக் பார்த்தனர். நல்ல பருமனும், உயரமும் கொண்ட மரங்கள். 2 வருடம் கொலை வெட்டு செய்து பால் வடித்துவிட்டு மரங்களையும் வெட்டி விற்று விட்டு நிலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.
தாமஸ் புதுப்பணக்காரன், ஐம்பத்தைத் தொட்ட வயது. மூக்கின் நுனியிலில் கோபம் நிரந்தரமாய் ஒட்டியிருக்கும் அவனிடம் வியாபாரம் பேசுவது அத்தனை எளிதல்ல. கடும் சொற்கள் சாதாரணமாய் விழும்.

செபாஸ்டின், கமலாவதியை அழைத்துக் கொண்டு மரங்களை விலை பேசப் போனான் அவனிடம்.
"என்ன விலையாக்கும் அண்ணன் எதிர்பாக்குது... ? " செபாஸ்டின் தாமஸிடம் கேட்டான்.
"6 லட்சம் ரூபாய் வேணும்...." தாமஸ் விலை சொன்னான்.
"அது கூடுதலாக்கும்..." செபாஸ்டின்
"லே... இதுக்கு மேலயும் வெலக்கி போகும்.. வேணுமிண்ணா எடு" தாமஸ் குரலை உயர்த்தினான்.
"நம்ம கிட்ட அவ்வளவு பணம் இருக்கா..." கமலாவதி செபாஸ்டினின் காதில் கிசுகிசுத்தாள்.
"ஆலோசிக்கண்டாம்... 600 இனம் ரப்பர் மரங்களாக்கும்... எருமை போல பால் குடுக்கும்... தடியும் நல்ல வெலபோகும்.. ஒருவாடு பேரு போட்டி போட்டி வெல கேட்டு வருனும்... எடுத்தா கொள்ளாம்....கொறஞ்சது 3 லட்சம் ரூபாயெங்கிலும் லாபம் கிட்டும்..." தாமஸ் சொன்ன போது செபாஸ்டினால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. அவனுக்குள் சந்தோஷம் கரைபுரைண்டது.
"சரி எடுக்கலாம்" என்றான் செபாஸ்டின்.

"அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வீங்க...?" செபாஸ்டினை சற்று தள்ளி அழைத்துச் சென்று கேட்டாள் கமலாவதி
"உருப்படி இருக்கில்லியா அடகு வைப்பம்." அவளது கழுத்தில் கிடந்த நகைகளைப் பார்த்தவாறு சொன்னான்.
"கொமருகளுக்கு உள்ளது இல்லியா...?" அவள் திருப்பிக் கேட்டாள்.
"எல்லாம் நல்லா நடக்கும்... தைரியமா செய்வோம்..."
"ம்..."
கமலாவதி சம்மதித்தாள்.

தாலிச் சங்கிலியும், இதர நகைகளும் தத்தூட் பைனாஸ்சிற்கு அடகு போயின.

ரங்கள் கைமாறி விட்டன. ஒன்று போல் சீராய் வளர்ந்து நிற்கும் 200 ரப்பர் மரங்கள். ஏறக்குறைய 15 வருடங்கள் பால்கொடுத்த மரங்கள், இரண்டாவது முறையாக பட்டைகள் தடித்து வளர்ந்திருக்கின்றது. பல மரங்களில் ஏற்கனவே ஏற்பட்ட காயங்கள் ஆங்காங்கே முளைத்து கட்டிபோல திரண்டிருந்தன. இத்தனை வருடங்களும் சீராக முறையாக கத்தியின் கூரிய முனைகளைத் தாங்கிய மரங்கள். இனி சீரில்லாமல் நெறியற்று.... தாறுமாறாக... கண்டமேனிக்கு கத்தியின் கூரிய முனைகளை உடலில் ஏற்கப் போகின்றன. கத்தியால் குத்திக் கிழித்தாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு பால் கொடுக்கின்றன. காயங்கள் அவைகளுக்கு புதிதில்லை. ஒரு வகையில் மனிதர்கள் தங்கள் பாத்திரங்களை இந்த மரங்களில் கட்டி வைத்துவிட்டு அவற்றிடம் பிச்சை கேட்கிறார்களோ என்னமோ...! என்ன மனிதர்கள் இவர்கள்! ஒருவன் உழைப்பை முழுமையாக சுரண்டி விட்டு அவனுக்கு சக்தி இல்லையெனும் போது துரத்திவிடுவது போலத்தான்... ரப்பர் மரங்களையும் கடைசியில் குத்திக் கிழித்து காயப்படுத்தி அழவைத்து.. கொன்று விடுகிறார்கள் ! எப்படி பார்த்துப் பார்த்து தண்ணீர் ஊற்றி, உரமிட்டு வளர்க்கப்பட்ட மரங்கள் இவை.... இப்போது ஈவு இரக்கம் இல்லாமல் அதன் மீது கொலை வெறி தாக்குதல். ஆனால் அதுதான் இங்கு உண்மை.. யதார்த்தம்... அதில்தான் பலருக்கு வாழ்க்கை.. வாழ்வு எல்லாம்.

சொபஸ்டின் "இயேசப்பா..." என்று வானத்தை நோக்கி அண்ணார்ந்து பார்த்து விட்டு அந்த நீண்ட பால்வெட்டுக் கத்தியால் ஒரு ரப்பர் மரத்தில் சிலுவை அடையாளம் வரைந்தான். பின் தனக்கு எட்டும் உயரம் வரை மரத்தில் கத்தியைப் பாயவிட்டான். வெள்ளை நிற திரவமாய் ரப்பர் பால் பீறிட்டுக் கொண்டு வந்தது. தாறுமாறாக அங்குமிங்குமாய் பாய்ந்து வந்த பாலை அவன் விரல்களால் நேர்படுத்தி மரத்தில் கட்டியிருந்த சிரட்டை நோக்கி திரும்பி விட்டான். தங்களின் வாழ்வை செழிப்பாக்கப் போகும் அந்த வெள்ளை நிற திரவம் சொட்டுச் சொட்டாய் சிரட்டையில் தேங்குவதைக் கண்ட கமலாவதி பரவசமானாள். தொடர்ந்து அவன் ஒவ்வொரு மரங்களிலும் கத்தியைப் பாயவிட்டான். அவள் தான் ஒவ்வொரு மரங்களாய்ச் சென்று சிரட்டையில் தேங்கிய பாலை சேகரித்தாள். குறுகிய நாள்களிலேயே வேகமாகப் பால் சேகரிக்கப் பழகிவிட்டாள். ரப்பர் தோட்டங்களினுள் குறுகிய தூரத்தில், குறுகிய நேரத்தில் ஒவ்வொரு மரங்களாகச் சென்றுப் பால்வெட்டுவதும், பால் சேகரிப்பதும் ஒரு கலை. அது தேனீக்கள் மலர்களுக்குச் சென்று தேன் எடுத்துவிட்டு கூட்டுக்கு திரும்பும் கலை போன்றது. கமலாவதிக்கு அது அத்துப்படியாகிவிட்டது. முந்தின நாள் பால் சேகரித்தபிறகு சிரட்டைகளில் படிந்திருக்கும் ஒட்டுப்பாலை எடுக்கும் போது விசையாய் கையில் அடித்து விடும். வலியைத் தாங்கிக் கொள்வாள். மழை நாளில் சிரட்டைகளில் தண்ணீரோடு இட்லி போல மிதந்து கிடக்கும் ஒட்டுப்பாலை எடுப்பது படுஅவஸ்தை. உடலில் தண்ணீர் சிந்திவிடாமல் எடுக்க வேண்டும். அழுகிய மாமிசத்தின் நாற்றம் அடிக்கும். இதற்கிடையே மிருகங்கள் போல் வந்து தாக்கும் கொசுக்கள். கமலாவதி தயங்கமாட்டாள். சேலையை தூக்கி இடுப்பில் சொருகி விட்டு வேகமாக செயல்படுவாள். அவள் தான் ரப்பர் பாலை பதப்படுத்தி ஷீட்டாக மாற்றுவாள்... போட்ட முதல் சிறிது சிறிதாக கையில் வந்து கொண்டிருந்தது. சந்தோஷம் தாங்கவில்லை அவளுக்கு.

ஏறக்குறைய ஒரு ஆண்டு கடந்து கடந்து விட்ட நிலையில் தான் நெஞ்சுக்குழியில் ஆசிட் கொட்டியது போன்று அந்த துயரம்... சூறாவளிக் காற்றில் மரங்கள் சாய்வது போல் ரப்பருக்கு விலை வீழ்ச்சி... நாளுக்கு நாள்... படிப்படியாக ரப்பர் விலை குறைந்தது. கிலோவிற்கு இருநூறு ரூபாய்க்கு விற்ற ரப்பர் ஷீட், 100 ரூபாய்க்கும் கீழே வந்தது. செபாஸ்டினுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கமலாவதி கலங்கித் தவித்து நின்றாள். கேரளாகாரனின் தத்தூட் பைனாஸ்சிற்கு அடகு போன நகைகளும், வீட்டில் இருக்கும் இரண்டு திருமண வயதையெட்டிய மகள்களையும் நினைத்து கண்ணீர் பெருகியது அவளுக்கு. இதனிடையே மரங்களில் இருந்து பால்வடிவது கடுமையாக் குறைந்து விட்டது. ரப்பர் ஷீட் விற்கும் விலையில் பால்வெட்டாமலே இருந்து விடலாம் போலிருந்தது செபாஸ்டினுக்கு. மரங்களின் பக்கமே செல்ல அவனுக்கு மனமில்லை. கமலாவதிதான் அவனை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள். அவளும் அவனுக்கு ஒத்தாசையாக அந்த நீண்ட கத்தியை வைத்து தனக்கு எட்டும் உயரத்தில் மரங்களைக் குத்திக் கிழித்தாள்... அவள் உடல் வலித்தது. தளர்ந்துப் போனாள். தங்களுக்காகத் தான் அந்த மரங்கள் கண்ணீர் வடிக்கின்றன என்று நினைத்துக் கொண்டாள்.

இன்னும் ஒரு மாதம் தான் மீதி இருக்கிறது. அதற்குள் மரங்களை வெட்டி விற்று விட்டு நிலத்தை ஒப்படைத்து விட வேண்டும். ரப்பர் ஷீட் விலையும், ரப்பர் தடிகளின் விலையும் தரை தட்டி விட்டது. தரகன்கன் வந்து அடிமாட்டு விலைக்கு ரப்பர் மரங்களை கேட்கின்றனர். எப்படியும் போட்ட முதல்ல 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் வரும். ரப்பர் விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தாத அரசை சபிப்பதா...? தங்களுக்கு மரங்களைத் தந்திருந்த தாமஸை குற்றம் சொல்வதா...? தங்கள் ஆசையில் தான் மண் விழுந்து விட்டதா...? கையில் இருந்த பணத்தையும், நகைகளையும் வச்சிகிட்டு சும்மா இருந்திருக்கலாம்... வலி... ஏமாற்றம்... தோல்வி... புலம்பினாள் கமலாவதி. .

ன்னும் முழுமையாக விடியவில்லை. செபாஸ்டின் விழித்த நிலையிலேயே கட்டிலில் படுத்துக் கிடந்தான். கமலாவதி எழும்பி முகம் கழுவி விட்டு வீட்டை விட்டு கிளம்பி நடக்கத் தொடங்கினாள். இருள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருந்தது. அவள் சிஎஸ்ஐ கோயிலைக் கடந்திருந்த நிலையில் பின்னால் உரசுவது போல் வந்து நின்றது அந்த எம் 80 (எம் எயிட்டி) பைக் . திருப்பிப் பார்த்தாள். கணவன் தான்.
"எங்கப் போறயிண்ணு தெரியும்... சங்கரன்விளை தாமஸ் வீட்டுக்குத் தானே.. ஏறு வண்டியில... சேர்ந்து போவோம்..."

அவள் பின்இருக்கை இல்லாத அந்த எம் 80 யின் பின்னால் அமர்ந்து கொண்டாள்.

அரசமூடு கோம்பையின் டீ கடையில் நல்ல கூட்டம். பால்வெட்டுத் தொழிலாளர்கள், ரப்பர் மரம் முறிக்கும் தொழிலாளர்கள் தான் அத்தனை பேரும். இடம் வலமாக கைகளை உயரமாகத் தூக்கி டீயை ஆற்றிக் கொண்டிருந்தார் கோம்பை. துணைக்கு நின்ற பையன் அவன் அடித்து வைத்த டீ க்களையும், அருகில் தட்டில் இருந்த உண்ணியப்பங்களையும் கடை முன்பு திரண்டு நின்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
செபாஸ்டின் எம் 80 ஐ கடை முன்பு நிறுத்தினான்.
"எறங்கு ஒரு சாயை குடிச்சிட்டு போவம்..."
"இல்ல.. வேண்டாம்..."
"எறங்கு... கொஞ்சம் தெம்பா இருக்கும்..."
அவள் இறங்கினாள்.
"ரெண்டு சாயை ஒன்ணு கடுப்பம் குறைச்சி" என்று சொல்விட்டு
தட்டில் இருந்த இரண்டு உண்ணியப்பங்களை எடுத்து அதில் ஒன்றை கமலாவதியின் கையில் கொடுத்தான்.
பாளையங்கோட்டைப் பழத்தை, மைதா மாவில் பிசைந்து செய்திருந்த உண்ணியப்பம் நல்ல சுவையாக இருந்தது. ஆனால் அதை ரசித்து தின்னும் மனநிலையில் கமலாவதி இல்லை.
"எங்கோட்டாக்கும் காலத்த ரெண்டு பேரும்...?"
டீ கடை கோம்பை கேட்டார்.
"சங்கரன் விளை தாமசுக்க வீட்டுக்கு.... கொறச்சி ரப்பர் மரம் கொலவெட்டுக்கு எடுத்ததுல ஒருவாடு நஷ்டம்... கொறசெங்கிலும் ரூபாயா திருப்பிக் கேக்குலாமிண்ணுதான்...."
அப்போது டீ கப்பை வாயில் வைத்து உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த தெங்குவிளைக்காரன் "க்ளக்" என்று சிரித்ததில் அவன் நாசியில் டீ ஏறிவிட்டது.
"என்னதுக்கு சிரிக்கிறீரு... ?" செபாஸ்டின் அவனிடம் கேட்டான்.
"பணத்தை திருப்பித்தாறது நடக்கிய காரியமா ஓய்... அதுவும் அந்த ஆளு நல்ல மொவன்.. பணத்தை தந்து உங்கள வீடு வரை கொண்டும் விடுவான்.. அவனும் மேற்குவிளை செல்லப்பனுக்கிட்டயிருந்து கொலவெட்டுக்கு மரம் எடுத்ததில நஷ்டப்பட்டு இருப்பாக்கும் என்றில்லியா பேச்சு அடிபடுது.... நீரு அறியாததா..." அவன் வேஷ்டியின் முனையால் முகத்தைத் துடைத்தவாறு சொன்னான்.
"தந்தா...தரட்டும்..." கமலாவதி தான் அவனுக்குப் பதில் சொன்னாள்.
செபாஸ்டின் டீயும், உண்ணியப்பத்திற்குமான காசை கடையில் நின்ற பையனிடம் கொடுத்தான்.

எம் 80 மீண்டும் புகையைக் கக்கிவிட்டு புறப்பட்டது.

மேற்குவிளை செல்லப்பனின் வீட்டின் அருகில் வண்டி சென்ற போது சத்தமிண்ணா அப்படி ஒரு சத்தம். நாய்கள் பெரும் குரலில் குரைத்துக் கொண்டிருந்தன. சங்கரன்விளை தாமஸின் கார் அந்த வீட்டின் கேட்டின் முன்பு நின்று கொண்டிருந்தது. கேட் திறந்து கிடந்தது. எம் 80 ஐ நிறுத்திய செபாஸ்டின், "தாமஸ் இங்க தான் வந்திருப்பாரு" என்று கமலாவதியிடம் கூறியவாறு உள்ளே நுழைந்தான். உள்ளே, அவன் கண்ட காட்சி, அவனை திகிலடையச் செய்தது.
வீட்டு முற்றத்தில் தாமஸூம், செல்லப்பனும் ஒருத்தருக்கொருத்தர் கைகலப்பு செய்து கொண்டிருந்தனர். கூடவே கெட்டவார்த்தைகள்.... ஒரு கட்டத்தில் இருவரும் தரையில் விழுந்து கட்டிப் புரண்டனர். செல்லப்பனின் மனைவியும், மகள்களும்... உச்சக் கட்ட குரலில் அலறிக் கொண்டிருந்தனர். திடீரென்று தாமஸின் பிடியில் இருந்த விடுபட்ட செல்லப்பன் வீட்டுக்குள் ஓடிச் சென்று வெட்டுக் கத்தியை எடுத்து வந்து தாமசை ஆவேசமாக வெட்ட முற்பட்டார். அதிலிருந்து தப்பிய தாமஸ் அந்த வீட்டைச் சுற்றி தலை தெறிக்க ஓடி... அங்கு கிடந்த செடித் தொட்டியில் கால் இடறி விழுந்தான். ஆத்திரம் அடங்காத செல்லப்பன் அவன் கழுத்துக்கு நேராக கொலை வெட்டாக கத்தியை ஓங்கினார். அதற்குள் பின்னாலிருந்து ஓடி வந்த செபாஸ்டின் கத்தியை பலம் கொண்டு பறித்து தூரத்தில் வீசினான்.

தாமஸ் திமிறிக் கொண்டு எழும்பினான்.

"வெட்டுக் குத்து நடத்த வேண்டிய பிராயமா ரெண்டு பேருக்கும்... தள்ளியிட்டு போங்க.... ஓய்..." என்று சொல்லியவாறு இருவரையும் பிரித்து விட்டான் செபாஸ்டின்.

செல்லப்பனை அவனது மனைவியும் மகள்களும் பிடித்து வீடு நோக்கி இழுத்தனர்.
"கொலைவெட்டிற்கு மரம் எடுத்ததில நஷ்டமிண்ணா இப்படி வந்து மெரட்டி தகராறு செய்து தள்ளக்கி விளிச்சா... பணத்தை குடுத்துரணுமா... அவனுக்கு மட்டும்தானா.. எல்லாருக்கும் தான் யாவாரத்துல நஷ்டம்..." என்றவாறு அவர் வீட்டிற்குள் சென்று கதவைத் படாரென சாத்தினார்.
கழன்று போயிருந்த வேஷ்டியை எடுத்து உடுத்திக் கொண்டிருந்த தாமஸை, செபாஸ்டின் கைத் தாங்கலாக பிடித்து அவன் காரில் ஏற்றினான்.


"நீ... வெட்டோத்தியை பறிச்சு எறியெல்லெங்கி வெட்டிப் போடப்பாத்தான் இல்லியாடே...." தாமஸின் குரல் உடைந்திருந்தது.
"கொலவெட்டாக்கும்...." செபாஸ்டின் தலையை ஆட்டியவாறு பதில் சொன்னான்.
கார் வெதுவாய் கிளம்பிப் போனது. செபாஸ்டின் எம் 80 ஐ இயக்கினான்... கமலாவதி பின்னால் ஏறிக் கொண்டாள்.

காலை 10 மணியிருக்கும், செபாஸ்டினின் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. தாமசும், அவன் மனைவியும் அதிலிருந்து இறங்கி நேராக வீடு நோக்கி வந்தனர். செபாஸ்டினும் கமலாவதியும் என்ன ஏதோ என்று விழித்தவாறு நின்று கொண்டிருக்கையில் எடுத்து வந்திருந்த பணப்பொதியை கமலாவதியிடம் கையில் கொடுத்தான்  தாமஸ். "இதில 5 லட்ச ரூபாய் இருக்கு.... எனக்கிட்டயிருந்து கொலவெட்டிற்கு மரம் எடுத்ததில வரக்கூடிய நஷ்டத்தை எடுத்துகிட்டு மீதியக் குடுங்க..." என்றான்.

கமலாவதி பேச்சற்று நின்றாள்.











வியாழன், 14 பிப்ரவரி, 2013

மனோ ரஞ்சன் தாஸ்

அறிவாயா... மனோ
உனது மரணம்
இத்தனை இதயங்களை
கலங்க வைக்குமென்று

அறிவாயா... மனோ
உனது மரணத்தால்
இத்தனை இதயங்கள்
கண்ணீர் வடிக்குமென்று..


பியோதர் தஸ்தயெவ்ஸ்கியையும்
கலீல் ஜிப்ரானையும்
பாப்லோ நெரூடாவையும்
நம் மண்ணில்  
நடமாடவிட்டவன் நீ..

சுதந்திர
பாலஸ்தீனமும்
தமிழீழமும்
உனது பேச்சுப் பந்தியில்
பரிமாறப்படாத நாளேது ?

இந்திய விடுதலை வரலாற்றில்
மறைக்கப்பட்ட வீரர்கள் மீது
உனக்கு ரகசிய
காதல் இருந்தே....

குலசேகரத்தின்
ஒரே கவிஞன் நீ..
உயிர் கசியும் கவிதைகளை
உன்னால் மட்டுமே எழுத முடியும்..

இந்த
அழுக்குச் சமூகத்தின்
அவலங்களுக்கெதிரான
அறைகூவலை
நீ விடுத்துக் கொண்டேயிருந்தாய்..

அரங்குகளில்
உயிருள்ள சொற்களை
உன்னால் மட்டுமே
உலவ விடமுடியும்...

உன் மன அழகைச் சொல்லும்  மனோ..
உன் கையெழுத்து.

பூவுலகின் நண்பன் நீ...
நம் பகுதியில்
மலைகள் உடைக்கப்பட்ட போது
மனம் கலங்கினாய்..
பாறைகள் உடைக்கப்பட்டபோது
பதறித் துடித்தாய்...

செடிகளின் ஸ்னேகிதன் நீ..
உனது செய்கைகளுக்கு
செடிகள் தலையாட்டும்
பூக்கள் புதுப் பிறப்பு எய்தும்..

என்ன செய்வது-ஒரு
பொன்னுலகம் காண பூபாளமிட்ட
உன்னோடு 
பொருளாதாரம் பூசல் செய்துவிட்டது.

அறிவாய்.. மனோ
அறிவாய்...
உனது மரணம்
இத்தனை இதயங்களை
கலங்க வைக்குமென்று...

ஆம். மனோ..
வாழும் போது
மானுட நேசம் கொண்டு வாழ்ந்தவன் நீ...
மனிதனாக வாழ்ந்தவன் நீ..











வியாழன், 17 ஜனவரி, 2013



வேலம்மாவின்  ஆடுகள்

 ரு வாரத்திற்கு மேலாக பெய்து வந்த மழை இரண்டு நாட்களாக சற்ற தணிந்திருந்தது. மழை மங்காரம் இருந்து கொண்டுதானிருக்கிறது. அந்த ரப்பர் தோட்டத்தில் அதிகாலையில்  பால்வெட்டு முடித்த ஆண், பெண், பால்வெட்டுக்காரர்கள் கையில் இரும்பு வாளியுடன் பால் சேகரிப்பில் தீவிரமாய் இருந்தனர். மழை மங்காரம் அவர்களை விரைவாய் செயல்பட வைத்தது. மழை பெய்துவிட்டால் சிரட்டைகளில் வடிந்திருக்கும் பால் முழுவதும் வீணாகிவிடும்.
   ஆடிக்காற்று உலர் கிளைகளை ஒடித்துப் போட்டிருந்தது. பள்ளிக்குச் செல்லாத பதின் பருவத்துப் பெண் பிள்ளைகள் ஒடிந்து கிடந்த காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். தோட்டத்தின் இடையில் பாம்பு போல் நீண்டு கிடந்த மனித காலடித்தடத்திலான வழிப்பாதை தண்ணீரும், சகதியுமாய்க் கிடந்தது.  சகதியில் கால் படாதவாறு எட்டி வைத்து நடந்தாள் வேலம்மா. ஆலஞ்சோலை ஊர்க்காரி வேலம்மா. இரண்டு பெண்பிள்ளைகளின் தாய். கையில் ஒரு  துணிப்பையில் பணம் வைத்திருந்தாள். பேத்தி பிறந்த சந்தோஷம் முகத்தில் இருந்தது.

    'அடகுக் கடைக்கு போய்விட்டு, அப்படியே முறுக்குக்கும், பலகாரத்திற்கும் சொல்லணும்... குழந்தைக்கு ஐந்தாறு உடுப்புகள் எடுக்கணும்...'   அவள் நடையின் வேகத்திற்கேற்ப மன ஓட்டமும் இருந்தது.
  "தள்ளயும்.. பிள்ளயும்.. சொகமா இருக்கா.. ஒரு எட்டு வந்து பாக்கணமிண்ணு நெனச்சேன்... நடக்கல.."
ரப்பர் மரங்களிலிருந்து பால் சேகரித்துக்  கொண்டிருந்த தாசம்மா கேட்டாள்.
  "ம்.. நல்லா.. இருக்கு.."
"எண்ணக்கி வீட்டுக்கு போறாளாம்..?"
"தொண்ணூறு கழிஞ்சாச்சு ... ஞாயிறாச்ச வீட்டுக்கு அனுப்பணும்.."
"ஆடுகளயெல்லாம் வித்தாச்சுண்ணு கேள்விப் பட்டனே.. நல்ல வெல கெடச்சா ?"
"ஆமா.. கெடச்சி..." புன்முறுவலுடன் பதில் சொல்லிக் கொண்டே நடையின் வேகத்தைக் கூட்டினாள் வேலம்மா.
இன்னும் ரெண்டு தோட்டம் தாண்டியாச்சிண்ணா ரோடு வந்திரும். அப்புறம் கடையலுமூடு முக்கு அடகுக் கடைதான்
வேலம்மா பள்ளிப்படிப்பை தாண்டாதவள். ஒவ்வொரு முறையும் ரப்பர் தோட்டங்களை கடக்கும் போதும், கயிற்றில் கட்டாத ஆடுகளாய்  மனசுக்குள் எண்ணங்கள் துள்ளித் திரிந்து கொண்டிருக்கும்.
இந்த ரப்பர் மரங்கள் ஒருவகையில் நடமாடமுடியாத  பசுக்கள்?  வரிசையாய் சீராய் நிற்கும் மரங்கள் தான் எத்தனை அழகு ? சம வாய்ப்புகளும், வசதிகளும் கிடைத்து விட்டால் மனிதர்களும் ஒரே சீராய் வேறுபாடற்றவர்களாய் இருப்பார்களல்லவா...?
 இடையில் சிரட்டைகளுடன் நிற்கும் மரங்கள் பெருமாள் கோவில் பிரகார தீபலட்சுமிகள்  போல் அல்லவா உள்ளன ?
      செல்வமணி பெருவட்டர் தோட்டம் வந்த போது எண்ணம் திசைமாறியது. செல்வமணி பெருவட்டர் தோட்டத்தில பச்சைப் பசேலென செடிவள்ளி படர்ந்து கிடந்தது. எப்பவுமே அப்படித்தான். நல்ல வெயில் காலத்திலேயும் பெருவட்டர் தோட்டத்தில வந்தா ஆடுகளுக்கு  ஒரு கட்டு செடிவள்ளி பறிக்கலாம்.  வேலம்மாவிற்கு  அவளது  ஆடுகள் ஞாபகம் வந்தது. வெள்ளையும், செவலையுமான ஆடுகள், மனக்கண் முன்னே துள்ளிக் குதித்தன. என்ன செய்வது, பேற்றிற்கு வந்த  மகளெ புருஷன் வீட்டுக்கு  அனுப்பணுமே....மேலும் வேகமாக நடந்தாள்.

   கடையலுமூடு முக்கு அடகுக் கடை வந்து விட்டது.
கடைக்குள் நுழைந்தவள்,  அங்கிருந்தவனிடம்  அடகு கார்டை கொடுத்து "உருப்படியை திருப்பி எடுக்கணும்"  என்றாள்.
கார்டை வாங்கிய கடைக்காரன் ரெஜிஸ்டர் புத்தகத்தை எடுத்து கணக்கு பார்த்தான்.
"வட்டியும் மொதலும் சேர்த்து இருபத்தி ஏழாயிரம் ரூபா வருது". கடைக்காரன் சொன்னான்.
துணிப்பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.
பணத்தை வாங்கிய கடைக்காரன் இடது கை பெருவிரலை வாயில் வைத்து எச்சில் படுத்தி எண்ணத் தொடங்கினான். இரண்டு மூன்று  நோட்டுகளை எண்ணியவன், எண்ணுவதை நிறுத்திவிட்டு ரூபாய் நோட்டுகளை தனித்தனியாக பிரித்துத் பார்த்து...
"இந்தப் பணத்தை யார் குடுத்தா..." என்று கலவர முகத்துடன் கேட்டான்.
"என்னவாம்" பதற்றத்துடன் கேட்டாள் வேலம்மா.
"அவ்வளவும் கள்ள நோட்டு"
உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருந்தது வேலம்மாவிற்கு.
கண்கள் சொருகி சுவரோரமாய் சாய்ந்தாள்.

ரண்டு நாட்களாக எழுந்திருக்கவில்லை வேலம்மா.  ஆத்திரமும், அவமானமுமாக இருந்தது. போலீஸ் விசாரணையில் நிறையவே நிலை குலைந்திருந்தாள். அருகில், வேலைக்குச் சென்ற இடத்திலிருந்து திரும்பி வந்த அவளது கணவனும், கைக்குழந்தையுடன் மகளும்  அமர்ந்திருந்தனர். மகப்பேறுக்குப் பின் மகிழ்ச்சியால் பூரித்துக்கிடந்த மகளின்  முகம், வாடிய பப்பாளிப் பழம் போல் மாறியிருந்தது. வேலம்மாவின் கண்கள் குழந்தையைப் பார்த்தபடியே இருந்தன. அது கால்களை உதைத்தவாறு அக்களித்துக் கொண்டிருந்தது.  "ம்மே.. என துள்ளி வரும் அவளது ஆடுகள் தான் அவள் மனக்கண் முன் வந்தன.
ஆடுகளின் "ம்மே.." சத்தம் தான் அவளை தினம்தோறும் அதிகாலையில் எழுப்பும். வெள்ளையும், செவலையுமான ஆடுகள். சுற்றிச் சுற்றியே வரும்.
களியல் பள்ளிக்கூடத்தில்  பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இளைய மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால், வேலம்மாவிற்கு நாள் முழுக்க ஆடுகளின் பாடுதான். புண்ணாக்கு கலந்த தண்ணீர் கொண்டு போனால் தூரத்திலிருந்தே எம்பிக் குதிக்கும், மேச்சலுக்கு கட்டுவது, தளை கொண்டுபோடுவது சீக்கு  பார்ப்பது  என ஆடுகளுடன் கழியும் அவள் பொழுதுகள். அருமனை, குலசேகரம் சந்தைக்கு  சென்றால், ஆடுகள் ரப்பர் காட்டில் தன்னந்தனியே கெடக்கே என்ற பரபரப்பு தான் அவளுக்குள் நிரம்பிக் கிடக்கும். வனப்பகுதியிலிருந்து புலிப்பாய்ச்சலில் வரும் செந்நாய்களிடமிருந்து ஆடுகளை காப்பது பெரும்பாடு. எப்போதேனும் ஆடுகள் "ம்மா... என்று உரத்து சத்தம் எழுப்பினால் வேலம்மாவின் உயிர் கூட்டிலிருக்காது. செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டு விட்டு ஆடுகள் மேயும் இடத்திற்கு ஓடுவாள். ஒரு முறை அப்படித்தான் காட்டுக் கத்தலாக கத்தின ஆடுகள். ஓடிப்போனாள் வேலம்மா, அதற்குள் செந்நாய்கள் இரண்டு ஆடுகளை காவு வாங்கியிருந்தன. ஆடுகளை விற்றுத் தள்ளு என்று தான் சொல்வான் வேலம்மாவின் கணவன். இல்ல.. நிக்கட்டு ஏதாவது ஆத்திரம் அவசரத்துக்கு உதவுமில்லயா.. ஆடுகளைப் பிரிய மனமில்லாமல் பதில் சொல்வாள். இப்போது விற்க வேண்டிய நிர்பந்தம் வந்தது . சிறியதும் பெரியதுமாய்  ஆறு ஆடுகள்.

       அரசாங்க ஆஸ்பத்திரியில் தான் மகளை, பிரசவத்திற்காக சேர்க்க வேண்டுமென்று எண்ணியிருந்தாள் வேலம்மா. 'கொடுத்த' இடத்தில் இருந்து  வந்த முணுமுணுப்பும், நெருக்கடியும் தான், குலசேகரத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவளை சேர்க்க  வேண்டியதாகிவிட்டது.  பிரசவ செலவுக்கும், குழந்தைக்கு அரஞாண் கொடி போடுவதற்கும் மகளின் தங்கக் நகைகளை வாங்கி அடகு வைத்திருந்தாள் வேலம்மா. இப்போது அவளின் நகைகளைப் திரும்பிக்  கொடுத்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஆடுகளை விற்று நகைகளை திருப்பியெடுத்துக் கொடு என்று கோட்டயத்திற்கு கொத்தனார் வேலைக்கு  போகையில் சொல்லிவிட்டுப் போயிருந்தான் வேலம்மாவின் கணவன். ஆடுகளை விற்றபோது கள்ள ரூபாய் தாள்களைக் கொடுத்து ஏமாற்றிவிட்டான் கேரள வியாபாரி. 'ல்லாத்துக்கும் அந்த புரோக்கர் கிழவன்தான் காரணம்'. வேலம்மா விசும்பினாள்...
"புள்ளா நான் சொல்லுதத கேளு"
"எனக்க வீட்டுக்காரருகிட்ட ஒரு வாக்குகூட கேக்கண்டாமா ?"
"இல்ல புள்ளா ஆறு ஆட்டுக்கும் முப்பது ஆயிரம் ரூபா.. இதுக்க மேல ஆரு தருவா.." புரோக்கர் பேசிக்கொண்டிருந்தார்.
"வீட்டுக்காரரு எங்கபோயி" ஆடு வாங்க வந்த கேரள வியாபாரி இடைமறித்துக் கேட்டான்
"கோட்டயத்துல கெட்டடப்பணி... யாவாரி செல்லுல ஒரு போண் போடுமா..? எங்கிட்ட நம்பரு இருக்கு.."
"இது கேரளா செல்லு இங்கயிருந்து அடிச்சா கிட்டாது.."
"புள்ளா குடுக்கியதுண்ணா குடு.. நல்ல வெல. இல்லண்ணா வேற
ஆளுகிட்ட ஆடு நிக்குது" புரோக்கர்   அவசரம் காட்டினார்.
வந்த யாவாரியை விட வேண்டாம். காரியம் நடக்கும். ஏறக்குறைய நல்ல விலைதான். மனதிற்குள் கணக்குப் போட்ட வேலம்மா மறுத்துப் பேசவில்லை.
முப்பது ஆயிரம் ரூபாய் (?) தாள்கள் கைமாறின. ஆடுகள் ஜீப்பில் ஏற்றப்பட்டன. அந்தப் பகுதியில் நெடுநேரம் கேட்டுக் கொண்டிருந்தது ஆடுகளின் அலறல்.
  ஞாயிற்றுக்கிழமை மகளை கணவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வேலம்மாவும் அவளது கணவனும் தவிப்பில் புலம்பிக் கொண்டிருந்தனர்.
   தூரத்தில் எங்கோ காற்றிலிருந்து வந்தது போலிருந்தது அந்த செய்தி. எல்லா நகையும் போட்டு தாயையும், குழந்தையும் அனுப்புவதாக இருந்தா.. அனுப்பினால் போதுமென்று.




செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சை க் கி ள்   பை ய ன்



 அதிகாலைப் பரபரப்பில் இருந்தது குலசேகரம் அரசுமூடு சந்திப்பு.  ரப்பர் மரம் ஏற்றும் பிளாட் லாரிகளில் வாள், கோடாரி, வெட்டுக்கத்தி, வடம், பானை, அரிசி, மரவள்ளிக் கிழங்கு, பான்பராக், பீடிக்கட்டு எடுத்துக் கொண்டு ஆண், பெண் தொழிலாளர்கள் ஏறிக் கொண்டிருந்தனர்.
      "அண்ணா கிழங்கு வாங்கலியா" என்று மரவள்ளிக்கிழங்கு விற்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணும் அவளுக்குப் போட்டியாக கிழங்கு விற்கும் அவளது அண்ணிக்காரியும் அப்பகுதியில் செல்வோரை அழைத்துக் கொண்டிருந்தனர். அடகுக் கடை செட்டியார் அரசுமூட்டுப் பிள்ளையார் கோயிலில் மணி அடித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்
     மரைக்கார் டீ கடையில் எப்போதும் போலவே டீ, சிகரெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது. ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், மண்வெட்டி வெட்டுத் தொழிலாளர்கள் என பலர் கடை முன்பு குவிந்திருந்தனர். பார்சல் டீ வாங்கிச் செல்வோர் குறைவாகத் தான் இருந்தனர்.
    செய்தித் தாள் பார்சல்கள் வந்திறங்கும் 'செல்லப்பா டெக்டைல்ஸ்' வராண்டா காலியாகவே இருந்தது. இன்னும் செய்தித் தாள் பார்சல்கள் வந்து சேரவில்லை. வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினான் கணேசன். சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு "பார்சல் இன்னும் வரலியா" என்று அங்கு அமர்ந்திருந்த சப் ஏஜண்டுகளிடம் கேட்டான். . "வந்திருந்தா இங்க இருக்காதா.. எங்க இறக்கிட்டு இருக்கானுவளோ.." அங்கு அமர்ந்திருந்த இருவரும் சலிப்பான குரலில் சொன்னதைக் கேட்ட கணேசன் பதட்டமானான். அவன் முகம் அந்த அதிகாலையிலும் வியர்த்தது.
கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு மாணவன். கல்லூரிக்குச் செல்லும் முன்பு செய்தித் தாள் விநியோகிக்கும் சைக்கிள் பையன்.. லைன் பாய்.
  பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்த கணேசன், ஏதோ எண்ணை தட்டி காதில் வைத்தான். "சரவணனா.. நான் கணேசன் பேசுறேன் டேய்... பேப்பர் பார்சல் இதுவரை வரல.. இண்ணக்கி செமஸ்டர் பரிட்சை தொடங்குது.. பார்சல் இனியும் பிந்திச்சுன்னா பரிச்சை எழுதப் போவ முடியாது. இண்ணக்கியுள்ள பேப்பரை நீ தான் கொடுக்கணும் வருவியா..?"
"இண்ணக்கி சைமன் அண்ணனுக்க வேனுல கிளியா ஆற்றுவா பள்ளிக்கு வருலாமிண்ணு சொல்லியிட்டேன். நாளைக்கு வேணுமின்னா வரலாம் டேய்." "இண்ணக்கி வேற யாரையாவது கூட்டிட்டு போகச் சொல்லுடே..."
 "சைமன் அண்ணன்கிட்ட பேசியிட்டு ஒன்ன விளிக்கிறேன்." போனை துண்டித்தான். கணேசனுக்கு வயிறு கலங்குவது போல் இருந்தது.
    இதற்குள் பேப்பர் ஏஜன்ட் மகாதேவன் பேப்பர் பார்சில் வந்திறங்கும் பாயின்டுக்கு வந்திருந்தார். மகாதேவன் ரொம்ப காலமாக பேப்பர் ஏஜன்டா இருக்கிறார். பழைய பியூசி காரர், கடும் உழைப்பாளி, வயசுக் காலத்திலயும் அதிகாலையில் வயலுக்குப் போய் 25 மூடு வாழைக்காவது தண்ணீர் இறைத்து விட்டுத் தான் பேப்பர் பாயின்டுக்கு வருவார். பத்துக்கு மேற்பட்டோர் அவரிடம் சப் ஏஜண்டுகளாகவும், சைக்கிள் பையன்களாகவும், 'சைக்கிள் முதியவர்களாகவும்' பணி செய்கின்றனர். அவருடன் யாராவது பேச்சுக் கொடுத்தா இனியெல்லாம் இந்தத் தொழிலை வச்சி நடத்த முடியாது. வேலைக்கு ஆள் கிடைக்கல.. வேலைக்கு வாறவங்களும் வசூல் பணத்தைத் தராம இழுத்தடிப்பு செய்யுறாங்க... என்பார். தினத்தந்தி, தினமணி, தினமலர், தினகரன், தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், மலையாள மனோரமா, மாத்ரூபூமி, கேரளா கௌமுதி என அவரிடம் இல்லாத நாளிதழ்களும், சஞ்சிகைகளும் கிடையாது.
  இருள் மெதுவாக வடிந்து கொண்டிருந்து. கணேசன் நிலை கொள்ளாமால் நின்றிருந்தான். போனை எடுத்து மறுபடியும் சரவணனுக்கு டயல் செய்தான். மறுமுனையில் "நீங்கள் அழைக்க நினைக்கும் வாடிக்கையாளர் எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது" என்று பதில் வந்தது.
   கணேசனுக்கு தேர்வு எழுதப் போகணும், என்ன செய்வதென்று தெரியவில்லை. சுவரோரமாக உட்கார்ந்தான். கணசேன் இரண்டு வருஷமா மகாதேவனிடம், "சைக்கிள் பையனாக" இருக்கிறான். அதிகாலை 4 மணிக்கு பேப்பர் பாயின்டிற்கு வந்து, அவனது லைனுக்கான பேப்பர்களை அடுக்கி எடுத்துக் கொண்டு சந்தாதாரர்களுக்கும் இதர வாசகர்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்பா ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி தினம் அறுநூறு ரூபாய் சம்பளம், நாநூறு ரூபாய்க்கு அதிகமாக டாஸ்மாக் போய்விடும். அம்மா வீட்டைக் கவனிக்கிறாள். தங்கை பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.
      திருவட்டாறிலுள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் அவனுக்கு செமஸ்டருக்கு பதினெட்டாயிரத்து ஐநூறு ரூபாய் பீஸ் கட்டணும். அவனுக்குள் ஒரு கனவு எப்படியாவது பாலிடெக்னிக்ல நல்ல மார்க் எடுத்து சென்னையில ஏதாவது ஒரு கம்பெனியில வேலைக்கு சேரணும். அம்மா தான் சொன்னாள் காலேஜ் பீஸ் கட்ட எங்கிட்ட பணம் இல்ல... காலையில் பால் பாக்கெட்டோ, பேப்பரோ போடப் போ என்று.. அது தான் இரண்டு வருஷமாக பேப்பர் போடுறான். ஏறக்குறைய தான் உழைக்கிற காசுல காலேஜில படிக்கிறேன் என்ற எண்ணம்.. பெருமிதம் அவனுக்குள் இல்லாமல்.. இல்லை. 
     சற்று நேரத்தில் செய்தித்தாள் பார்சல் வண்டிகள் வந்தன. 'மகாதேவன், குலசேகரம்' என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்த பார்சல்கள் இறக்கப்பட்டன. "என்ன... அடிக்கடி இப்படி பிந்தி வாறீங்களே... இதுக்கப் பிறகு நாங்க யாருக்கு பேப்பர் போடுறது ?. விக்காம இருக்கிற பேப்பர யாரு திருப்பி எடுக்கிறா ? இதில நம்மகிட்ட கேட்காம அப்பப்போ 50 பேப்பரு 100 பேப்பருன்னு கூடுதல் அனுப்புறாங்க, எங்க போட்டு விக்கிறது. எடை போட்டு தான் விக்கணும்.. ஆபிஸ் ரூமுல வந்துப் பாருங்க ஒரு லாறிக்கு இருக்கும் அன்சோல்டு."
 "இல்ல அண்ணாச்சி வழியில தக்கலைப் பக்கத்தில ஏதோ காரும், லாரியும் ஆக்சிடன்டாகி ஒரு மணி நேரத்திற்கு மேலா டிராபிக் ஜாம்." "எண்ணக்கும் இப்படித் தான் ஏதோ காரணம் சொல்றீங்க..." இதற்குள் பார்சல்கள் பிரிக்கப்பட்டு, சைக்கிள் பையன்களும், சப் ஏஜன்டுகளும் தங்களுக்கான செய்தித்தாள்களை அடுக்கக் தொடங்கினர். கணேசன் அவனுக்கான செய்தித்தாள்களை அடுக்கி எடுப்பதில் தீவிரம் காட்டினான். "இந்த சப்பிளிமென்டுகளை எதுக்குத் தான் வச்சிருக்காங்களோ... அதுவும் இந்த இங்கிலீஸ் பேப்ருல ஏழெட்டு சப்பிளிமென்டு... சப்பிளிமென்டை வச்சி அடுக்குறதுக்குள்ள அர நாள் போயிரும்." முணுமுணுத்தப்படி சப்பிளிமென்டுகளை அடிக்கிய கணசேனுக்கு கோபமாக வந்தது.
    "இந்த பேப்பர் போடுற தொழிலாளிக்குத் தான் உள்ளதிலேயே சம்பளம் ரொம்பக் கொறவு...கேரளத்திலே பேப்பர் போடுற தொழிலாளிக்கு சங்கம் இருக்கு.. தனி நல வாரியம் இருக்கு.. சட்டப்படியான பாதுகாப்பும் இருக்கு... நம்ம இடத்தில பேப்பர் போடப் போகும் போது ஏதாவது ஆகி... போயிட்டா.. அப்பிடியே போயிட வேண்டியது தான்.. அப்புறம் குடும்பம் தெருவில தான்.." மூத்த தொழிலாளி, தோழர் கந்தசாமி சம்பிளிமென்டுகளை அடிக்கி வைக்கும் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்.
       தோழரே.. நீரு.. சொல்லுதது சரிதான்... நாட்டில் செய்தித்தாளும்.. தீப்பெட்டியும் தானே இப்ப வெலக்கொறைவு..? இந்த தொழில்ல என்ன லாபம் கிடைக்குது..? வாற பேப்பருல விக்காம இருக்கிறது கொஞ்சமா..? ஏஜன்ட் மகாதேவன் தனது ஆதங்கத்தை கொட்டினார். கணேசன் இந்தப் பேச்சையெல்லாம் கவனிக்கிற நிலையில இல்லை. அவன், செய்தித்தாள்களை அடுக்கி எடுப்பதிலும், ஒரு தந்தி, ஒரு கரன் என்று கையை நீட்டுபவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு செய்தித்தாள்களை கொடுப்பதிலுமாக இருந்தான்.
    அதிகாலையில் தூங்கப் பிடிக்காமல் பேப்பர் பாயின்டுக்கு வரும் வயதானவரான தங்கமணி, சப்பிளிமென்டுகளை அடுக்கித் தருவதில் உதவி செய்வதால் கணேசனுக்கு சற்று ஆறுதல். ஆனா தங்கமணி சும்மா இருக்க மாட்டாரு.. வருகிற ஆட்களிடம் வணக்கம் சொல்லி ஏதாவது நாட்டு நடப்பு பேசாம விடமாட்டாரு. அப்பத்தான் அங்கு செய்தித்தாள் வாங்கச் சென்றிருந்த நிருபர் ஒருவரிடம் "நிருபர் தம்பி வணக்கம்" என்று பேசத் தொடங்கி விட்டார். "இந்தப் பையனப் பாத்தீங்களா.. நல்ல.. சொடி... காலையில வீடு தோறும் பேப்பர் போட்டுவிட்டு பாலிடெக்னிக் காலேஜுக்கு போறான். படிக்கிற காலத்தில நாலு காசு சம்பாதிக்கணுமிண்ணு எண்ணம் இருக்குது பாத்தீங்களா... இவனப்பத்தி பேப்பர்ல் போடப்பிடாதா.." அப்போது வராண்டாவில் அமர்ந்து கணக்கெழுதிக் கொண்டிருந்த ஏஜன்ட் மகாதேவன் குறுக்கிட்டார்...
   "பையனுக்கு காசு சம்பாதிக்கணுமிண்ணு எண்ணம் இருக்கு ஆனா நம்ம கணக்குல வரவேண்டிய பணத்தில துண்டு போட்டுக்கிட்டு இல்லியா இருக்கான்." என்றார் கணேசனுக்குப் தான் கொடுக்க வேண்டிய பணம் பத்தித் தான் ஏஜன்ட் பேசுகிறார் என்று புரிந்தது. "முதலாளி... கலெக்சன் பணத்துல கொஞ்சத்தை எடுத்து காலேஜூல பீஸ் கட்டிட்டேன். இந்த மாசக்கடைசியில எல்லாத்தையும் சேர்த்து தந்திருவேன்."
   "நீ சொல்லுதது கன்னித்தீவு கத போலயில்லியாடே இருக்குது?" "தம்பி அப்பா என்ன வேலை செய்யிறாரு". அங்கு நின்ற நிருபர் கணேசனைப் பார்த்துக் கேட்டார். "அப்பா ரப்பர் மரத்தடி லோடு வைக்கப் போகும். அறுநூறு ரூபா சம்பளத்தில நாநூறு ரூபாயாவது டாஸ்மாக் கடைக்குப் போகும்." கணேசனின் கண்கள் கலங்கியது போல் இருந்தது, பதற்றத்திற்குள்ளாகிக் கொண்டிருந்தான்.
   "என்னடே ஒரு மாதிரியாட்டு இருக்கிற?" ஏஜண்ட் கேட்டார் "இல்ல... மொதலாளி.. இண்ணக்கி காலேஜ் பரிட்சை தொடங்குது... நேரம் பிந்தியாச்சி இனி எப்ப பேப்பர் போட்டுக்கிட்டு பரிட்சை எழுதப் போறது?"
   "ஓ.. அப்படியா.. ஒனக்குப் பதிலா யாரையாவது கூட்டிகிட்டு வந்திருக்கலாம்மில்லியா...: "எனக்க லைன் தெரிஞ்ச ஒரு பயல கூப்பிட்டேன். வந்தாம்மில்ல.. இண்ணக்கு உள்ளப் பேப்பரை மட்டும் நாளைக்கு கொடுத்தாப் போதுமா. மொதலாளி ? "
    "பட பட எடுத்துப் போட்டுக்கிட்டு போயிருடே.... இப்போயெல்லாம் ஒரு நாள் பேப்பர் கிடைக்கலயிண்ணா கம்பெனி மொதலாளிக்கு கூட போன் கூப்பிட்டு பேசுறானுவ... நெறய பேரு வீ்ட்டுல காப்பியப் போட்டு வைச்சுக் கிட்டு பேப்பர் வந்தாத் தான் குடிப்பேன்ணு இருப்பாங்க தெரியுமா... ஓடிப்போயிரு... எனக்க கல்லியாண நாள்ள கூட நான் பேப்பர் போட்டுக்கிட்டுத் தான் பொண்ணு கெட்டப் போனேன். " என்றார்.
   அங்கிருந்த அவனை விட மூத்த சைக்கிள் பையன்களின் முகத்தைப் பார்த்தான் கணேசன். இவன் ஏதாவது கேட்டு விடுவான் என்ற எண்ணத்தில் அவர்கள் முகங்களை வேறு பக்கம் திருப்பி வைத்துக் கொண்டிருந்தனர். வேறு வழியில்லை. அடுக்கப்பட்ட செய்தித்தாள்களை சைக்கிள் கேரியரில் வைத்து ரப்பரால் கட்டினான் கணேசன் கேரியர் ஒரு மாதிரியா ஆடியது. 11 ம் வகுப்பில் அரசு கொடுத்த சைக்கிள் அது.
  கணசேன் செல்போனை எடுத்து மணி பார்த்தான் மணி 7 ஆகியிருந்தது.. பேப்பர் போட்டு முடிக்கணுமிண்ணா இன்னும் சரியா இரண்டு மணி நேரம் ஆகும். பதற்றம் மேலும் அதிகரித்தது. சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து இறக்கி ஏற முயற்சித்த போது செல் போன் ஒலித்தது.
   "அண்ணா நான் தங்கச்சி பேசறேன்... பேப்பர் குடுத்து முடிஞ்சா..? பரிச்சை எழுத போகண்டாமா..? பேப்பர் குடுத்தது போதும் வந்துரு.. அம்மா தேடிகிட்டே இருக்கு..." "சரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவேன்.." போனை துண்டித்த கணேசன், எப்படியாவது 9 மணிக்குள்ள எல்லாப் பேப்பரையும் கொடுத்து விட்டா பரிட்சை எழுதப் போய்விடலாம். சைக்கிளை வீறு கொண்டு மிதித்தான்.. வீடு.. கடை, பள்ளிக்கூடம் என செய்தித்தாள்கள் பறந்து சென்று விழுந்தன.
   "தம்பி ஒரு தினமணி கொடுங்க.." 50 ஐ கடந்த ஒருவர் கை நீட்டினார். "தினமணி எக்ஸ்ட்ரா இல்ல... தந்தியோ... கரனோ வேணுமா..?" "எல்லா பேப்பருலயும் ஒரே கொலையும், கொள்ளையும் செய்தியாயில்ல இருக்கு.." "நாட்டுல நடக்குறது தானே போடுவாங்க". 'இந்த பல்லாங்குழி ரோட்டை கிராஸ் பண்ணிப்.... பண்ணி பேப்பர் போடுறது பெரிய கொடுமை.. சைக்கிளை மிதிக்கவா முடிகிறது.... சரிந்து விழுந்து மண்டை அடிபட்டால் அவ்வளவு தான்... இந்த காம்பவுண்ட் கேட்டுகளைத் திறந்து பேப்பர் போடுறது அதவிடக் கொடுமை. இதுலவேற வழியில சைக்களை நிறுத்தி ஒரு தந்தி, ஒரு கரனுன்ணு கேட்பவர்களுக்கு பாக்கி சில்லறை கொடுப்பதற்குள் ஒரு வழியாகி விடுகிறது.' சலித்துக் கொண்டான். ஒரு டிப்பர் லாரி அவனை உரசுவது போல் மின்னல் வேகத்தில் சென்றது.
   'இந்த டிப்பர் லாரிகளுக்கயும், மினி பஸ்ஸூகளுக்கயும் காற்றப் பிடுங்க ஆள் இல்லையா..? கொல வெறியிலயில்லியா ஓட்டுறானுவ...?' வேகங்கொண்டு சைக்கிளை மிதித்தான்... காவல்ஸ்தலம், நாக்கோடு, படநிலம், செருப்பாலூர் என சைக்கிள் போய்க் கொண்டிருந்தது. செருப்பாலூரில் ஐயரின் டீ கடையில் பேப்பரை போட்ட வேகத்திலேயே சைக்கிளில் ஏறினான்.
   "என்ன தம்பி டீ வேண்டாமா...? "இல்ல.. டீ குடிச்சிட்டிருக்க நேரமில்ல.." வழக்கமான டீயையும் வேண்டாமென்று சொல்விவிட்டு சைக்கிளை மிதித்தான். மண்விளை, பாய்க்காடு, கொட்டூர், மலைவிளை என சைக்கிள் கடந்து கொண்டிருந்து. இன்னும் போக வேண்டும்.. அண்டூர்... வெண்டலிகோடு.. என.... அண்டூரில் ஏழெட்டு வீடுகளுக்கு நாளிதழ் போட்டுவிட்டு செல்போனை எடுத்து மணியைப் பார்த்தான், மணி 9 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுக்குள் பதற்றம் மேலும் அதிகரித்தது. வியர்வையால் சட்டை தொப்பென்றாகியது. நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்து விட்டு, மீண்டும் பிரதான சாலையில் சைக்கிளில் ஏறி முன்பை விட வேகமாக மிதித்தான்.

அப்போது தான் அது நிகழ்ந்தது-
      கண்கள் இருள்வது போல் இருந்தது அவனுக்கு, சாலை இரண்டு மூன்றாக விரிந்தது... சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்த முயன்றான். அதற்குள் சைக்கிள், நிலை குலைந்து நடுசாலையில் சரிந்தது. பின்னால் கருங்கல் பாரம் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டெம்போ 5 அடி இடைவெளியில் திடீர் பிரேக் போட்டு நின்றது. செய்தித்தாள் கட்டுடன் கவிழ்ந்து கிடந்த சைக்கிளின் அடியில் கணேசன் உணர்வற்றுக் கிடந்தான். அவன் பாக்கெட்டிலிருந்து சாலையில் விழுந்து கிடந்த செல்போன் ஒலித்துக் கொண்டிருந்து.
       அப்பகுதியில் ஓடி வந்த யாரோ ஒரு இளைஞன் செல் போனை எடுத்து தனது காதில் வைத்தான். "அண்ணா நான் தங்கச்சி பேசுறேன்... இண்ணிக்கி பாலிடெக்னிக் பரிட்சை இல்லியாம்... கொஸ்டின் பேப்பர் லீக்காச்சாம்.. டிவி யில போட்டிருக்கான்.." செல்போனை காதில் வைத்திருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
      கணேசனின் முகத்தில் தண்ணீர் தெளித்து யாரோ ஒருவர் எழுப்பிக் கொண்டிருந்தார்..

செவ்வாய், 6 டிசம்பர், 2011




மு. சுந்தரம் - ஆசிரியருக்கான இலக்கணம்


ஆசிரியர் மு. சுந்தரம் அவர்களைப் பார்த்து வியக்கின்றேன். பேச்சிப்பாறை அரசுப் பழங்குடியினர் உண்டுறைவிட மேல் நிலைப் பள்ளியில் வேதியல் ஆசிரியர் மு. சுந்தரம். திருநெல்வேலிக்காரர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சிப்பாறை பள்ளியில் ஆசிரியராக தொடர்கிறார்.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக அவரை நான் பார்க்கின்றேன். மாணவர் நலன், பள்ளிக்கூட நலன், பிறரோடு நல்லுறவு, ஆழ்ந்த படிப்பு, அறிவு நுட்பம், பேச்சாற்றல், தகவல் பரிமாற்றம், தியாகம், அர்ப்பணிப்பு என்பன போன்ற ஆளுமைகளின் மொத்த உருவம் தான் ஆசிரியர் சுந்தரம்.
பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளது அவரது சிறப்பு. ஆசிரியர் சுந்தரத்தின் பணியைப் பாராட்டி குமரி அறிவியல் பேரவை ஆசிரியர் திலகம் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
குமரி மாவட்டம் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து மாணவர்கள் நலனுக்காக, அவர்களின் உயர்கல்விக்காக அவர் ஆற்றும் பணிகள் அளப்பரியது. 2011 டிச. 6 ல் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை ஆசிரியர் மு. சுந்தரத்திற்கு அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆசிரியர் சுந்தரம் அவர்களை வணங்குகிறேன்.

வியாழன், 1 டிசம்பர், 2011

பேராசிரியர் தியாகசுவாமி


பேராசிரியர் தியாகசுவாமி ஒரு பல்கலைக் கழகம்


பேராசிரியர் தியாகசுவாமி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் 36 ஆண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிவர். தனது வாழ் நாளில் பெரும் பகுதியை கல்விப் பணிக்காகவும், இளைஞர் மேம்பாட்டு நலனுக்காவும் செலவிட்டவர். நடமாடும் பல்கலைக் கழகம் என்ற அறியப்பட்ட இவர், தனது வருவாயில் பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தினார். தனது வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை அமைத்ததுடன், பத்திரிகைகளில் வரும் செய்திகளை தனித்தனி தலைப்புகளாகப் பிரித்து அவற்றையும் தொகுத்து வைத்திருந்தார்.
மார்த்தாண்டம் இலக்கியப் பேரவை அமைப்பை நிறுவி, அதன் தலைவராக இருந்தார். குமரி அறிவியல் பேரவை, போதை தடுப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்பட்டதுடன் ஏராளமான இளையோர் மன்றங்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டுவந்தார். தனது கல்லூரி பேராசிரியர் பணி நாள்களில் விடுப்பு எடுக்காமல் மாணவர் படிப்பு நலனைக் காத்தவர்.
இவரது பணிகளைப் பாராட்டி குமரி தமிழ் எழுத்தாளர் இலக்கியப் பட்டறை தமிழ்ச் சுடர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் இதே அமைப்பு இவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு தமிழ் சிற்பியின் பயணம் என்ற நூல் மூலமாக பதிவு செய்துள்ளது. குமரி மாவட்ட போதை தடுப்பு இயக்க அமைப்பாளர் வேலையன், இவரது பேச்சுக்களையும், சிறுகதைகளையும் தொகுத்து சிந்தனை முழக்கம் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் பதிவுத் திருமணம் என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
ஒரு பேராசிரியருக்கு இலக்கணமாகத் திகழ்ந்துடன், சமூக அக்கறையுடன் எளிமையான வாழ்க்கை நடத்திய இவர், 27 நவம்பர் 2011 ல் இயற்கை எய்தினார். அவர் நம் மத்தியில் நடமாடிய பல்கலைக் கழகம். அவரது மறைவு குமரி மாவட்ட தமிழ் ஆர்வலர்களுக்கும், மனித நேயச் செயல்பாட்டாளர்களுக்கும் பெரும் இழப்பு.

சனி, 26 நவம்பர், 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம்





தம்பி வெட்டோத்தி சுந்தரம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு தொடர் சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். .
படம் தொடங்குவதற்கு முன், இயக்குனர் வி.சி. வடிவுடையான் திரையில் தோன்றி, குமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் ஆனால் இந்த மாவட்டம் தான் அக்யூட்ஸ்டுகளும் நிறைந்த மாவட்டம் என்ற குற்றப் பத்திரிகையை வாசிக்கிறார். அதற்கேற்றாற்போல் படத்தின் கதையும் அமைந்துள்ளது.

அரபிக் கடலின் காலடியில் கிடக்கும் கிராமம் பொழியூர். அங்கு
ஆசிரியர் வேலைக்கான படிப்பு படித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்யும் கதாநாயகன் கரண், அவனுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. அதற்கு அடுத்தப்படியாக போலீஸ் தேர்வுக்கு செல்கிறான். அதுவும் கிடைக்கவில்லை. உள்ளூர் அரிசி கடத்தும் கும்பலைச் சேர்ந்த சித்தப்பு சரவணனுடன் நட்பு ஏற்படுகிறது. அவன் கடத்தல் தொழிலுக்கு அழைக்கிறான். கதாநாயகன் மறுக்கிறான். இதற்கிடையில் உள்ளூர் பஸ்சில் பயணம் செய்யும் போது டிக்கெட் எடுப்பதற்காக எடுத்த ஒரு ரூபாய் நாயணம் நழுவி அதே பஸ்சில் அமர்ந்திருக்கும் கதாநாயகியான கல்லூரி மாணவி அஞ்சலியின் ஜாக்கெட்டுக்குள் புகுந்துவிட, இருவருக்குள்ளும் காதலும் புகுந்துவிடுகிறது.

வேலை கிடைக்காத விரக்தியில் கரணின் நண்பன் தூக்குப்போட்டு தற்கொ லை செய்கிறான். ஒரு கட்டத்தில் சொந்த வீடு ஜப்தி போகும் நிலையில் அதனை மீட்க கடத்தல் தொழிலுக்கு தாவுகிறான் கதாநாயகன். அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம் காதல், கடத்தல், மோதல், மரணம் என விறுவிறு திருப்பங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளின் பிற்பகுதி அல்லது தொண்ணுறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு தொடர் நிகழ்வை திரைப்பதிவாகக் கொண்டுவந்த இயக்குனர் வி.சி. வடிவுடையானுக்கு பாராட்டுக்கள். இந்தப் படம் தான் முழுக்க முழுக்க குமரி மாவட்டத்தைக் கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்ட முதல் படமாக கருதுகிறேன். அலையடிக்கும் பொழியூர் கிராமம் தொடங்கி குமரி மாவட்டத்தில் பல இடங்களில் குறிப்பாக குலசேகரம் அருகே மங்கலம், தோவாளை, மார்த்தாண்டம், களியக்காவிளை என பல இடங்களில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அறிமுக இயக்குனர் வி.சி. வடிவுடையான் தனது முதல் படத்திலேயே தொட்டிருக்கும் கதை மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை ஆகியவை மிகுந்த கவனம் பெறுகிறது. மட்டுமல்ல இது ஒரு ஒரு பட்ஜெட் படம் என்கின்றபோது தனக்குக் கிடைத்த வாய்ப்பை இயக்குனர் நிறைவாய் செய்திருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

எனினும் சில கருத்துகளை பதிவு செய்யாமல் இருக்கமுடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளில் இறுதிப் பகுதி முதல் தொண்ணுறுகளின் மையப்பகுதி வரை வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு மிகமுக்கியப் பிரச்னையாக இருந்தது. மட்டுமல்ல அகஸ்தீஸ்வரம் பகுதியில் வேர்விட்டு கிளைபரப்பிய கொலை வெறி ரவுடிகள், விளவங்கோடு பகுதியில் பன்றிமலை, செண்பகத்தரிசு, பொழியூர் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் வடிப்பு என பல பிரச்சனைகளை, சவால்களை இந்த மாவட்டம் சந்தித்தது.

இதில் அலையடித்துக் கொண்டிருக்கும் பொழியூர் கிராமத்தில் சாராயம் வடிப்பது குடிசைத் தொழில். இதே காலகட்டத்தினை மையமாகக் கொண்டு தான் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகியோரின் காதல் காட்சிகளில் நேசமணி போக்குவரத்துக் கழக பஸ்சில் தொடங்குகிறது. ஆனால் அதே காலகட்டத்தை மையமாகக் கொள்ளமால் படம் தடுமாறுகிறது.

கதாநாயகன் தனது நண்பர்களுடன் அமர்ந்திருக்கும் மங்கலம் பாலத்தின் அருகில் கட்டப்பட்டிருக்கும் பிளக்ஸ் போர்டு, தற்கொலை செய்யும் கரனின் நண்பர் அழுது புலம்பும் பஸ் ஸ்டாண்டில் வந்து செல்லும் தற்காலத்திய பஸ்கள், வில்லன் கோஸ்டியினர் சுமோ காரை வெடி குண்டால் தகர்த்து விட்டு மண் அள்ளிப்போட பயன்படுத்தும் பொக்ளின் இயந்திரம். இதற்கு மேலாக செல்போன்கள். என ஏராளம் காலத்தை மீறி நிற்பவை. கரனுக்கு, அஞ்சலிக்கும் இடையில் ரெமான்ஸ் கட்சிகளைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகளும், குமரி மண்ணில் அதிக இயற்கை வனப்பும் இருக்கையில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்யாமல் விடப்பட்டுள்ளது. குமரி வட்டார வழக்கிலுள்ள அதிகச் சொற்கள் இடம் பிடித்துள்ளன. ஆனால் பாத்திரங்கள், கரன் உள்பட பேசுவது இருவேறு வழக்கு மொழிகளாக தென்படுகிறது.

அரிசி மற்றும் சாராயம் கடத்துவதை மட்டும் காட்டும் இந்தப் படம் பொழியூர் பகுதியில் குடிசைத் தொழிலாக சாராயம் வடிப்பதையும், சாராயத்திற்காக கச்சாப் பொருள்களில் ஒன்றான கருப்புகட்டி வாங்கச் செல்லும் பெண்கள், தங்கள் தாலிச் சங்கிலிகள் உள்பட பொட்டு தங்க நகைகளை கருப்புக்கட்டி வியாபாரிகளின் அடகு வைத்து கருப்புக் கட்டி பெற்றுச் செல்லும் உண்மை நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கலாம்.

எனினும் விறுவிறுப்புடன் உண்மைச் சம்பவம் தொடர்புடைய ஒரு திரைப்படத்தை கொடுத்த வி.சி. வடிவுடையானுக்கும், நேர்த்தியாக நடித்த கதாநாயகன் கரன், நாயகி அஞ்சலி், வில்லன் சிலுவை, சித்தப்பு சரவணன், கஞ்சா கருப்பு ஆகியோரைப் பாராட்டுக்குரியவர்கள். இதில் வில்லன் சிலுவையின் நடப்பு தான் என்னை அதிகம் கவர்ந்தது.

இறுதியாக குமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் அதிகம், இங்கு தான் அக்யூஸ்டுகளும் அதிகம் என்று கூறும் இயக்குனர் வடிவுடையானின் கருத்தில் முரண்படுகிறேன். குமரி மாவட்டத்தில் வரதட்சிணை குற்றங்கள், தற்கொலைகள் அதிகமே தவிர வடிவுடையான் சொல்லும் அர்த்தம் கொண்ட வன்முறை சார்ந்த குற்றங்கள் குறைவு.